Last Updated : 27 Jan, 2018 02:24 PM

 

Published : 27 Jan 2018 02:24 PM
Last Updated : 27 Jan 2018 02:24 PM

குருவே... யோகி ராமா..! 45: ஏழு நாள்... ஏழு இரவு... ஏழு பகல்!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

இறை தேடல் என்பது பேரவஸ்தை. அதேசமயம், பேரானந்தம். இந்த இரண்டும் ஒரே விஷயத்தில், இறை தேடலில் கிடைப்பதுதான் உலக விந்தைகளிலும் விந்தை. அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த இறை தேடல்... அப்படி இரண்டுமானது. ஆனால் ஒரு விஷயம்... இங்கே பேரவஸ்தையானது ஒரு கட்டத்தில், பேரானந்தத்துடன் இணைந்து விடுகிறது. இதுவும் அதிசய நிகழ்வுதான். ஆச்சரிய உணர்வுதான்!

ஆனந்தாஸ்ரமம், அமைதி குடிகொண்டிருக்கும் அற்புதமான இடம். பப்பா ராம்தாஸ் சுவாமிகள் கிருஷ்ணாபாய் மாதாஜியுடன் சேர்ந்து, ஆனந்தாஸ்ரமத்தை நிறுவினார். 1931ம் வருடம் முதல் இன்றைக்கும் இயங்கி வருகிறது ஆஸ்ரமம்.

ஆனந்தாஸ்ரமம்... பெயருக்கேற்றாற் போலவே, ஆனந்தம் தவழும் ஆஸ்ரமமாக, ஆனந்தத்தை வழங்கும் ஆஸ்ரமமாகவே அமைந்திருக்கிறது. அங்கே வருவோருக்கெல்லாம் எப்போதும் உணவு வழங்கப்பட்டது. இன்றைக்கும் அப்படியே உணவு பரிமாறுகிறார்கள்.

அதேபோல், தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அன்பையே ஆசீர்வாதமாக வழங்கி அருளினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

‘இறைவனின் நாமத்தை உச்சரிப்பது போல் எளிய வழி வேறில்லை. அதிலும் குறிப்பாக, ராம நாமத்தை உச்சரிப்பது போன்ற விஷயம் எதுவுமில்லை. அது அவ்வளவு எளிமை மிக்கது. அந்த எளிமையான ராம நாமத்தின் மூலம், நமக்குக் கிடைக்கிற ஆனந்தம் அளவிட முடியாதது’ என்பதையே எல்லோரிடமும் வலியுறுத்தி வந்தார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

அதுமட்டுமா. அப்படிச் சொல்லி வந்ததன்படியே வாழ்ந்து காட்டினார் அவர். ராமநாமத்தைச் சொல்லியபடியே இருந்தார் சுவாமிகள்.

‘உலக வாழ்வில் ஈடுபடுங்கள். அந்த உலக வாழ்வின் சுகதுக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மனைவி, குழந்தைகள், வீடு, வாசல், வேலை, சம்பாத்தியம், பொழுதுபோக்கு, உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் என்றெல்லாம் எல்லோரைப் போலவும் எப்போதும் போலவே இருங்கள். தவறில்லை. இப்படி கிரகஸ்தருக்கு உண்டான சகல கடமைகளிலும் கேளிக்கைகளிலும் இருந்தாலும் அமைதியையும் ஆனந்தத்தையும் பெறுவதற்கு ராம நாமம் ஒன்றே வழி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். புரிந்து செயல்படுங்கள். ராமநாமத்தை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்பதையே தன்னுடைய தாரக மந்திரமாக, தத்துவமாக, போதனையாக, அறிவுரையாக, ஆலோசனையாக, அருளாசியாக வழங்கிக் கொண்டே இருந்தார். சொல்லியபடியே இருந்தார்.

ஆனந்தாஸ்ரமத்துக்கு இதனாலேயே மக்கள் ஆர்வத்துடன் வரத் தொடங்கினார்கள். அவரின் போதனைகளைப் பெறுவதற்காகவே, நிறைய பேர் வந்தார்கள். பப்பா ராம்தாஸ் சுவாமிகளின் ஆசீர்வாதத்துக்காகவே எங்கிருந்தெல்லாமோ வந்தார்கள் .

‘கடவுளைச் சரணடைதலே வாழ்வின் பூரணத்துவம். அப்படி இறைவனைச் சரணடைவதுதான் அறிவுடைமை. நம் செயல்கள் என்று இங்கு ஏதுமில்லை. நம்முடைய செயல்கள் என்பவையெல்லாம் இறைவனின் செயல்களே! இதனைப் புரிந்து கொண்டோமானால், நம் மனம் பக்குவம் அடைந்துவிட்டது என்று அர்த்தம். பிறகு புரிந்து, உணர்ந்து, தெளிந்து சரணடைதல் நோக்கி நாம் பயணிக்கத் தொடங்கிவிட்டால், ஒரேயொரு சக்திதான் எல்லாமாக விளங்குகிறது என்பது உள்ளிட்ட பரப்பிரம்ம விஷயங்கள் மிக எளிதாகப் புரிந்துவிடும்’’ என்று அறிவுறுத்தினார் பப்பா ராம்தாஸ் சுவாமிகள்.

