Last Updated : 03 Jan, 2018 09:36 AM

 

Published : 03 Jan 2018 09:36 AM
Last Updated : 03 Jan 2018 09:36 AM

ஜோதிடம் அறிவோம்! 2: இதுதான்... இப்படித்தான்..!

ஒரே தோஷம்... அது சந்தோஷம்தான்!

நானும் ஒரு பெண் என்ற திரைப்படம் நினைவிருக்கிறதா. 1963ம் வருடம் வெளிவந்தது. இதில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். அதில் ஒரு பாடலை, வெறும் பாடலாகச் சொல்லிவிட முடியாது. மிகப்பெரிய தாக்கத்தை மனதுக்குள் ஏற்படுத்திய பாடம் என்று சொல்வதே பொருந்தும். கருப்பு நிறத்தையே கெளரவப்படுத்திய பாடல் அது.

கண்ணா கருமை நிற கண்ணா

உன்னைக் காணாத கண்ணில்லையே ...

கருப்பு நிறம் குறித்த நல்லுணர்வை ஏற்படுத்திய அற்புதமான பாடல் அது. அதுபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்தி செவ்வாய் தோஷம் பாதிப்பல்ல,அது எந்த வகையிலும் பாதிப்பைத் தருவதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம்.

ஜோதிடம் என்பது உங்களை பயம் காட்டி ஒடுக்குவது அல்ல.

ஜோதி என்னும் விளக்கின் உதவியோடு உங்களை வழிநடத்துவதாகவே நினைக்கிறேன்.

இது விழி பிதுங்கச் செய்யும் வழியல்ல. உங்கள் விழியை விசாலப்படுத்தும் வாழ்வை நெறிப்படுத்தும் வழிமுறை!

தோஷங்கள் குறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தோஷங்கள் என்று சிலதைப் பட்டியலிட்டுச் சொன்னேன். இதை நான் சொல்லவில்லை. நிறையபேர் சொல்லி வந்திருக்கிறார்கள். அதேவேளையில் நான் சொல்ல வருவது இதைத்தான்... எந்த தோஷம் இருந்தாலும் கவலை வேண்டாம்... வாழ்க்கையில் ஒரே தோஷம்தான்... அது சந்தோஷம்!

· செவ்வாய் தோஷம்.

· ராகு-கேது தோஷம்.

· சனி தோஷம்.

· ஒரு சில நட்சத்திரங்களுக்கான தோஷம்.

இதுமட்டுமல்ல. இன்னும் இன்னும் பல தோஷங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும். அதாவது, புத்திர தோஷம், களத்திர தோஷம், சயன தோஷம் என்று தோஷங்களுக்குப் பஞ்சமே இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் எந்த வகையில் அணுகுவது, இவற்றில் இருந்து எப்படியெல்லாம் மீள்வது என்பதை முழுமையாக அறிவதே முதன்மையான விஷயம்.

அறிவதிலும் உணர்வதிலும்தான் இருக்கிறது புரிதல். தோஷங்களைப் புரிந்து கொண்டால், தோஷங்களில் இருந்து நிவர்த்தியாவதும் மிக மிக எளிதாகிவிடும்.

இப்போது செவ்வாய் தோஷம் குறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு எனச் சொல்லியிருந்தேன். உண்மையில், இந்த ஐந்து லக்கினம் மற்றும் ராசிக்கு செவ்வாய் தோஷம் வேலையே செய்யாது.

மிதுனம் கன்னிக்கு மட்டுமே தோஷம் உண்டு. அதற்கும் சில விதிவிலக்குகள், தோஷ நிவர்த்தியாதல் என இருக்கின்றன. அப்படியென்றால், விடுபட்டிருக்கும் மற்றவையான ரிஷபம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசி மற்றும் லக்னத்துக்கு செவ்வாய் தோஷம் விலக்கு உண்டா என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.

இங்கே ஒரு விஷயம்... இந்த ஐந்து ராசிக்கும் லக்னத்துக்கும் செவ்வாய், நட்பு கிரகம். எனவே செவ்வாய் தோஷ விலக்கு உண்டு. இதைத்தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

தோஷம் தருகின்ற செவ்வாயை குரு பார்த்தாலோ சேர்ந்தாலோ, சனி பார்த்தாலோ சேர்ந்தாலோ செவ்வாய் தோஷம் ஒருபோதும் வேலை செய்வதில்லை.

மேலும், கேதுவோடு இணைந்தாலும், செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை

அதுமட்டுமா? செவ்வாய் திசை கடந்தவர்கள் அல்லது செவ்வாய் திசையை இனியும் அனுபவிக்க முடியாதவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

அதாவது, செவ்வாயின் நட்சத்திரங்களான மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், பிறக்கும் போதே செவ்வாய் திசையில்தான் பிறக்கிறார்கள். அதாவது எந்த வருடமோ, எந்த நாளோ, எந்தக் கிழமையோ... இந்த வருஷமோ... அடுத்த வருடமோ... எப்போது பிறந்தாலும் இந்த நட்சத்திரக்காரர்கள், செவ்வாய் திசையில்தான் பிறப்பார்கள், பிறக்கிறார்கள் என்பதே ஜோதிட சாஸ்திரக் கணக்கு!

ஆக, பிறக்கும்போதே செவ்வாய் திசை இருப்பதால், அவர்கள் செவ்வாய் திசையைப் பார்க்கவே மாட்டார்கள். எனவே அவர்களுக்கு செவ்வாய் தோஷம் வேலை செய்யவே செய்யாது.

