Last Updated : 03 Jan, 2018 01:09 PM

 

Published : 03 Jan 2018 01:09 PM
Last Updated : 03 Jan 2018 01:09 PM

குருவே... யோகி ராமா..! 31: ரமண ஒளி!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

மலை முழுக்க சக்தி ஆட்கொண்டிருக்கும் தலம் திருவண்ணாமலை. மண் இருக்கும் இடமெல்லாம் புண்ணியத் தடங்கள். அத்தனை மகான்களும் நடந்த பூமி இது. எத்தனையோ மகான்கள் இங்கு வந்து நெடுங்காலம் தபஸ் செய்ததால் உண்டான அதிர்வு, இன்றைக்கும் மலை தழுவி பரவிக் கொண்டிருக்கும் காற்றில் இரண்டறக் கலந்து கொண்டிருக்கிறது.

ராம்சுரத் குன்வர் திருவண்ணாமலையைச் சுற்றிச் சுற்றி வந்தார். கோயில் கோபுரமும் கோயிலுக்குள் இருக்கிற மண்டபங்களும் பார்த்தார். உள்ளே அண்ணாமலையாரின் தரிசனம், அவரை ஆட்கொண்டது. என்னவோ செய்தது.

காசி க்ஷேத்திரத்தில், விஸ்வநாதர் சந்நிதியில் பிரபஞ்சவெளியாக ஏதோவொன்றை உணர்ந்தார் அல்லவா. அப்படியான உணர்வில் நெக்குருகிப் போனார். மெய்ம்மறந்து போனார். கிரிவலப் பாதையில் நடந்தார். ஒவ்வொரு லிங்கமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். தரிசித்தபடியே வந்தார். அவ்வப்போது மலையைப் பார்த்தபடியே, பிரமித்தபடியே, தரிசித்தபடியே வந்தார்.

எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் மலையே சிவமெனத் தெரிந்தது. பிரமாண்டமான சிவலிங்கம் ஒன்று காட்சி அளித்தபடி இருந்தது.

நடக்கிறோமோ அமர்ந்திக்கிறோமா என்றெல்லாம் அவருக்குத் தெரியவில்லை. எந்தச் சிந்தனையுமற்ற நிலை. சதாசர்வ காலமும் சதாசிவமே உள்ளுக்குள் இருந்து சகலத்தையும் நிகழ்த்திக் கொண்டிருந்ததாக உணர்ந்தார். ஒருகட்டத்தில், அந்த நினைப்பும் அறுந்துபோயிற்று.

மலையைச் சுற்றி நடந்து வந்தார். பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டார். அப்படியே எழுந்து கோயில் பக்கம் வந்தார். பலமணி நேரங்கள் கழித்து கோயிலின் ஒவ்வொரு கல்லையும் தடவிப் பார்த்தார். தொட்டுப் பார்த்தார். திரும்பவும் ஓரிடத்தில் கண்மூடி உட்கார்ந்து கொண்டார்.

கோயில் விட்டு வெளியே வந்தார். அவர்பாட்டுக்கு நடந்தார். ரயில் நிலையம் வந்தது. ரயில்நிலையத்துக்குப் போகும் பாதையிலும் சுற்றிலுமாக மரங்கள் பல இருந்தன. எல்லா மரங்களும் நிழல் கொடுத்தபடி கிளை பரப்பி நின்றன. மரத்தடியில் அமர்ந்து கொண்டார். கால்களை நீட்டி, முதுகை மரத்தில் சாய்த்தபடி கண் மூடினார். அது தூக்கமில்லை. விழிப்பு. அது ஓய்வு அல்ல. என்ன பணி என்பதான தேடல். பணி கிடைத்து விட்டதா என்று அசைபோடுதல்!

சம்பந்தாண்டானின் தோல்வி, மக்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அதேசமயம் அருணகிரிநாதரின் வெற்றியால், இன்னும் இன்னும் அவரை த் தெரிந்தும் புரிந்தும் கொண்டார்கள். அவரைச் சுற்றி வந்து நின்று கொண்டார்கள். ‘அருணகிரிநாதர் வாழ்க’ என்று கோஷமிட்டார்கள்.

