Last Updated : 25 Jan, 2018 02:37 PM

 

Published : 25 Jan 2018 02:37 PM
Last Updated : 25 Jan 2018 02:37 PM

வெற்றிவேல் முருகனுக்கு...11: நாட்டார் காவடியின் பெருமைகள்!

நகரத்தார் எனப்படும் செட்டிமக்களைப் போலவே செட்டிநாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் நாட்டார் மக்களும் முருக பக்தியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்கள். ஒருகட்டத்தில், இவர்களும் பழநிக்கு பாதயாத்திரையாகச் செல்லத் தொடங்கினார்கள்.

இன்றைக்கு இவர்களில் பெரும்பான்மையான அன்பர்கள் பழநி பாதயாத்திரையாகச் செல்கின்றனர். அதேசமயம், காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து என 200க்கும் மேற்பட்ட காவடிகளை எடுத்துக் கொண்டு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

வழிநெடுக, ஒவ்வொரு இடங்களில், காவடிக்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன. முருக வழிபாடுகள் நடைபெறுகின்றன. பஜனைகளும் பாடல்களும் அமர்க்களப்படுகின்றன. முக்கியமாக, அன்னதானமும் செம்மையாய் நடந்து வருகின்றன. இவற்றையெல்லாம் இப்போது ஒருங்கிணைத்து அனைவரையும் வழிநடத்திச் செல்கிறார் துரைசிங்கம். கழனிவாசல் சுப்ரமணி, கோட்டையூர் சுப. வயிரவன், கண்டனூர் கலையரசு, திருமயம் மலைச்சாமி, பட்டுகோட்டை கருப்பையா ஆகிய அன்பர்களும் இதில் பெரும்பங்கு வகித்து, பாதயாத்திரையை, குறிப்பாக காவடியாத்திரையை செவ்வனே கொண்டு செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘’சுமார் 150லேருந்து 200 வருஷம் வரைக்கும் இருக்கும்னு சொல்லுவாங்க. காரைக்குடிக்குப் பக்கத்துல பள்ளத்தூர்ல, சேது அம்பலம்னு ஒரு ஐயா... வெள்ளிவேலும் சர்ப்பக் காவடியும் எடுத்துக்கிட்டு, பழநிக்குப் பாதயாத்திரையாப் போனார். அடுத்தடுத்து எல்லாரும் அவரோட வழிகாட்டுதலோட போக ஆரம்பிச்சாங்க. இப்ப அவரோட பரம்பரையைச் சேர்ந்த மணச்சை சாமியாடி ஐயா முருகேசன், அந்த வெள்ளிவேலை ஆசீர்வாதம் பண்ணி எங்ககிட்டக் கொடுக்க, சுமார் 200லேருந்து 250 காவடி வரைக்கும் எடுத்துட்டுப் போயிட்டிருக்கோம். நாட்டார் காவடின்னுதான் பேரு. ஆனா, எல்லா சமூகத்து நண்பர்களும் ஒருதாய் வயித்துப் பிள்ளை மாதிரி, ஒண்ணாப் போயி, முருகப்பனைத் தரிசனம் பண்றதை வழக்கமா வைச்சிருக்கோம்’’ என்கிறார் துரைசிங்கம்.

நாட்டார் காவடி சார்பில், நாட்டார் சமூகத்தினர் சார்பில், முருக பக்தர்கள் சார்பில், பழநியில் மலையடிவாரத்தில், வடக்கு கிரி வீதியில், இடம் வாங்கி, ஸ்ரீசண்முக சேவா சங்க நாட்டார் அறக்கட்டளை மடம் ஆரம்பித்து, அதைச் செவ்வனே நடத்திவருகிறார்கள். பாதயாத்திரையாக வரும் பக்தர்களும் காவடி எடுத்து வரும் பக்தர்களும் அங்கே வந்து, தங்கி, பூஜைகளெல்லாம் செய்து, கொஞ்சம் இளைப்பாறுவதற்கான இடமாக இந்த மடம் இருக்கிறது என்கிறார்கள்.

பால் காவடி, பன்னீர் காவடி, சந்தனக்காவடி, புஷ்பக்காவடி, சர்க்கரைக் காவடி என்றெல்லாம் காவடிகளில் பல வகைகள் உண்டு. ஒருகாலத்தில், பலாமரத்தில் இருந்துதான் காவடிகளைத் தயார் செய்வது பெரும்பாலானவர்களிடம் வழக்கமாக இருந்தது. இது பால் சத்துள்ள மரம். இப்போது பலா மரங்கள் இந்தப் பகுதியில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. அதனால், தேக்கு மரங்கள் பயன்படுத்துகிறார்கள். மரத்தைக் கொண்டு காவடி செய்யும்போது, அந்தக் காவடியில் சிலை வேலைப்பாடுகள் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். பிள்ளையார், முருகன், வேல், மயில் சிலைகளெல்லாம் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். காவடியில் இந்தச் சிலைகளைப் பார்க்கவே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும் என்கிறார்கள் கோட்டையூர் பக்தர்கள்.

காவடியில் முக்கிய அங்கம் வகிப்பது... மயில் தோகைகள். குறைந்தது மயில்தோகைகள் ஒருகாவடிக்கு ஆயிரம் குச்சிகளாவது தேவைப்படும். அப்படி ஆயிரம் குச்சிகளைக் கொண்டு, காவடி எடுத்துக் கொண்டு ஆடி வந்தால்தான், மயில் தோகையின் ஆட்டமும் பார்க்க... பிரமிப்பாகவும் சிலிர்ப்பாகவும் இருக்கும்.

மூன்று ஸ்டெப், ஐந்து ஸ்டெப், ஏழு ஸ்டெப் என்றெல்லாம் இருக்கின்றன. காவடி செய்வதற்கு குறைந்த பட்சமாக, சுமார் நான்காயிரம் ரூபாய் செலவாகும். ‘பண்ணங்கு’ எனப்படும் காவடித்துணி, மதுரையில் ஒவ்வொரு அளவுக்குத் தக்கபடி கிடைக்கிறது. சுமார் ஆயிரம் ரூபாயில் இருந்து, பண்ணங்குத் துணிகளை வாங்கலாம்.

அதேபோல, ஒரு மயில்தோகைக் குச்சி, 2 ரூபாய் 50 பைசா. எப்படியும் மயில்தோகைக் குச்சிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆக மொத்தத்தில், சிற்ப வேலைப்பாடுகளுடன் நல்ல தரமான காவடி செய்யவேண்டும் என்றால், எப்படியும் 7 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்கிறார் துரைசிங்கம்.

நாட்டார் காவடிக் கூட்டமும் பக்தர்களின் ஆட்டம்பாட்டமும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் என்கிறார்கள் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

இதேபோல், காரைக்குடி என்றில்லாமல், ராமநாதபுரம், பரமக்குடி, காளையாகோவில், மானாமதுரை, மதுரை, அருப்புகோட்டை, கமுதி, விருதுநகர், ஈரோடு தாராபுரம், திருச்சி, மணப்பாறை, விராலிமலை என பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூசத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே பாதயாத்திரை கிளம்பிவிடுவார்கள்.

இதோ... அடுத்த வாரம் 31ம் தேதி தைப்பூசத் திருநாள். இந்நேரம் பல ஊர்களிலும் பாதயாத்திரை அன்பர்கள், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா எனும் கோஷங்களுடன் யாத்திரையைத் தொடங்கியிருப்பார்கள்.

- வேல் வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x