

ஸ்ரீவில்லிபுத்தூர்: மகா சிவராத்திரியையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்கு இன்று (மார்ச் 8) முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன.
இக் கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வழுக்குப் பாறை, மாங்கனி ஓடை, மலட்டாறு, சங்கிலிப்பாறை, பச்சரிசி பாறை வழியாக கரடுமுரடான மலைப் பாதையில் 10 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இங்கு தரிசனம் செய்வதற்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியையொட்டி 8 நாட்களுக்கு மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மகா சிவராத்திரியையொட்டி மார்ச் 8 (இன்று) முதல் 11-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
காலையில் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படும் பக்தர்கள், மாலையில் கீழே இறங்கிவிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை வனத்துறை விதித்துள்ளது.
இந்நிலையில், மகா சிவராத்திரி தினமான இன்று மட்டும் இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை, அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.