Last Updated : 20 Dec, 2017 04:39 PM

 

Published : 20 Dec 2017 04:39 PM
Last Updated : 20 Dec 2017 04:39 PM

குருவே... யோகி ராமா..! 20: மலையே அக்னி... மலையே சிவம்!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

ஒவ்வொரு தலங்களுக்கும் ஓர் பெருமை உண்டு. ஒவ்வொரு தலங்களுமே சூட்சும சக்திகளால், நிறைந்திருப்பவை. அங்கே, சக்தியும் சாந்நித்தியமும் குடிகொண்டிருக்கும். குடியிருந்து ஆட்சி செய்யும்.

கொண்டாட்டங்கள் நம்மை எப்போதுமே ஈர்க்கக் கூடியவை. மிகப்பெரிய திருவிழாவாகட்டும்... பக்கத்து வீட்டில் நடக்கிற காதணி விழாவாகட்டும்... கொஞ்ச நேரத்திலேயே அந்த சந்தோஷம் நம்மையும் தொற்றிக் கொள்ளும். நாமும் அந்தக் குதூகலத்துக்குள் கலந்துவிடுவோம்.

கொண்டாட்டம் என்றில்லை. சோகங்களும் அப்படித்தான். அக்கம்பக்கத்தில் நிகழ்ந்திருக்கிற ஒரு சோகம், நமக்குள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிட விடாமல் செய்யும். தூங்காமல் தவித்திருக்க வைக்கும். பார்ப்பவரிடமெல்லாம், புலம்ப வைத்துக் கொண்டே இருக்கும்.

இதுவொரு உணர்வு. இந்த உணர்வுக்கு, மனதின் எண்ண ஓட்டங்கள் காரணம். மன ஓட்டத்தை நிர்ணயிப்பது, சுற்றியிருக்கிற எண்ண அலைகள். அந்த அலைகள் தரும் அதிர்வு, எதிரில் நிற்பவரின் பேச்சைவிட, செயலை விட ஆகப்பெரிய சக்தி கொண்டது. ஏனெனில், உருவமுள்ள நம்மை விட, உருவமற்ற அதிர்வலைகளுக்கு ஆயிரம் மடங்கு சக்தி உண்டு.

புதுச்சேரியில்... ஸ்ரீஅரவிந்தரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த ராம்சுரத் குன்வருக்குள், திருவண்ணாமலை திருவண்ணாமலை திருவண்ணாமலை என்ற நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது. அங்கே போக வேண்டும் என்று உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருந்தது.

வடக்கே இருந்த ராம்சுரத் குன்வருக்கு, தெற்குப் பக்கம் என்னவெல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது. தெரியவும் இல்லை. ஒருகட்டத்தில், தெற்குப் பக்கம் பற்றிய சிந்தனை வரும் போது, அவருக்குத் தெரிந்த ஒரே பெயர்... சுவாமி அரவிந்தர். அதனால்தான், அந்த சாது ‘தெற்குப் பக்கம் போ’ என்று சொல்ல, இவர் புதுச்சேரிக்கு வந்தார். அரவிந்தரின் ஆஸ்ரமத்துக்குள் அடியெடுத்து வைத்தார். அவரைத் தரிசித்தார். அரவிந்தர் எனும் மகானை நமஸ்கரித்தார்.

அங்கே, ஆஸ்ரமத்தில் இருந்த நாட்கள், ராம்சுரத் குன்வருக்குள் இன்னும் அமைதியையும் நிதானத்தையும் தெளிவையும் கொடுத்தன. இந்த அமைதி கொடுத்த ஆழ்நிலையும் நிதானம் தந்த பொறுமையும் தெளிவு கொடுத்திருந்த தேவையும் ஒன்றிணைந்து... அவரை தனக்குள் இன்னும் கலக்கச் செய்தது. அப்படி இரண்டறக் கலந்ததால், உள்மனதில்... திருவண்ணாமலை வந்து உட்கார்ந்து கொண்டது.

அதுவரை... திருவண்ணாமலையே போனதில்லை ராம்சுரத் குன்வர். திருவண்ணாமலை கருப்பா சிகப்பா என்றுகூட தெரியாது அவருக்கு! நீள அகலத்துடன் இருக்கிற ஊரா... சிறிய கிராமமா..., மிகப்பெரிய வணிகர்களும் விவசாயிகளும் நிறைந்த பூமியா... என்றெல்லாம் தெரியாது அவருக்கு. ஆனால் திருவண்ணாமலை போகவேண்டும் என்கிற நினைப்பு உள்ளே ஓடிக் கொண்டே இருந்தது.

திருவண்ணாமலை. மலையும் மகேசனும் நிறைந்திருக்கிற பூமி. புண்ணிய பூமி. மலை, அண்ணாமலையார், மக்கள் என வரிசையுடன் நேர்க்கோட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற அற்புதமான தலம்.

மலையென்றால் வெறும் மலை அல்ல. பிரமாண்டமான மலை. அக்னி மலை. பஞ்ச பூத திருத்தலங்களில், இது அக்னி க்ஷேத்திரம்.

