திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
Updated on
1 min read

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வள்ளி - முருகப் பெருமான் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் கடந்த வாரம் தேரோட்டம், தெப்ப உற்சவம் உள்ளிட்டவை நிறைவேறிய நிலையில் நேற்று நிறைவு நாளில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோயில் வளாகத்தில் உள்ள உற்சவ மண்டபத்தில் ஸ்ரீ கந்தசுவாமி, வள்ளி - தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

உற்சவமூர்த்திகளான வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. பட்டு வஸ்திரம், பழங்கள், பட்சணங்கள், மலர்கள் என மாப்பிள்ளை, பெண் வீட்டார் சீர்வரிசைகளுடன் முருகப் பெருமானுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் திரளான பக்தர்கள் முருகப் பெருமானின் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்தனர்.

திருக்கல்யாண வைபவ ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் செயல் அலுவலர் குமரவேல், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in