Published : 18 Jan 2018 09:54 am

Updated : 05 Feb 2018 11:10 am

 

Published : 18 Jan 2018 09:54 AM
Last Updated : 05 Feb 2018 11:10 AM

வெற்றிவேல் முருகனுக்கு... 3: ஞானகுரு!

3

வேலவனின் திருத்தலங்களில், இந்த வியாழக்கிழமை நன்னாளில், ஞானகுருவாகத் திகழும் , ஞானகுருவாகக் காட்சி தரும் சுவாமிமலையைப் பார்ப்போம். எல்லோருக்கும் ஞானமும் யோகமும் கிடைத்து, தெளிவுடன், மனத்தெளிவுடன் வாழ, முருகப் பெருமான் அருளட்டும்!

நான்காம் படை வீடு, சுவாமிமலை. கோயில் நகரம் கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது சுவாமிமலை. தஞ்சாவூர் - கும்பகோணம் இருப்புப் பாதையில், சுவாமிமலை என்று ரயில்வே ஸ்டேஷனும் உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது சுவாமிமலை.


சுவாமிமலையின் புராணப் பெயர், திருவேரகம். திரு ஏர் அகம். ஏர் என்றால் அழகு என்றும் அர்த்தம் உண்டு. அகம் என்றால் வீடு. படைவீடு. அதாவது அழகிய படைவீடு என சுவாமிமலையை விவரிக்கிறது புராணம்.மேலும் ஏர் என்பது விவசாயத்துக்குப் பயன்படும் முக்கியமான உபகரணம். அப்படி விவசாயம் செழித்து வளரும் சோழ தேசத்தில் உள்ள படைவீடு என்பதைக் குறிப்பதற்காகவும் ஏர் என்ற வார்த்தை சேர்ந்ததாகவும் சொல்வார்கள்.

அதுமட்டுமா. சிரகிரி என்றும் சுவாமிமலைக்குப் பெயர் உண்டு. சிவகிரி என்றும் பெயர் உள்ளது. இங்கே குரு அம்சமாக முருகப்பெருமான் திகழ்வதால், குருமலை, குரு கிரி என்றும், கந்தராசலம் என்றெல்லாம் பெயர்கள் அமைந்துள்ளன.

ஆறுபடையப்பனின் ஆறுபடைவீடும் ஒவ்வொரு ஆதார மையங்களைக் குறிக்கின்றன என்கிறார்கள் முருகனடியார்கள். திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம், திரு ஆவினன்குடி எனும் பழநி - மணிபூரகம், திருத்தணி - விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை, சுவாமி மலை - அனாகதம் என்றொரு விளக்கம் ஞானநூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

உடலில் உள்ள இந்த ஆறுநிலைகளும் செவ்வனே செயல்பட்டால்தான், ஞானம் ஸித்திக்கும். மனமானது தெளிவுடன் இருக்கும். இவற்றையெல்லாம் ஞானகுருவாக இருந்து நமக்கு வழங்குவதற்காகவே, ஆறுபடைவீடுகளும் உடலின் ஆறு நிலைகளை உணர்த்துகின்றன என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்னொரு விஷயம்... சுவாமிமலையின் பெருமைகளில் இதையும் சொல்லவேண்டும்.

குரோசம் என்றால் கூப்பிடுதூரம் என்ற அளவைக் குறிக்கும். கும்பகோணம் எனும் புண்ணிய தலத்தில் கூப்பிடு தூரத்தில் உள்ள தலங்களை, பஞ்ச குரோச தலங்கள் என்று விவரிக்கிறது சுவாமிமலை சரிதம். அந்த வகையில், திருப்பாடலவனம், தாராசுரம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், சுவாமிமலையைச் சொல்கிறார்கள்.

சரி... சுவாமிமலை? அதாவது மலையே இல்லாத சோழ தேசத்தில், பாறைகளே இல்லாத சோழ வளநாட்டில், மலை எப்படி வந்தது? மலையில் கோயில் எப்படி அமைந்தது? செயற்கையாக மலை அமைக்கப்பட்டு, கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது என்பது ஆச்சரியமான, வியக்கத்தக்கதாகவே தோன்றுகிறது.

