Last Updated : 26 Jan, 2018 03:09 PM

 

Published : 26 Jan 2018 03:09 PM
Last Updated : 26 Jan 2018 03:09 PM

பிள்ளை வரம் தரும் வளர்பிறை ஏகாதசி விரதம்!

எத்தனைச் செல்வங்கள் இருந்தென்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லை என்றால், எல்லாம் இருந்தும் இல்லாதது போலத்தான்... என்று வருந்துபவர்களைப் பார்த்திருப்போம். அவர்களின் வலி மிகுந்த வார்த்தைகளைக் கேட்டிருப்போம்.  தை மாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் அனுஷ்டித்து, துளசித் தீர்த்தம் பருகி பெருமாளைத் தரிசித்தால், பிள்ளைச் செல்வம் நிச்சயம் என்கிறது புராணம்.

அந்த நகரத்தின் பெயர்... பத்ராவதி. இந்தப் பகுதியை சுகேதுமான் என்பவர் ஆண்டு வந்தார். அவரின் மனைவி சம்பகா, மிகவும் அன்பானவள்.  இவரின் தேசத்தின் வளமைக்குக் குறைவில்லை. விவசாயம் செழித்து வளர்ந்தது. மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடவில்லை. நாட்டின் நாலாதிசையிலும் எப்போதும் விழிப்பு உணர்வுடன் பாதுகாப்பில் வீரர்கள் இருந்தார்கள். ஆகவே திருட்டு, கொள்ளை, கொலை முதலான அட்டூழியங்கள் ஏற்படவில்லை.

அதுமட்டுமா. வரிகள் மேல் வரிகளாகப் போட்டு, மக்களை இம்சிக்கவில்லை மன்னர். எனவே மக்கள், தனம் தானியம் என செழிக்க வாழ்ந்து வந்தார்கள். போதாக்குறைக்கு, எங்கு பார்த்தாலும் அன்னதானக் கூடங்கள் அமைத்து,, வருவோருக்கெல்லாம் உணவு பரிமாறல் நடந்துகொண்டே இருந்தது. கல்விச்சாலைகள் கட்டி வைத்திருந்தார் மன்னர். எனவே  குழந்தைகள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கற்றுக் கொள்வதில் முழுகவனமும் செலுத்தினார்கள்.

‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள்’ என்று வாழ்த்துவோம். கலையாத கல்வி, குறையாத வயது, கபடற்ற நட்பு, கன்றிப் போகாத வளமை, குன்றாத இளமை, பிணியில்லாத உடல், சலிப்படையாத மனம், அன்பு விலகாத மனைவி, தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் இல்லாத கொடை, தொலையாத நிதியம், கோணாத செங்கோல், துன்பமில்லாத வாழ்வு, எப்போதும் இறை பக்தி  ஆகியவற்றுடன் தவறாத சந்தானம் என பதினாறு விஷயங்களைச் சொல்கிறது தர்ம சாஸ்திரம்.

ஆனால் எல்லாம் இருக்கிறது சுகேதுமான் மன்னரிடம்! சந்தான பாக்கியம்தான் இல்லை. சந்தானம் என்றால் குழந்தை. நீண்டகாலமாகவே அவருக்குள் இருக்கிற வருத்தமும் ஆதங்கமும், கவலையும் துக்கமும் தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்பதுதான்!

எல்லா வீடுகளையும் போல், இந்த அரண்மனையில் குழந்தை துள்ளி விளையாட வேண்டாமா. நம் குழந்தையை அள்ளியெடுத்து உச்சி முகர வேண்டாமா. எல்லாவற்றுக்கும் மேலாக, தனக்குப் பிறகு இந்தத் தேசத்தை ஆள்வதற்கு, தேச மக்களைக் காப்பதற்கு, நமக்கும் இந்தத் தேசத்துக்கும் ஒரு வாரிசு வேண்டாமா என்று மனம் புழுங்கித் தவித்தார் மன்னர்.  

இன்னொரு விஷயமும் அவரை  துவளச் செய்தது. ‘பிள்ளை இல்லாதோருக்கு நற்கதி இல்லை’ என்கிறது சாஸ்திரம். இதனால், இன்னும் வருந்தினார். துவண்டார். துடித்தார். கண்ணீர் விட்டார். தனிமையில் எப்போதும்  அழுதபடியே இருந்தார்.

