

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி மகத்தை யொட்டி தெப்ப உற்சவம் நடைபெற்றது.
பெரியாழ்வார், திருமங்கை யாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என 5 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்பு மிக்கது திருக்கோஷ் டியூர் பெருமாள் கோயில். சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இக்கோயிலில் பிரசித்தி பெற்ற மாசிமகத் தெப்ப உற்சவ விழா, கடந்த பிப்.15-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
பிப்.20-ம் தேதி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றுதல் உற்சவம், பிப்.23 வெண்ணெய்த் தாழி அலங்காரத்தில் சுவாமி எழுந் தருளல் நடைபெற்றது. நேற்று காலை சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்கப் பல்லக்கில் சவுமிய நாராயணப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து முக்கிய வீதி களின் வழியாக, தெப்ப மண்ட பத்தை அடைந்தார். அங்கு சுவாமிக்கு திருவந்திக் காப்பும், தீபாராதனையும் நடைபெற்றன.
பின்னர் தெப்பக்குளத்தில் இருந்த தெப்பத்தில் தேவியருடன் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இன்று தீர்த்தவாரியும், இரவில் சுவாமி தங்கப் பல்லக்கில் எழுந்தருளலும் நடைபெறுகின்றன.
இத்திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பெண்கள் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். விழாவையொட்டி, சிவகங்கை சாலை வழிநெடுகிலும் தின்பண் டங்கள், அலங்காரப் பொருட்கள், பழக்கடைகள், உணவுக் கடைகள் என நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகளை அமைத்திருந்தனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக் கணக்கான வாகனங்கள் கோயிலுக்கு அரை கி.மீ.க்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதால் வாகன நெரிசல் தவிர்க் கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தெப்பக்குளத்தைச் சுற்றிலும் தற்காலிக கண்காணிப்புக் கோபுரங்களை அமைத்துக் கூட்டத்தைக் கண்காணித்தனர். விழா ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்திருந்தனர்.