

மதுரை: உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா தமிழகத்தில் எம்.பி தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு சித்ரா பவுர்ணமியான ஏப்.23-ம் தேதி நடைபெறுகிறது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவும், அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் உலகப் புகழ் பெற்றது. இத்திருவிழாக்களில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அதற்கான விழா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதேபோல் தற்போது மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்.19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம், கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தொடங்குகிறது.
அதன்படி சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் ஏப்.12ம் தேதி தொடங்கி ஏப்.23ம் தேதி நிறைவடைகிறது. கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19ம் தேதி தொடங்கி ஏப்.28ம் தேதி நிறைவுபெறுகிறது.
இதுகுறித்து அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை ஆணையர் லெ.கலைவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.19ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடுடன் திருவிழா தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து 2-ம் நாள் ஏப்.20ம் தேதி மாலை 6 மணியளவில் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
3-ம் நாளான ஏப்.21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அன்று மாலை 6.10 மணிக்குமேல் 6.25 மணிக்குள் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார். அதனைத்தொடர்ந்து ஏப்.22ம் தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்றிரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் தங்குகிறார்.
முக்கிய நிகழ்வான ஏப்.23ம் தேதி செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.51 மணிக்குமேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீச்சுதல், அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் இரவு எழுந்தருளல் நடைபெறும். ஏப்.24ம் தேதி வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளிக்கிறார்.
அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். ஏப்.25ம் தேதி பூப்பல்லக்கில் எழுந்தருள்கிறார். ஏப்.26ம் தேதி கள்ளழகர் அழகர்மலைக்கு புறப்படுகிறார். ஏப்.27ம் தேதி காலை 10.32 மணிக்குமேல் 11 மணிக்குள் இருப்பிடம் வந்துசேருகிறார். ஏப்.28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாற்றுமுறையுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.