ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கியது

பர்வதவர்த்தினி அம்பாள், ராமநாத சுவாமி, பிரியாவிடை
பர்வதவர்த்தினி அம்பாள், ராமநாத சுவாமி, பிரியாவிடை
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான மாசி மகாசிவராத்திரி திருவிழா மார்ச் 1-ல் தொடங்கி மார்ச் 12 வரை நடைபெறுகிறது.

இதை யொட்டி நேற்று காலை 10 மணி யளவில் மேஷ லக்னத்தில் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சந்நிதி கொடிக்கம்பத்தில் வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ராமநாத சுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

நேற்றிரவு ராமநாத சுவாமி கோயில் நாயகர் வாசலில் ஒளி வழிபாடு முடிந்து ராமநாத சுவாமி, நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்ச் 8-ல் மகா சிவராத்திரி: வரும் மார்ச் 8-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் நடராஜர் கேடயத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரவு 9 மணிக்கு மேல் சுவாமி,அம்பாள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் மார்ச் 9-ல் தேரோட்டமும், மார்ச் 10-ல் அக்னி தீர்த்தக் கடற்கரையில் அமாவாசை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறும்.

முன்னதாக மார்ச் 3 அன்று ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் கெந்தமாதன பர்வதம் எழுந்தருளை முன்னிட்டு காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ராமநாத சுவாமி கோயில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்தமாடவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in