Last Updated : 24 Jan, 2018 09:44 AM

 

Published : 24 Jan 2018 09:44 AM
Last Updated : 24 Jan 2018 09:44 AM

வெற்றிவேல் முருகனுக்கு...7: மிட்டாய்’ முருகன்!

வெற்றிவேல் முருகனுக்கு... தொடரில் சுவாமிமலை மகாத்மியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இதோ... தைப்பூசம் நெருங்கிவிட்டது. தைப்பூசத் திருநாளையொட்டி, பழநிக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்கள், பெரும்பாலும் இன்று முதல் யாத்திரையைத் தொடங்குவார்கள்.

பழநி பாதயாத்திரைக்கு, காரைக்குடி எனப்படும் செட்டி மக்களே முதல், முழுக் காரணம். இவர்கள்தான் சுமார் 150 வருடங்களுக்கு முன்பு, பாதயாத்திரையாகச் சென்று முருகப்பெருமானைத் தரிசித்தார்கள். இதையொட்டி, அடுத்தடுத்த எல்லா தரப்பினரும், எல்லா ஊர்களில் இருந்தும் பாதயாத்திரையாக பழநியம்பதிக்கு வரத் தொடங்கினார்கள்.

அப்படி பழநிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் போது, ஒட்டன்சத்திரம் அருகில் சாலையோரத்திலேயே முருகப் பெருமான் கோயில் ஒன்று உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயில் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

அங்கே... முருகப்பெருமானின் திருநாமம் குழந்தைவேலன்.

பரீட்சையில் வெற்றி பெற்றால், அதிக மார்க் வாங்கினால்... மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள உறவினர்- மற்றும் நண்பர்களுக்கு சாக்லெட் அல்லது மிட்டாய் என்று இனிப்பு கொடுப்பது வழக்கம். ஆனால், ஒட்டன்சத்திரம்- குழந்தைவேலப்பர் கோயிலில்... தேர்வில் ஜெயிக்க, நிறைய மதிப்பெண்கள் வாங்க வேண்டிக் கொண்டு, முருகனுக்கு மிட்டாய் தருகிறார்கள் பக்தர்கள்!

திண்டுக்கல்லில் இருந்து பழநி செல்லும் வழியில் சுமார் 38 கி.மீ. தொலைவில் உள்ளது ஒட்டன்சத்திரம். இங்கிருந்து பழநி செல்லும் வழியில், சுமார் 2 கி.மீ. தொலைவு பயணித்தால், குழந்தைவேலப்பர் கோயிலை அடையலாம்.

இங்கே, கருவறையில்... குழந்தை வடிவில் கையில் வேலுடன் திகழ்வதால், ‘ஸ்ரீகுழந்தைவேலப்பர்’ எனும் திருநாமம் முருகப் பெருமானுக்கு!

பழநி பாதயாத்திரை மேற்கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள், குழந்தைவேலப்பரை தரிசித்து, மிட்டாய் வழங்கிவிட்டே பழநிக்குச் செல்கின்றனர். இந்த வேளையில், ஒட்டன்சத்திரத்தில் இருந்து குழந்தைவேலப்பர் ஆலயம் வரை, ஏகப்பட்ட மிட்டாய்க்கடைகள் தற்காலிகமாக முளைத்திருக்கும்!

குழந்தைவேலப்பர் அல்லவா? எனவேதான் திருமணம், பிள்ளைவரம் முதலான வேண்டுதல்களுடன் வரும் பக்தர்கள், குழந்தை வேலப்பருக்கு மிட்டாய்களை நைவேத்தியமாகச் செலுத்துகின்றனர்.

முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை அன்று, குழந்தை வேலப்பருக்கு செந்நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபமேற்றி வைத்து, மிட்டாய் அல்லது சாக்லேட் சமர்ப்பித்து பிரார்த்தனை செய்தால், கல்வித் தடை நீங்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம். உயர்கல்வியில் சாதனை படைக்கலாம் என்கின்றனர் பக்தர்கள்!

சோமவாரம் (திங்கட்கிழமை), சஷ்டி மற்றும் கார்த்திகை நாட்களில் விரதம் இருந்து, குழந்தைவேலப்பருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், கல்வியிலும்- ஞானத்திலும் மிக உன்னத இடத்தை அடையலாம் என்பது ஐதீகம்!

பாதயாத்திரையாக என்றில்லை. பழநிக்கு, ஒட்டன்சத்திரத்துக்கு, கன்னிவாடி கிராமத்துக்கு என அந்தப் பக்கம் செல்லும் போது, அப்படியே குழந்தை வேலவனுக்கு மிட்டாய் கொடுத்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையே இனிக்கச் செய்வான் குழந்தை வேலவன்!

-வேல்வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x