அருணகிரிநாதருக்கு கையில் ஆறு விரல்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆறு முகங்கள் கொண்டவன், சரவண பவ எனும் ஆறெழுத்து மந்திரத்துக்கு உரியவன்... அருணகிரிநாதரை ஆட்கொண்டதற்கான, ஆட்கொள்வான் என்பதற்கான பிறப்பிலேயே வந்த அடையாளம் என்று போற்றிச் சொல்லுவார்கள்.

’அப்பன் முருகனே கதி’ என்று கோயில்கோயிலாகத் தேடிச் சென்று முருகப் பெருமானைத் தரிசித்தார். அப்படி தரிசித்த இடங்களிலெல்லாம், தலங்களில் எல்லாம் கந்தனைப் போற்றி, உருகி உருகிப் பாடினார். கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், கந்தரனுபூதி என அருணகிரிநாதர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் முருகப்பெருமான் மீது அவர் வைத்திருக்கும் பக்தியையும் பேரன்பையும் காதலையும் பக்தர்கள் உணர்ந்து சிலிர்த்தார்கள்.

அழகன் முருகனை மட்டும் கொண்டாடியதோடு நின்றுவிடவில்லை அருணகிரிநாதர். கந்தபெருமானின் கொடியில் உள்ள சேவையும் புகழ்ந்தார். சேவல் விருத்தம் பாடினார். மயில் வாகனன் முருகனல்லவா. எனவே மயில் குறித்தும் மயில் மீது மையல் கொண்டும் மயில் விருத்தம் என்று வியந்து வியந்து பாடியிருக்கிறார்.

அதுமட்டுமா. வேலவனின் திருக்கரத்தில் இருக்கும் வேல் பற்றியும் வேல் விருத்தம் என்றே பாடிப் பரவியிருக்கிறார் அருணகிரிநாதர். இப்படி அருணகிரிநாதருக்குக் கிடைத்த அருள், பாடல்களாக விருத்தங்களாக இசையாக இன்றைக்கும் நம்மிடையே பரவியிருக்கிறது. இவர் எழுதிய விருத்தங்களையும் திருப்புகழையும் உலகில் எங்கே, எப்போது பாடினாலும் அங்கே அருணகிரியாரும் வந்து அருள் செய்கிறார்; அழகன் முருகனும் வந்து ஆட்சி செய்கிறான் என்பதாக ஐதீகம்!

திருவண்ணாமலை எனும் தேசம், இப்படித்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மகான்களை நமக்கு அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறது.

‘இந்த மலைக்கு வா. இங்கே ஞானகுருவாக இரு’ என்று திருவண்ணாமலையை அண்ணாமலையார் சொல்லி அழைக்க, குகை நமசிவாயர், இங்கே ஓடோடி வந்தார். மனிதர்களுக்கு ஞானத்தை வழங்கி அருளினார்.

திருவண்ணாமலையில் உள்ள தீர்த்தக் குளத்து நீரையெல்லாம் அப்படியே ஒரு குடத்துக்குள் நிரப்பினார். அந்தக் குடத்து நீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு, அந்த பிரமாண்டத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து பூஜித்தார். அவர்... மகா சிவயோகி பாணி பத்திரசாமி எனும் சித்தபுருஷர்!

திருவண்ணாமலை பூமிக்கு வந்தார் அந்த மகான். ‘எனக்குப் பசிக்கிறது...’ என்று உண்ணாமுலை அம்பாளிடமே கேட்டுப் பாடினார். பசியையும் பக்தியையும் பாட்டாகவே பாட... அதில் குளிர்ந்து போன அம்பாள், தன் திருக்கரங்களால் பொங்கலமுது வழங்கி, பசியாற்றினார். அந்த மகானின் திருநாமம் - குரு நமசிவாயர். அதுமட்டுமா. திருவண்ணாமலையில் இருந்து கொண்டே, தில்லைச் சிதம்பரம் கோயிலின் திரைச்சீலையானது, தீப்பிடித்திருப்பதை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்து அந்தத் தீயை அணைத்து, தன் யோகபலத்தை உலகுக்கு உணர்த்தினார்.

