குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே நேற்று நடைபெற்ற குருத்தோலை பவனியில் பங்கேற்ற  கிறிஸ்தவர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு, சென்னை சாந்தோம் தேவாலயம் அருகே நேற்று நடைபெற்ற குருத்தோலை பவனியில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்

குருத்து ஞாயிறு தினத்தையொட்டி தேவாலயங்களில் குருத்தோலை பவனி, சிறப்பு ஆராதனை

Published on

சென்னை: குருத்து ஞாயிறு தினத்தையொட்டி தேவாலயங்களில் நேற்று நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும்சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக கோவேறு கழுதை மேல் அமர்ந்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது வழிநெடுகிலும் மக்கள் ஒலிவ மரஇலைகளை கையில் பிடித்தவாறு 'ஓசானா ஓசானா' பாடலை பாடியதாகவும் கிறிஸ்தவர்களின் புனிதநூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. குருத்தோலை ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கைகளில் ஏந்திப்பிடித்தவாறு `ஓசானா தாவீதின் புதல்வா' என்ற பாடலைப் பாடியபடி பவனியாக செல்வது வழக்கம்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், புனித வாரத்தின் தொடக்க நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்து ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,தேவாலயங்களில் குருத்தோலை பவனியும், தொடர்ந்து, சிறப்பு ஆராதனையும் நடைபெற்றன.

சென்னை சாந்தோம் பேராலயம், செயின்ட் தாமஸ் இங்கிலீஷ் சர்ச்மற்றும் செயின்ட் தாமஸ் தமிழ் ஆலயம் சார்பில் நேற்று காலை புனிதரபேல் மேல்நிலைப் பள்ளியில் இருந்து பேராலயம் நோக்கி குருத்தோலை பவனியும், தொடர்ந்து பேராலய அதிபர் எம்.அருள்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பல், ஆராதனையும் நடைபெற்றன. இதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் குருத்து ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in