இங்கே, மலைதான் அக்னி. அக்னியே ஜோதி. ஜோதியே சிவம். மலையும் சிவம். அக்னியும் சிவம். ஜோதியும் சிவம். மண்ணும் நமசிவாயம், மலையும் நமசிவாயம்.

மனித உடல் பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவானது. எனவே, நாம் பஞ்சபூதத் தலங்களைத் தரிசிப்பது நம் அகத்துள் உறையும் ஆண்டவனைப் புறத்தில் தரிசிப்பதற்கு ஒப்பானது. புண்ணியம் நிறைந்தது!

இயற்கையின் இணையற்ற சக்திகளாய் விளங்கும் பஞ்ச பூதங்களான ஆகாயம், நீர், மண், காற்று, நெருப்பு ஆகியவற்றில், உலகில் உறைகின்ற உயிரினங்களின் இன்றியமையாத தேவைகளான ஒளியையும், வெப்பத்தையும் ஒருங்கே வழங்குவது நெருப்பு! அளவில்லா அருமை பெருமைகள் கொண்ட அக்னியைக் குறிக்கும் பஞ்ச பூதத் திருத்தலம் திருவண்ணாமலை!

காசியில் தொலைத்தால் புண்ணியம், கங்கையில் குளித்தால் புண்ணியம் என்றொரு சொல் உண்டு. காசிக்குச் சென்றால், எதையேனும் விட்டுவிட வேண்டும் என்பது ஐதீகம்.

எதையேனும் என்று சொல்லிவிட்டதால், நாம் கத்தரிக்காய் சாப்பிடுவதையும் உருளைக் கிழங்கு சாப்பிடுவதையும் விட்டுவிட்டு வருவோம். காசிக்குப் போனேன். எனக்குப் பிடிச்ச கொத்தவரங்காயை விட்டுட்டு வந்தேன்‘ என்று சொல்பவர்களைப் பார்த்திருக்கலாம். கொத்தவரங்காய் மாதிரி காய்களோ, மாம்பழம் முதலான கனிகளோ விட்டுவிட்டேன் என்பார்கள்.

ஆக, காசியில் தொலைத்தால், விட்டுவிட்டால் புண்ணியம். கங்கை எனும் புண்ணிய நதியில், குளித்தாலே புண்ணியம். சோழ தேசத்தில் இருக்கிற திருவாரூர் க்ஷேத்திரத்தை, பிறக்க முக்தி என்று போற்றுகிறார்கள். அந்தத் தலத்தில், பிறந்தாலே புண்ணியமாம். அந்த மண்ணில், பிறந்துவிட்டாலே நல்லகதி கிடைத்துவிடுமாம். மோட்சம் கிடைத்துவிடுமாம். அதனால்தான் பிறக்க முக்தி என்று ஆரூரைச் சொல்லிவைத்தார்கள்.

இந்தத் திருவண்ணாமலை? மலையே சிவமென, சிவமே மலையெனத் திகழும் திருவண்ணாமலை, ஒப்பற்ற பூமி. தன்னையே தொலைத்து, ‘நான்’ எனும் அகந்தையையும் கர்வத்தையும் நமக்குள்ளிருப்பதை, நமக்குள்ளிருந்து அழித்துவிடுகிற அளவற்ற, நிகரற்ற க்ஷேத்திரம்.

தர்சனாது அப்ரஸதசி ஸ்மரணாது அருணாசலம் காசியாந்த் மரணாம் முக்திஹி ஜனனாத் கமலாலயே! என்கிறது வேத ஸ்லோகம்.

அதாவது, அப்ரஸதசி என்று தில்லையை, தில்லையம்பதியை, சிதம்பரத்தைச் சொல்கிறது வேதம். அப்பேர்ப்பட்ட சிதம்பரத்தில் தரிசனம் செய்தால் முக்தி நிச்சயம். காசியில் இறந்தால் முக்தி கிடைப்பது, மோட்சம் கிடைப்பது உறுதி. கமலாலயம் என்றால் திருவாரூரைக் குறிக்கும். ஜனனம் என்றால் பிறப்பது. திருவாரூரில் பிறப்பதே முக்தி என்கிறது இந்த ஸ்லோகம்.

திருவண்ணாமலை...

நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

‘நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை’ என்று சொல்லி வைத்திருக்கிறது வேதம்.

நினைத்தாலே முக்தி திருவண்ணாமலை எனும் புண்ணிய பூமியை, நினைத்துக் கொண்டே இருந்தார் ராம்சுரத் குன்வர்.

அந்த அக்னி மலை... இன்னொரு மகானை, ஞான ஒளியை, மகா யோகியை அங்கே அழைத்துக் கொள்ள அதிர்வலைகளைப் பரப்பியது. அது... ராம்சுரத்குமாரைத் தொட்டது. உள்ளே அந்த எண்ணம் வலுப்பெற்றது. மலையென வளர்ந்து கொண்டே இருந்தது, அந்த நினைப்பு.

திருவண்ணாமலை... திருவண்ணாமலை... திருவண்ணாமலை!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x