

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. தெப்பத்தில் எழுந் தருளி அருள்பாலித்த சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை அன்று தொடங்கி 7 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, பார்த்தசாரதி சுவாமிக்கு காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பார்த்தசாரதி சுவாமி நேற்றுமாலை தெப்பத்தில் அருள்பாலித்து, தெப்பக்குளத்தில் 5முறை சுற்றி வந்தார். தொடர்ந்து, ஆண்டாள் மண்டபத்தில் எழுந்தருளி, 4 மாட வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, தெப்பக்குள படிகளில் அமர்ந்து வழிபட்டனர். இவ்விழா 16-ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6.30மணிக்கு நடைபெற உள்ளது. இன்றும், நாளையும் தெப்பத்தில் பார்த்தசாரதி சுவாமி அருள்பாலிக்கிறார்.
4-ம் நாள் ஸ்ரீநரசிம்மர், 5-ம் நாள் ஸ்ரீரங்கநாதர், 6-ம் நாள் ஸ்ரீராமர், 7-ம் நாள் கஜேந்திர வரதராஜர் ஆகியோர் தெப்பத்தில் அருள்பாலிக்கின்றனர். இவ்விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி, துணைஆணையர் நித்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.