

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் நகரில் பிரசித்திப் பெற்ற தலசயன பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலில், கடந்த 16-ம் தேதி பங்குனி உத்திர உற்சவம் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையடுத்து, நாள்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா நடைபெற்று வந்தன. இந்நிலையில், உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதில், நிலமங்கை தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் தலசயன பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் என ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.