

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று `ரங்கா, ரங்கா' என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
ரங்கநாதர் கோயிலில் பங்குனித் தேர்த் திருவிழா கடந்த17-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.நேற்று முன்தினம் நம்பெருமாள்- ரங்கநாச்சியார் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் நேற்று காலை 6.30 மணிக்குதாயார் சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் `ரங்கா ரங்கா' கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 சித்திரை வீதிகளில் வலம்வந்து, மீண்டும் நிலையை அடைந்தது.
தொடர்ந்து தேரிலிருந்து கண்ணாடி அறைக்குச் சென்ற நம்பெருமாள், மீண்டும் மாலை 6 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்தை சேர்ந்தார். அங்கு இரவு 7 மணி முதல் 9 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி, இரவு 10.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சித்திரை வீதிகளை வலம் வந்து படிப்பு கண்டருளி மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு உற்சவமாக இன்று ஆளும் பல்லக்கு நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செ.மாரியப்பன் தலைமையில் ஊழியர்கள் செய்துள்ளனர்.