Last Updated : 17 Jan, 2018 01:38 PM

 

Published : 17 Jan 2018 01:38 PM
Last Updated : 17 Jan 2018 01:38 PM

ஆண்டாள் யார்னு தெரியுமா? - 2 பக்திக்கு வழிகாட்டி... ஆண்டாள்!

ஸ்ரீமந் நாராயணனே பரம புருஷன்! புருஷன் என்ற பதத்திற்கு வீரம், பராக்கிரமம், தேஜஸ், தயை முதலான குணங்களை உடையவன் என்றெல்லாம் பெரியோர் விளக்கம் அளித்துள்ளனர். அத்தனை பெருமை மிகுந்த பரமபுருஷனையே தன் புருஷனாக அடைந்த ஆண்டாள், பக்தி மார்க்கத்தின் உரைகல்; உதாரண மனுஷி. நமக்கெல்லாம் வழிகாட்டி என்று போற்றிக் கொண்டாடுகிறார் திருச்சி குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலின் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார்.

’’பரமபுருஷனான எம்பெருமாளைப் போற்றித் துதிப்பதன் மூலமே நாம் உய்யமுடியும் என ஆழ்வார்கள் பக்தி மார்க்கத்தை நமக்குக் காட்டியருளியுள்ளனர். திருக்கோயில்களிலே அர்ச்சாரூபமாக எழுந்தருளி சேவை சாதிக்கும் எம்பெருமாளுக்கு பலவிதமான உபசார கைங்கர்யங்களைச் செய்வதாலேயே நாம் இந்தப் பிறவியில் இருந்து விடுபடலாம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக, ஆழ்வார்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். அப்படியாக... மிக எளிய முறையில் பக்தி செய்யச் சொல்லிக் கொடுத்த மகராசி... ஆண்டாளைத் தவிர யாராக இருக்கமுடியும்?

ஆகமவிதிப்படி முறையாக ஆராதிக்கப்படும் கோயில்களில், திவ்யமங்கள விக்ரஹ ஸ்வரூபராக எழுந்தருளி அருள்புரியும் எம்பெருமாளுக்கு, ஆகம முறைப்படியே ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பே கோயில்களில் வழிபாடுகள் நடைபெற்று வந்திருப்பதை ஒவ்வொரு ஆழ்வார்களும் அந்தந்த திவ்ய தேசப் பெருமாளை பாடிப்பரவசம் அடைந்திருப்பதில் இருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.

தொன்றுதொட்டு நடைபெறும் இந்த வழிபாடுகளுக்கு, அந்தக் கால அரசர்களும் வேண்டியதைத் தாராளமாகச் செய்து திருக்கோயில்களை கலைக்கோயில்களாக மட்டுமின்றி, சமுதாய ஒற்றுமை சார்ந்த கூடமாகவும் நிர்வகித்தார்கள்.

எம்பெருமாளை ஆராதிக்கும் அர்ச்சகர் முதல் சந்நிதி கைங்கர்யம் செய்பவர்கள், திருமடப்பள்ளியில் அமுது படைப்பவர், மாலை கட்டி, நாகஸ்வரம் இசைப்பவர், பேரீ வாத்தியம், எக்காளம், சின்னம் முதலான இசைக்கருவிகள் இசைப்பவர்கள், வஸ்திர சோதனை செய்பவர்கள், தீப்பந்தம் ஏற்றுவோர் என பலதரப்பட்ட மக்களும் சேவை செய்யும் அதே நிலையில், பெண்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருந்தது. எம்பெருமாள் திருவீதியுலா வரும் சமயத்தில், ஏகாந்த மண்டபம் சேரும்போது, கும்பதீபம் ஏற்றி, உபசாரம் செய்வது ஆகம முறையில் ஒன்று! இதனை நடனமாடியபடி எம்பெருமாளைச் சுற்றி வலம் வந்து, அவருடைய கைங்கர்யத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெண்ணானவள், ஆசனத்தில் வைக்க, அதற்கு சிறப்பு ஆராதனைகள் செய்து, அதனை அர்ச்சகர் எம்பெருமாளுக்குக் காட்டி ஆராதனம் செய்வார். இதையே திருவந்திக்காப்பு என்கிறோம்.

இவை, பல ஆலயங்களில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. பின்வரும் காலங்களில், பல இடர்பாடுகளால் இந்த முறை நசிந்துவிட்டன. இந்தக் கைங்கர்யங்களைச் செய்பவர்கள், அவரவருக்கு உரிய பாரம்பரிய முறைப்படி எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் பார்க்காமல், எல்லோரும் பெருமாளுக்குச் செய்யும் தொண்டாக, தங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதி செய்து வந்தார்கள்.

இப்பேர்ப்பட்ட உன்னதமான பாகுபாடற்ற சமூக அமைப்பு நிலவிய அந்தக் காலகட்டத்தில்தான் வில்லி ஆண்ட பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவடபத்ரசாயி சந்நிதியில் புஷ்ப கைங்கர்யம் செய்யும் அந்தணர் ஸ்ரீவிஷ்ணு சித்தரின் மகளாக, பூமிபிராட்டியின் பூமாதேவியின் அம்சமாக தோன்றினாள் ஆண்டாள்! பூமாதேவி அவள். மகாலக்ஷ்மி அவள். ஆனாலும் எளிய குடும்பத்தில் அவதரித்து, பக்திக்கும் பக்தி செய்யும் மக்களுக்கும் நம்பிக்கையை வலியுறுத்தியவள் ஆண்டாள்.

அனுதினமும் ஸ்ரீவடபத்ர சாயி பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டு, பெருமாளைப் பற்றி பாசுரங்களைப் பாடுவதையே தன் வாழ்க்கையாக, தவமாகச் செய்த பெரியாழ்வாரின் பெண்பிள்ளையான ஆண்டாளைப் பற்றி, தனியே சொல்லவும் வேண்டுமா என்ன?