திருவண்ணாமலை ஆதினத்தில் முதல் குருவானார். பிறகு குன்றக்குடி ஆதினத்தை ஸ்தாபித்தார் என்று தெய்வசிகாமணி தேசிகரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

திருவண்ணாமலையில் கடும் பஞ்சம். அந்தப் பஞ்சத்தைப் போக்கும் பொருட்டு, ஓர் ஏரியையே அமைத்தார் அவர். அதற்காக உண்ணவில்லை. உறங்கவில்லை. கடும் தவம் மேற்கொண்டார். அந்தத் தவத்தின் பலனாக, மழை பெய்தது. கடும் மழை பெய்து கொண்டே இருந்தது. மழையால் ஏரி நிரம்பியது. ஏரியில் நிரம்பிய நீரால், காடும் கழனியும் செழித்தன. விவசாயம் தழைத்தது. அப்படிப் பஞ்சம் போக்கிய மகராசி... மங்கையர்க்கரசியார் எனும் சிவனடியார்!

இன்றைக்கும் நம்மில் பலர் பெளர்ணமி தோறும் கிரிவலம் வருகிறோம். இன்னும் சிலர் எப்போது திருவண்ணாமலைக்குப் போகிறோமோ அப்போது கிரிவலம் செல்வோம் என்று இருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... திருவண்ணாமலைக்குப் போனாலும் கிரிவலம் செல்லாமல் இருப்பவர்களும் கூட உண்டு. ஆனால், சிறுவயதில் தொடங்கிய பழக்கம் அவருக்கு. தொந்நூறு வயது வரை, தினமும் கிரிவலம் வந்தார் சோணாசலம் தேவர் எனும் பக்தர். இவர் செய்த ஆன்மிகப் பணிகளும் பக்தியும் மக்கள் சேவையும் ஏராளம்.

இவர்கள் மட்டுமா? இன்னும் இன்னும் இருக்கிறார்கள் ஏராளமான மகான்கள். திருவண்ணாமலை மகான்கள் என்று எத்தனையோ பேரை, அருளாளர்களை, ஞானிகளை, சித்தபுருஷர்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம். பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம்.

அவர்களில் பகவான் ரமண மகரிஷியும் ஒருவர். தென்மாவட்டத்தின் குக்கிராமத்தில் அவதரித்து. திருச்சுழி எனும் கிராமத்தில் இருந்து மதுரைக்கு வந்தவர், பிறகு மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து, திருவண்ணாமலையே தனக்கான திருக்கயிலாயம் என்பதாக நினைத்துப் பூரித்து, இந்த பூமியிலேயே இருந்தபடி, திருவண்ணாமலையிலேயே இருந்து கொண்டு, தன்னை நாடி வருவோருக்கெல்லாம் ஆத்மவிசாரத்தைப் புகட்டிய ஒப்பற்ற மகான்.

மனிதர்கள் மீதும் விலங்கினங்கள் மீதும் பறவைகள் மீதும் அளவற்ற நேசம் கொண்டிருந்த, பற்றற்ற துறவி! அன்பையும் ஆத்ம விசாரத்தையும் மட்டுமே பற்றிக் கொண்ட எளிய மகாபுருஷர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி.

திருவண்ணாமலை மகான், கடவுளின் குழந்தை என்று சொல்லப்படுகிற, போற்றப்படுகிற பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் மகானை அடையாளம் கண்டு கொண்டவர்களில், ரமண மகரிஷியும் உண்டு.

பகவான் ரமணரின் ஜயந்தித் திருநாள், இன்றைய தினம். அவர் அவதரித்த அற்புதமான நன்னாள் இன்று. இந்த நாளில், பகவான் ரமணரைத் தொழுவோம். ரமண மகரிஷியின் பேரருளைப் பெறுவோம்.

பகவான் யோகி ராம்சுரத்குமார் எனும் ஒப்பற்ற மகான், திருவண்ணாமலை முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தார். ஒருவழியாக, திருவண்ணாமலையில் அவருக்கு ஓரிடம் கிடைத்தது. அவரை இன்முகத்துடன் , புன்முறுவலுடன், புளகாங்கிதத்துடன் ஏற்றுக் கொண்டார் அவர். அவருடனேயே சிலகாலம் இருந்தார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

கடவுளின் குழந்தை என்று போற்றப்படுகிற பகவான் யோகி ராம்சுரத்குமாரை, அன்பொழுக வரவேற்று, தன்னுடனேயே வைத்துக் கொண்ட அந்த மகான்... பகவான் ஸ்ரீரமண மகரிஷி! ஒளி... ஒளியை ஏற்றுக் கொண்டது. அங்கே... பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு இன்னும் இன்னுமாக தேடல்கள் புரிபட்டன. புலப்பட்டன!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

-ராம் ராம் ஜெய்ராம்

 

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x