கோயிலின் கட்டுமானம் வியப்பைத் தருகிறது என்றால், கோயிலின் ஸ்தல புராணமானது இன்னும் மலைக்கச் செய்கிறது.

’நானே எல்லாம்’ என்று கர்வத்துடன் இருந்தார் பிரம்மா. ’படைப்பவனே உயர்ந்தவன்’ என்கிற இறுமாப்புடன் திரிந்தார். அந்த வேளையில் ஒருநாள், கயிலாயத்துக்கு வந்தார். கர்வத்துடன் இருக்கும் பிரம்மாவுக்கு, கந்தனை கவனிக்கக் கூட முடியவில்லை. பார்க்காமலேயே சென்றார்.

இதனால், கடுப்பாகிப் போனார் முருகக் கடவுள். பிரம்மாவை அழைத்தார். ’பிரணவத்தின் பொருள் என்ன’ என்று கேட்டார். சட்டென்று இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை பிரம்மா. ஆடித்தான் போனார். பிரணவப் பொருள் தெரியாததால், ஆடித்தானே போயாகவேண்டும்.

மலங்கமலங்க விழித்தார் பிரம்மா. ‘என்ன... பதில் தெரியாதா’ என்று கேட்டார் கந்தன். ஆமாம் என்று தலையாட்ட, அந்தத் தலையிலேயே நச்சென்று குட்டினார். கூடவே சிறையில் அடைத்துப் பூட்டினார். அதுமட்டுமா... பிரம்மாவின் படைப்புத் தொழிலை தானே ஏற்றுக் கொண்டார்.

எல்லோரும் ஆடிப்போனார்கள். சிவபெருமான் ரொம்பவே கலங்கினார். ‘என்னப்பா இது விளையாட்டு. விடு பிரம்மாவை’ என்றார். சரியென்றார். அதேசமயம், பிரணவத்தின் பொருள் தெரியாமல், சிவனாரும் பிரம்மாவும் இருக்கக் கூடாதே என்பதால், தந்தை சிவனாரை அழைத்தார். கிட்டத்தட்ட மாணவனைப் போல் நின்றார் சிவபெருமான். குரு ஸ்தானத்தில் நின்று கொண்டார் முருகப்பெருமான். தந்தைக்கு, பிரணவத்தின் பொருளை எடுத்துரைத்தார். ஞானகுரு எனும் பெயர் பெற்றார். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்று புகழப்பட்டார்.

மைந்தனின் விளக்கத்தால் நெக்குருகிப் போன சிவன், ‘நீதாம்பா சுவாமி’ என்று சொல்லி நெகிழ்ந்தார். அன்றுமுதல் முருகப்பெருமானுக்கு, சுவாமிநாதன் எனும் திருநாமமும் சேர்ந்துகொண்டது. அந்தத் தலத்துக்கு சுவாமிமலை என்றும் அங்கே இருந்தபடி அருள்பாலிக்கும் முருகனுக்கு, சுவாமிநாதன் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தலபுராணம்!

தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், சிதம்பரம் என பல ஊர்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு சுவாமிநாதன் என்று பெயர் சூட்டியதற்குக் காரணம் இவரே! நிறைய பேருக்கு சுவாமிமலை சுவாமிநாதனே குலதெய்வம் என்றாகிப் போனதையும் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிரம்மாவுக்குக் கூட பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை, வெகு அழகாக தந்தையிடம் சொன்னார். தந்தைக்கே குருவானார். ஞானகுருவானார். இன்றைக்கும் ஞானகுருவாக இருந்து, நம்மையெல்லாம் ஆட்சி நடத்தி வருகிறார், சுவாமி நாத சுவாமி!

சுவாமிமலையின் சிறப்புகளையும் சுவாமிநாத சுவாமியின் பெருமைகளையும் இன்னும் பார்ப்போம்.

-வேல்வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author