Last Updated : 21 Dec, 2017 09:15 AM

 

Published : 21 Dec 2017 09:15 AM
Last Updated : 21 Dec 2017 09:15 AM

குருவே... யோகி ராமா..! 21: ஆணவம் அழித்த அண்ணாமலை!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் கிரிவலம் அவ்வளவாகத் தெரியவில்லை. பெளர்ணமி வந்துவிட்டால், எங்கிருந்தோ எண்பது நூறுபேர் வருவார்கள். கிரிவலம் செல்வார்கள். கிரிவலம்னா... என்று கேட்டவர்களே அதிகம். கிரி என்றால் மலை. மலையைச் சுற்றி வலம் வருவது என்று விளக்கம் தந்தார்கள். இப்படி எவருக்கும் தெரியாததாலேயே அந்தக் காலத்தில் கிரிவலம் என்றாகிவிடாது.

இப்படி கிரிவலம், மக்களிடையே பிராபல்யம் அடைந்ததற்கு எது காரணம். யார் காரணம். தெரியவில்லை. அது, முக்கியமும் இல்லை. இங்கே இப்படித்தான். இறை சாந்நித்தியம் என்பது இப்படித்தான் தடாலெனக் கிளம்பும். ஊற்றெனப் பீரிட்டு வரும்.

திருவண்ணாமலை எனும் புண்ணியபூமியில், ஆண்டாண்டு காலமாக கிரிவலம் உண்டு. மலையைச் சுற்றி வலம் வரும் வழிபாடு எந்தக் காலத்திலிருந்தோ இருக்கிறது. அந்த மலையே சிவம் என்பதும் புராணம் சொல்லும் உண்மை. மலையைச் சுற்றி வருவது, சிவபார்வதியைச் சுற்றி வருவதற்கு இணையானது என்கிறது திருவண்ணாமலை மகாத்மியம்.

கார்த்திகை தீபமும் இவ்விதம்தான். இன்றைக்கு வரை, மலையுச்சிக்குச் செல்ல பாதைகளில்லை. அப்படியெனில் அந்தக் காலத்தை நினைத்துப் பாருங்கள். அப்போதும் மலையேறி இருக்கிறார்கள். கார்த்திகையில், மலையில் தீபமேற்றியிருக்கிறார்கள். ‘அண்ணாமலையானுக்கு அரோகரா’ எனக் கோஷமிட்டு, சிவனை வழிபட்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு, பெளர்ணமி தோறும் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் முக்கியமான ஊர்களில் இருந்து, கூடுதல் பேருந்துகள் வசதி செய்யப்பட்டிருக்கின்றன. கார்த்திகை தீபத் திருநாளிலும் இப்படித்தான். மலையளவுக் கூட்டம், தெரு முழுவதும் கூட்டம். சாலை முழுவதும் கூட்டம். தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டம். லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டம்.

திருவண்ணாமலை எனும் மலைக்க வைக்கும் அதிசயங்கள் கொண்ட க்ஷேத்திரம், மக்களிடையே மெல்ல மெல்லப் பரவியது. மலையும் மலைக்குக் கீழே அண்ணாமலையார் கோயிலும் அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள ஊரும் என அழகிய கட்டமைப்புக் கொண்ட எல்லோருக்கும் பிடித்த ஊராகிப் போனது திருவண்ணாமலை.

சூட்சுமத்தை சூட்சுமத்தால் மட்டுமே அறிய முடியும். சூட்சும சக்திகள் கொண்ட மலையை, அண்ணாமலையை, திருவண்ணாமலை பூமியை, சூட்சுமங்களை ஞானக்கண்ணால் பார்த்தறியும் சித்தபுருஷர்கள், உணர்ந்தார்கள். சிலிர்த்தார்கள். அந்த சக்தியின் உன்னதத்தை, ஊருக்கு வந்து, திருவண்ணாமலையில் இறங்கி தெரிந்து கொள்ளவில்லை. இருந்த இடத்தில் இருந்தே, உணர்ந்து கொண்டார்கள். உள்ளம் சிலிர்க்க மலைத்துப் போனார்கள். ஊரையே பார்க்காமல், ஊருக்கே வராமல், திருவண்ணாமலையின் பிரமாண்டம், அந்த பிரபஞ்ச சக்தியின் பிரமாண்டம் உணர்ந்தார்கள். சித்தமெல்லாம் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும் சித்தபுருஷர்களுக்கு இதெல்லாம் கைவந்தக் கலை. மெய் வந்தக் கலை.

திருவண்ணாமலை என்றில்லை. இன்றைக்குக் கோயில்கள் இருக்கும் இடமெல்லாம், ஒருகாலத்தில் சித்தர்கள் அறிந்து தபஸ் செய்த க்ஷேத்திரங்களே என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அவர்கள் அந்த இடத்தின் வல்லமையை, எல்லாம் வல்ல இறைச் சக்தியை உணர்ந்துதான் அந்த இடத்தில் ஆஸ்ரமம் அமைத்தோ, பர்ணசாலை அமைத்தோ தவத்தில் ஈடுபட்டார்கள். அப்படி தவமிருந்த இடத்துக்கு இன்னும் சாந்நித்தியம் கூடியது.

