

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி கிரிவீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவுமணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித்தேரில் எழுந்தருளி, கிரிவீதிகளில் வலம் வந்தார். விழாவில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் இன்று (மார்ச் 24) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர்.