

அரக்கோணம்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் மலையடிவாரத்தில் பக்தர்கள் ( சேவார்த்திகள் ) தங்கும் இல்லம் கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி நேற்று அடிக்கல் நாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் சோளிங்கர் நகரில் தங்கியிருந்து தினசரி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் இரண்டு, நான்கு அல்லது 6 வாரம் என தங்கி தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்து கின்றனர்.
இவர்கள், தங்குவதற்கு ஏதுவாக இந்து சமய அறநிலையத் துறை மூலம் சென்னையைச் சேர்ந்த மிருநாளினி ஸ்ரீனிவாசன் என்பவர் ரூ.2.46 கோடி நிதியை பக்தர்கள் ( சேவார்த்திகள் ) தங்குவதற்கான இல்லம் கட்ட நன்கொடையாக வழங்கினார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப் பாளராக கைத் தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில், 10 தனித்தனி குடியிருப்புகள், அலுவலகம், தியான மண்டபம் மற்றும் புஷ்ப கைங்கரிய நந்தவனம் உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் 0.89 ஏக்கர் பரப்பளவில் இந்த இல்லம் அமைக்கப்பட உள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், நன்கொடையாளர் மிருநாளினி ஸ்ரீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் லட்சுமணன், உதவி ஆணையர் ( பொறுப்பு ) ஜெயா, நகராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர். இக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் தினசரி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.