

ப
த்தாம் நூற்றாண்டில் மைசூர் பகுதியைக் கங்க அரசர் நாகமல்லர் என்பவர் ஆண்டு வந்தார். அவருக்குத் தமிழகத்தைச் சார்ந்த சாமுண்டராயர் என்பவர் அமைச்சராகவும் தளபதியாகவும் விளங்கினார். சாமுண்டராயரின் அன்னை காலலா தேவி, தன் தாயின் விருப்பத்திற்கிணங்க சாமுண்டராயர் சிரவண பெளிகுளம் என்னும் இடத்தில் பகவான் பாகுபலியின் முழு உருவச் சிலையை உருவாக்கினார். ஐம்பத்து ஏழு அடி உயரமுள்ள இச்சிலை உலக அதிசயமானது.
தாய் சொல்லைத் தட்டாத சாமுண்டராயரின் மனதில் பெருமிதமும் இதுபோன்ற சிலையை எவராலும் எழுப்ப முடியாது என்று சற்று ஆணவமும் குடிகொண்டிருந்தன.
சாமுண்டராயர் பகவான் பாகுபலி சிலைக்கு கி.பி 981-ல் குடமுழுக்கு செய்தார். அப்பொழுது குடம் குடமாகப் பாலை சிலையின் உச்சியில் சொரிந்தார்கள். ஆனால், பால் சிலையின் பாதி உடம்புக்குக் கீழே வரவில்லை. இதைக் கண்ட சாமுண்டராயர் திடுக்கிட்டு அதிர்ச்சியும் வருத்தமும் விரக்தியும் அடைந்தார்.
சாமுண்டராயரின் ஆணவத்தை அடக்க கூஷ்மாண்டினி எனும் தேவதை முடிவு செய்தது. அதனால் அந்தத் தேவதை, ஒரு ஏழைக் கிழவியின் வடிவம் தாங்கி கையில் சிறிய குல்லகா எனும் காயின் வெண்ணிற ஓடு ஒன்றைக் கிண்ணமாக ஏந்தி அதில் பாலுடன் வந்தது. சாமுண்டராயரிடம் சென்று பகவான் சிலைக்கு அபிஷேகம் செய்ய தன்னை அனுமதிக்கக் கோரியது. அவர் முதலில் மறுத்துவிட்டார். பின்னர், நேமிசந்திர ஆச்சாரியரின் அறிவுரையை ஏற்று அனுமதித்தார்.
குல்லகா கிழவி மெதுவாக பகவான் சிலையின் உச்சியை அடைந்து குல்லகா கிண்ணத்திலிருந்த பாலைப் பகவானின் தலை மீது சொரிந்தார். அவ்வளவுதான், பால் சரசரவென்று அந்த மாபெரும் சிலை மீது பரவி பகவானின் பாதம்வரை சென்று ஆறாக ஓடியது. அனைவரும் வியந்து நின்றனர்.
சாமுண்டராயர், தேவதை கூஷ்மாண்டினிதான் குல்லகா கிழவியாக வந்திருப்பதை உணர்ந்தார். தன் ஆணவத்தை ஒழித்து தேவியின் காலடியில் வீழ்ந்து வணங்கினார். பகவான் சிலைக்கு முன்பாகவே கூஷ்மாண்டினி அம்மனுக்குச் சிலையும் மண்டபமும் அமைத்தார். இன்றும் அந்த மண்டபத்தில் கூஷ்மாண்டினி அம்மன் அருள்பாலிக்கிறார்.