அதுமட்டுமல்ல, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், திருமண வயதிற்கு முன்பே செவ்வாய் திசையைக் கடந்து விடுவதால் அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி, சதயம், குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதியில் பிறந்தவர்கள், செவ்வாய் திசையை எதிர்கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்களுக்கும் செவ்வாய் தோஷம் வேலை செய்வதில்லை.

இவ்வளவு தோஷ நிவர்த்திகள் இருக்கும்போது, செவ்வாய் தோஷத்திற்கு யாரும் முக்கியத்துவம் தரத் தேவையே இல்லை என்பதே உண்மை.

நான் அறிந்த வகையில், செவ்வாய் தோஷம் என்பது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ இருக்கிற தம்பதி, சுமார் ஆயிரம் பேரைப் பார்த்தால் கூட, அதாவது ஒருவருக்கு செவ்வாய் தோஷம், இன்னொருவருக்கு (கணவன் அல்லது மனைவி) இல்லை எனும் வகையில் பார்த்த போது, எந்த பாதிப்பும் இல்லாமல், ஒரு பிரச்சினை கூட இல்லாமல், அந்நியோன்யமாகவும் பேரன், பேத்திகளோடு நீண்ட ஆயுளுடனும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என் தாத்தா வரதராஜூலு எனக்கு தாத்தா மட்டும் அல்ல. ஜோதிடக் கலையில் எனக்கு குருவும் கூட. சிறுவயதில் இருந்தே அவர் சொல்லித் தந்த ஜோதிடப் பாடங்கள், ஒவ்வொன்றும் வேதங்கள். செவ்வாய் தோஷம் உள்ள பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் அவர்கள் செவ்வாய் தோஷமே இல்லாதவர்களைத் திருமணம் செய்து கொண்டு, மிகப்பெரிய வளர்ச்சியுடனும் கருத்தொருமித்த நிலையிலும் சகல ஐஸ்வரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்லுவார். அவர்களில் நிறையபேர், எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததற்கு, செவ்வாய் தோஷம் பற்றி நீங்கள் எடுத்துச் சொன்னதே காரணம் என்று சொல்லி, வணங்கி, ஆசி வாங்கிவிட்டுச் செல்வார்கள்.

செவ்வாய் தோஷம் குறித்துச் சொல்லும்போது, தாத்தா நினைவுக்கு வரவே, இதைச் சொன்னேன். அவ்வளவுதான்.

சரி... அப்படியானால், செவ்வாய் தோஷத்தால், ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி எவரேனும் கூறும்பட்சத்தில் நிச்சயமாக, உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். அந்த பாதிப்போ வேதனையோ... அது செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்டது அல்ல! கோச்சார கிரகங்களால், குறிப்பாக, ராகு மற்றும் சனி பகவானால் உண்டாகும் சில பாதிப்புகளே காரணம்! மேலும் தசா புத்தியையும் கணக்கில் கொள்ளவேண்டும். ஆக, செவ்வாயால் தோஷமில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.

மிதுனம் மற்றும் கன்னி ராசி மற்றும் லக்னக்காரர்களுக்கு மட்டுமே, செவ்வாய் தோஷ வீரியத்தை நான் மேலே குறிப்பிட்டபடி விலக்குகள் உண்டா என ஆராய்ந்து, அதிலும் தோஷ நிவர்த்தி ஆகவில்லையென்றால் மட்டுமே, செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய் தோஷக்காரர்களை மணம் புரிந்து கொள்ளவேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்கள் ஜாதகத்தில், ராசிக்கட்டத்துக்கு பக்கத்தில் நவாம்சம் என்றொரு கட்டம் உண்டு. அதில், செவ்வாயின் நிலை, குருவின் நிலை, சுக்கிரனின் நிலை ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நவாம்சக் கட்டத்தில், செவ்வாய், மேற்கூறிய மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம் ஆகிய இடங்களில் அமர்ந்திருந்தாலும் தோஷத்தின் வீரியம்... அதாவது செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எனவே, செவ்வாய் தோஷத்திற்கு முக்கியத்துவம் தராமல், ஜாதக ரீதியான பொருத்தங்களை (கவனிக்கவும்... இங்கு நான் நட்சத்திர ரீதியான பொருத்தத்தைச் சொல்லவில்லை) கவனித்து திருமணங்களைச் செய்தாலே, மனமொத்த தம்பதியாக நீடூழி வாழ்வார்கள்.

என்ன நண்பர்களே... செவ்வாய் தோஷம் என்பது தோஷமே இல்லை என்பது புரிகிறதுதானே.

இன்னும் இன்னும் விளக்கங்கள் இருக்கின்றன. செவ்வாய் என்பவர் யார், செவ்வாய் பற்றி அறிவியல் தரும் உண்மைகள் என பல விஷயங்களை இன்னும் பார்க்கலாம்.

செவ்வாய் பகவான் என்பவர் யார்?

பரத்வாஜர் ரிஷிக்கும் தேவகன்னிகைக்கும் நர்மதை ஆற்றங்கரையில் பிறந்தவர் என்றும் ரிஷியாலும் தேவகன்னிகையாலும் அதாவது தாய்தந்தையால் கை விடப்பட்டு, பூமா தேவியால் வளர்க்க பட்டவர் செவ்வாய் பகவான் என்றும் கூறப்படுகிறது.

அதேசமயம், செவ்வாய் பகவான் பற்றி இன்னொரு கதையும் உள்ளது. அதை அடுத்து பார்ப்போம்.

இந்தத் தொடரின் அடுத்த அத்தியாயம் வரும் திங்களன்று 8.1.18 அன்று வெளிவரும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x