கண்ணனிடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவளாக தான் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாக பாவித்து, அனுபவித்த அமுதம்... திருப்பாவையாக, நாச்சியார் திருமொழியாக, தமிழ் செய்த புண்ணியமாக நமக்கு வாய்த்தது.

பாவை நோன்புக்கான வழிமுறைகளைக் கூறுவதென்ன, ஆழிமழைக் கண்ணா என்ற பாசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவியல் பூர்வமான ‘ஆழியில் புக்கு முகந்து கொடு ஆத்தேரி’ என்ற வரிகளில் உள்ள அறிவியல்பூர்வமான உண்மை என்ன தெரியுமா?

அந்தக் காலத்தில் பசுக்களை வளர்க்கும் முறையை விளக்கும் சிறுவீடு மேய்தல், கன்றை நினைத்து பசு இறங்கி பால் சோருதல் முதலான கண்முன்னே தோன்றும் நடைமுறைக் காட்சிகள் என்ன, ஆனைச்சாத்தான் பறவைகள், கருடபட்சிகள், மாதவிப்பந்தல் மேல் கூவும் குயிலினங்கள் என நாம் இன்றும் தேடி அனுபவிக்கும் பறவை ஒலிகளின் நிஜ சொரூபங்கள் என்ன... எல்லாவற்றுக்கும் மேலாக நாராயணனே நமக்கே பறைதருவான் என்ற உன்னதமான வைணவத்தின் கருத்தை ஆணித்தரமாகச் சொன்னதுடன் அவனையன்றி வேறொருவரை வரியேன் என்ற திட சிந்தனையுடன் அவனேயே மணாளனாக அடைந்த ஆண்டாள், உண்மையில் மானிட இனத்தை உய்விக்க வந்த, அன்னை அவள் என்று போற்றிக் கொண்டாடுகிறார் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலின் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார்!

ஆண்டாளின் திருவடிகளைச் சரணடைவது ஒன்றே நமது பிறவியை நாம் கடக்கும் உபாயம்! இதனை பெரியவாச்சான் பிள்ளை முதலான மகான்கள் பலரும் நமக்கு உணர்த்தியுள்ளனர். மதுரையை ஆட்சி செய்த சோழ மன்னனுக்கு பரம்பொருள் யார் என சந்தேகம் வந்தது. சபையைக் கூட்டி, அறிஞர் பெருமக்களை விவரம் கேட்டான். பல தத்துவார்த்தங்களையும் அந்தக் காலத்தில் ஆன்ம ஞானம் நிறைந்தவர்கள் நிறைந்த சபையில் விஷ்ணுசித்தர் எம்பெருமாளும் ஆக்ஞைப் படி, நாராயணனே பரம்பொருள் என உணர்த்தினார். பொற்கிழி தானாக விழுந்தது என்பது சரித்திரம்.

அதைத் தொடர்ந்து, பெரியாழ்வாரை, பட்டத்து யானை மீது அமர்த்தி, ஊர்வலம் வரும் போது பெருமாளே வானில் கருடாரூபராகக் காட்சி அளித்ததால், அவருக்குக் கண்பட்டு விடக் கூடுமோ என அஞ்சி, எம்பெருமாளுக்குப் பல்லாண்டு பாடிக் காப்பிட்டார். ஆண்டாளுக்குத் தந்தையாக இருந்ததாலும் இப்படியான பக்தி ஒழுக்கத்தாலும் நெறியாலும் தவத்தாலும் பெரியாழ்வார் என அழைக்கப்பட்டார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சந்நிதியில் நடைபெறும் கற்பூரப்படி ஏற்றச் சேவை சற்று நேரமாகிவிட்டதால், கிடைக்கவில்லை என்று ஒரு வருடம் முழுவதும் தங்கியிருந்து, அரங்கனுக்கு சேவை செய்து , அடுத்த வருடத்தில் உத்ஸவத்தின் போது அந்த சேவையை தரிசித்த மன்னனின் கதையெல்லாம் படித்திருக்கிறோம். அந்தக் கால சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், இந்த உன்னதமான திராவிட வேதமானது பரவிச் செழித்து வளர்ந்தது.

நம் இந்திய தேசத்தை எடுத்துக் கொண்டால், இந்தத் தமிழகத்தைப் போல் மிகச்சிறந்த ஆகம முறையில் வழிபாடுகளோ, ராமானுஜர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நடைமுறைகளோ வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்றே சொல்லலாம்!

அந்த வகையில் மிகவும் உன்னதமான இந்த வழிபாட்டுமுறைகளும் அந்தந்த கோயில்களுக்கே உண்டான நடைமுறை பழக்கவழக்கங்களும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று!

வேதம்... அனைத்துக்கும் வித்து. கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்ற கூற்றின்படி, ஆண்டாள் அருளிய தமிழ் வேதத்தைப் பற்றி அறியாதவர்கள், பேசுவதை நாம் செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை.

நம் முன்னோர் வகுத்த வழியில் நடந்து, நாமும் நம் சந்ததியினரும் அமைதியும் செழுமையும் வளமையும் பெற, ஆண்டாளின் திருவடிகளைப் பற்ரி ஆச்சார்யர்களின் உபதேசங்களைக் கடைப்பிடித்து பெருமாளின் திருவடி பணிவோம். பூமிபிராட்டியான ஆண்டாளை நமஸ்கரிப்போம்! அவளைப் போற்றி, அவளின் வழியிலே பகவானிடம் உண்மையான பக்தி செலுத்துவோம் என்கிறார் பிச்சுமணி ஐயங்கார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x