

மேட்டூர்: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில், மாசிமக திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேரோட்டம் நடந்தது.
மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இந்த ஆண்டுக்கான மாசி மக தேர்த் திருவிழா கடந்த 22-ம் தேதி தொடங்கியது. சின்ன தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று, பவுர்ணமியை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பெரிய தேரோட்டம் மாலை நடந்தது. விநாயகர் தேரும், பெரிய தேரையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர், கிராமச் சாவடியில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இன்று ( 25-ம் தேதி ) கிராமச் சாவடியில் இருந்து விநாயகர் தேர், பெரிய தேர் கோயிலை அடையும். நாளை ( 26-ம் தேதி ) சத்தாபரணம், 28-ம் தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவடைகிறது. தேரோட்டத்தில் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், கோயில் செயல் அலுவலர் திருஞானசம்பந்தர், கோயில் உதவி ஆணையர் இளைய ராஜா, டிஎஸ்பி மரியமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.