 தன் மூதாதையருக்குச் செய்யும் சிராத்த காரியத்தின் போதும் இன்னும் விசனப்பட்டார். வருத்தத்துடனேயே சிராத்தம் செய்தார். அதனை அவருடைய முன்னோர் பெருமக்களும் துக்கித்தபடியே ஏற்றனர். தன் சந்ததியான மன்னருக்காக, அவருக்கு சந்ததி கிடைக்க வேண்டி, எல்லோரும் ஆசீர்வதித்தார்கள்.

ஒருமுறை, ஓர் வனப்பகுதி வழியே குதிரையில் வந்துகொண்டிருந்தார் மன்னர். அந்த இடத்தில், அழகிய குளம் இருந்தது. கனிகள் வழங்கும் மரங்கள் இருந்தன. நறுமணம் பரப்பும் மலர்கள் பூத்துக்குலுங்கின. ஆஸ்ரமங்கள் அமைத்து முனிவர்கள் தபஸ் முதலான சத்விஷயங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த இடம் ஏகாந்தமாக இருந்தது. மனம் லேசாவது போல் இருந்தது. அங்கிருந்த ஆஸ்ரமத்தையும் முனிவர்களையும் பார்த்தவர், அவர்களுக்கு அருகே சென்றார். அவர்களை விழுந்து நமஸ்கரித்தார்.

அப்படி அவர் நமஸ்கரிக்கும் போதே, மன்னரின் கவலையை முனிவர்கள் உணர்ந்தார்கள். 

‘’முனிவர் பெருமக்களே... நீங்கள் யார்? இங்கே இதற்கு முன்பு உங்களைப் பார்த்ததில்லையே’ என்றார் மன்னர்.

  ‘‘மன்னா! நாங்கள் விச்வே தேவர்கள். மாசி மாதம் வரப் போகிறது அல்லவா. அதையொட்டி பூஜைகளும் தவமும் செய்ய வந்தோம். இன்று ஏகாதசி. வளர்பிறை ஏகாதசி.  உபவாசம் இருந்து  மகாவிஷ்ணுவை  பூஜித்து வணங்கினால், வணங்கிப் பிரார்த்தித்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும். அதாவது ஊருக்கும் நல்லது செய்யும்!. ஆகவே குழந்தை பாக்கியம் இல்லாத நீங்கள், இந்த ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளுங்கள். மகாவிஷ்ணு மனமிரங்குவார். உங்களின் முன்னைவினைகள் யாவும் களைந்துவிடும்’ என்று முனிவர்கள் அருளினார்கள்.

இதைக் கேட்டதுமே, மன்னரின் மனக்கவலைகள் யாவும் பறந்தன. சந்தோஷத்திலும் நிம்மதியிலும்  றெக்கைக் கட்டிப் பறந்தார் மன்னர். அங்கே இருந்த குளத்தில் நீராடினார். உபவாசம் இருந்தார். மகாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தபடியே இருந்தார்.  

விரதம் நிறைவானதும், முனிவர்களை வணங்கி, நமஸ்கரித்தார். குதிரையேறிக் கிளம்பினார். மகாராணியைச் சந்தித்து, நடந்த விவரம் முழுவதையும் சொன்னார். ஏகாதசி விரதத்தையும் வளர்பிறை ஏகாதசியின் மகத்துவத்தையும் விளக்கினார்.

அடுத்த சிலநாளிலேயே மகாராணி சூல் கொண்டாள். பிறகு அழகிய குழந்தை பிறந்தது என்று விவரிக்கிறது புராணம்!  

வருகிற  28.1.18 அன்று ஏகாதசி. வளர்பிறை ஏகாதசி. திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம்  இல்லையே என்று கலங்கித் தவிப்பவர்கள், வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், ஒருபொழுது மட்டும் சாப்பிடுங்கள். முடியாதவர்கள், திரவ உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

விரதம் முடிந்ததும் மகாவிஷ்ணுவை மனதார வேண்டுங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். மகாவிஷ்ணுவின் அருளால், உங்களுக்கும் உங்கள் வம்சத்துக்குமாக, சத்தான ஒரு குழந்தை பிறக்கப் போவது உறுதி  என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x