அவர் விளக்குகிற விதத்திலும் சொல்லுகிற பேச்சிலும் அன்பு பெருக்கெடுத்திருந்தது. ஆகவே அவரை எல்லோரும் பப்பா சுவாமிகள் என்று அழைத்தார்கள். பப்பா என்றால் அப்பா என்று அர்த்தம்! அன்பர்கள் அனைவரும் பப்பா ராம்தாஸ் சுவாமிகள் என்றே அழைத்தார்கள்.

ராம்சுரத் குன்வரையும் பப்பா ராம்தாஸ் சுவாமிகள் அன்புடனும் ஆதுரத்துடனும் அரவணைத்தார். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டார் பப்பா ராம்தாஸ்.

’ராம நாமம் சொல். இடைவிடாமல் ராமநாமத்திலேயே இரு. சொல்லிக் கொண்டே இரு’ என ராம்சுரத் குன்வரிடம் அறிவுறுத்தினார். அருள் வழங்கினார். அதையடுத்து ராம்சுரத் குன்வர், ராம நாமத்திலேயே மூழ்கினார்.

மூழ்கினார் என்று ஒற்றை வார்த்தையில் எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அப்படி உள்ளே மூழ்கிப் போக, மிகப்பெரிய விகசிப்பு அவசியம். அங்கே உள்ளொளி பரவுதல் மிக மிக முக்கியம். நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு, அத்தனை சாத்தியமில்லை அது!

உள்ளே பல மாற்றங்களை உணர்ந்தார் ராம்சுரத் குன்வர். கிட்டத்தட்ட ஏழு நாட்கள்... ஏழு இரவுகள்... ஏழு பகற்பொழுதுகள் என ராமநாமத்திலேயே மூழ்கிக் கிடந்தார். அங்கே... சுயம் அழிந்தது. பேரண்டம் இன்னும் விஸ்வரூபமாக, நின்றது. அந்தப் பேரண்டத்துடன் அவரின் மனம் கலந்தது. இரண்டுபட்டிருந்தது... அங்கே ஒன்றுபட்டுப் போனது.

உள்ளுக்குள் நிறுத்தினாலும் தொடர்ந்து கொண்டே இருந்தது ராமநாமம். நியதிகளுக்குள் கட்டுப்படவில்லை. கட்டுப்பட முடியவில்லை. சுற்றி நடப்பவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ளக் கூடிய மகானாகத் திகழ்ந்த பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு, அப்போது சுற்றி நடப்பவை கூட எதுவும் தெரியாது போயிற்று.

உன்மத்த நிலை என்று இந்த நிலையைச் சொல்லுவார்கள். இன்னொரு கூட்டம் பைத்தியக்காரன் என்று கேலியும் கிண்டலுமாகச் சொல்லும். ஆனந்தாஸ்ரமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து, ரயிலடியிலும் திருவண்ணாமலை கிரிவலப் பாதைகளிலும் சுற்றி வந்த பகவானை பலரும் அப்போது பைத்தியம் என்றுதான் அழைத்தார்கள்.

ஆனந்தாஸ்ரமத்தில், அவரின் நிலை கண்டு பலரும் வியந்துதான் போனார்கள். மலைத்துப் போய் என்ன பேசுவது, என்ன சொல்வது என்றே தெரியாமல் இருந்தார்கள். ஆனால் ராம்சுரத் குன்வர் என்பவரிடம் ஏதோவொரு சக்தி இருக்கிறது என்றும் ஏதோவொரு சக்தியானது இப்போது உள்ளே புகுந்துவிட்டது என்றும் பேசிப் பிரமித்தார்கள்.

அது 1952ம் வருடம். ராம்சுரத் குன்வரால் மறக்க முடியாத வருடம். அவர் மட்டுமா? பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானை வணங்கி ஆராதிக்கிற அன்பர்கள் பலரும் மறக்கவே முடியாத வருடம் அது.

இதுகுறித்து, 1952ம் வருடம் குறித்து, பகவான் யோகி ராம்சுரத்குமார் பின்னாளில் என்ன சொன்னார் தெரியுமா. Caylor Wadilngton என்கிற வெளிநாட்டுக் கார அன்பரிடம் முதன்முறையாக என்ன சொன்னார் என்பதை அறிவீர்களா?

பகவான் யோகி ராம்சுரத்குமார் சொல்கிறார்...

'This Beggar is No Mind.

No Thinking.

No Planning.

No Conscious.

No Sense Of Right And Wrong.

No Sense Of Good and Evil.

All Washed away'.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

-ராம் ராம் ஜெய் ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x