சக்தி மிக்க ஆலயத்து இன்னும் இன்னும் சக்தியூட்டத்தான் கும்பாபிஷேகம் முதலான வைபவங்கள் நடைபெறுகின்றன. சடங்கு சாங்கியங்கள் நிகழ்கின்றன. வேத மந்திரங்கள், யாக ஹோமங்களும் அந்தச் சக்தியைக் கூட்டுவதற்காகத்தான் நடத்தப்படுகின்றன. சித்தபுருஷர்களால் அறிந்துணரப்பட்ட அந்தத் தலம், சித்தபுருஷர்களின் வருகையால், கடும் தவத்தால், இன்னும் இன்னும் சக்தியைக் கூட்டிக் கொண்டே போனது. சாந்நித்தியத்தைப் பெருக்கிக் கொண்டே போனது.

அது மலையா. ஆமாம். சக்தி மிக்க மாமலையா. ஆமாம். அந்த மலைதான் சிவமா. சர்வ நிச்சயமாக! ஆணவம் வந்துவிட்டால் எதையும் அறிய முடியாது. ஆணவம்தான் சத்ரு. ஆணவம்தான் அழிவுக்கு ஆரம்பம். கர்வம் இருக்கும் இடத்தில், கடவுள் ஒருபோதும் வரமாட்டார். அருளமாட்டார்.

இந்த கர்வம் என்பது, ஆணவம் என்பது, செருக்கு என்பது மனிதர்களாகிய நமக்கு இருக்கக் கூடாது என்பதல்ல. அந்த ஆண்டவனுக்கும் இருக்கக் கூடாது என்பதே தர்மசாஸ்திரமும் ஞானநூல்களும் போதிக்கின்ற இயற்கை விதி. புராணங்கள் அனைத்திலும் ஏதோவொரு இடத்தில், ஆணவம் அழித்ததும் ஆணவத்தால் அழிந்ததுமே அதிகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

அப்படிக் கடவுளரின் ஆணவத்தையே அழித்த தலம்... அழித்துத் திருத்திய தலம்... திருவண்ணாமலை. ‘நான்’ எனும் கர்வம் அழிப்பதே ஆன்மிகத்தின் முதல் படி. எதற்கெடுத்தாலும் ‘நான்... நான்’ என்று அலட்டிக் கொள்பவர்கள், ஆண்டவனின் அருள் பெற்றதாகச் சரித்திரமே இல்லை.

சித்த புருஷர்கள் அனைவரும் ‘நான்’ எண்ணத்தைத் தொலைத்தவர்கள். ‘நான்’ எனும் செருக்கினை அழிக்கவே, போக்கிக் கொள்ளவே சித்தபுருஷர்களானார்கள். ‘நான் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா’ என்று கேட்டவர்களும் அவர்களின் ராஜ்ஜியங்களும் மண்ணோடு மண்ணாகியிருக்கின்றன. ஆணவத்தையும் கர்வத்தையும் துறந்தாலே, ஆசைகள் அற்ற நிலை வந்துவிடும். அதைத்தான் மகான்கள் உணர்ந்து வாழ்ந்தார்கள்.நமக்கும் போதித்து அருளினார்கள்.

ராம்சுரத் குன்வர், புதுச்சேரியில் இருந்தெல்லாம் திருவண்ணாமலை நினைப்பிலேயே இருந்தார். சுவாமி அரவிந்தரின் போதனைகளும் அவரின் வாழ்க்கை நெறிமுறைகளும் ராம்சுரத் குன்வரை இன்னும் பக்குவப்படுத்தின. அந்தப் பக்குவமே, சித்தபுருஷர்கள் எத்தனையோ பேர் சூட்சுமத்தால் உணர்ந்த பூமியை, புண்ணிய பூமியை உணரச் செய்தது. உணர்ந்து சிலிர்க்க வைத்தது.

மலையே சிவமென இருந்து சக்தி மிக்க ஆட்சியைச் செலுத்தும் அருள்பூமி... சித்தபுருஷர்கள் பலரின் தவத்தால், இன்னும் இன்னும் சாந்நித்தியை வெளிப்படுத்திய, வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அந்தப் புண்ணிய பூமி... யோகி ராம்சுரத்குமார் எனும் யோகியை, ஞானியை, மகானை, தன்னுள் ஆட்கொண்டது. இப்போதைக்கு அவர் ராம்சுரத் குன்வராகவே இருந்தார். அவரின் தேடல் இன்னும் வீரியம் அடைந்தது.

பிரம்மாவின் கர்வத்தையும் மகாவிஷ்ணுவின் ஆணவத்தையும் அழித்தெடுத்த பூமி அது.

அந்தப் புராணத்துக்குள் செல்வோம். மலையே சிவமென விஸ்வரூபமெடுத்த சிவனின் மகாசக்தி வெளிப்பட்ட சரிதம் அது!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

-ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x