சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: அம்மனுக்கு மலர்களை சாற்றி வழிபட்டனர்

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சாற்றுவதற்காக நேற்று கோயிலைச் சுற்றி பூத்தட்டுகளை சுமந்தபடி ஊர்வலம் வந்த பக்தர்கள்.படம்: ர.செல்வமுத்துகுமார்
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சாற்றுவதற்காக நேற்று கோயிலைச் சுற்றி பூத்தட்டுகளை சுமந்தபடி ஊர்வலம் வந்த பக்தர்கள்.படம்: ர.செல்வமுத்துகுமார்
Updated on
1 min read

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனுக்கு பூச்சாற்றி தரிசனம் செய்தனர்.

உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய்கள் நீங்கி, சகல பாக்கியங்கள் பெறவும் பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாதகடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பார்.

அதன்படி, நடப்பாண்டு பச்சைப்பட்டினி விரதம் நேற்று தொடங்கியது. வரும் 28 நாட்களும் சமயபுரம் கோயிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம், இளநீர் ஆகியவை மட்டுமே நைவேத்தியமாகப் படைக்கப்படும்.

மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடங்கியதையொட்டி, நேற்று மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நடைபெற்றது. முன்னதாக, நேற்று அதிகாலைவிக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.இதையடுத்து, பூச்சொரிதல் விழா தொடங்கியது.

கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் தட்டுகளில் பூக்களை ஏந்தி தேரோடும் வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களைச் சாற்றி வழிபட்டனர்.

இதேபோல, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மனுக்கு சாற்றினர். மேலும், வெளியூர்களில் இருந்து ஏராளமான அலங்கார வாகனங்களில் பக்தர்கள் பூக்களைஎடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

திருச்சி எஸ்.பி. வி.வருண்குமார் தலைமையில் 1,300 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.மேலும் கண்காணிப்பு கோபுரங்கள்அமைக்கப்பட்டு, போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவக் குழுவினருடன், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in