திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் - கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு 

திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின் போது முறிந்து விழுந்த கொடி மரம்.
திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின் போது முறிந்து விழுந்த கொடி மரம்.
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றத்தின்போது, கொடிமரம் முறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வேறு மரம் நடப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. திருநள்ளாறில் உள்ள நளபுரநாயகி சமேத நளநாராயண பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பான வகையில் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு விழா இன்று (மார்ச் 4) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நேற்று இரவு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வேத பிரபந்த பாராயண தொடக்கம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.

இன்று காலை 9 லிருந்து 10.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்த்த திட்டமிடப்பட்டு, நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளியதும், பூஜைகள் செய்து தீபாராதனைக் காட்டப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு, கொடி ஏற்றம் நிகழ்த்தப்பட்டபோது, திடீரென எதிர்பாராத விதமாக கொடிமரம் முறிந்து விழுந்தது. இதனால் சிவாச்சாரியார்களும், பக்தர்களும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கோயில் நிர்வாகம் கொடி மரத்தை சரியாக பராமரிக்காத காரணத்தால்தான் இந்நிகழ்வு நடந்துள்ளது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தோஷ நிவர்த்தி ஹோமம் நடத்தப்பட்டு, ஏற்கனவே கொடிமரம் உள்ள இடத்தின் அருகில் தற்காலிகமாக புதிதாகக் கொடி மரம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் செய்து மகா தீபாராதனைக் காட்டப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in