

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பவுர்ணமி மற்றும் மாசி மகத்தை முன்னிட்டு 1,600-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம், பவுர்ணமி, மாசி மகம் வழிபாட்டுக்காக பிப்ரவரி 21 முதல் 25-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
நேற்று மாலை 6 மணி முதல் பவுர்ணமி தொடங்கியதை முன்னிட்டு அதிகாலை முதலே தாணிப்பாறை அடிவாரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். காலை 6:30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி மற்றும் 18 சித்தர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் தொடங்கின.
சதுரகிரி மலையில் உள்ள சந்திர தீர்த்தம், கவுண்டின்ய தீர்த்தம், சந்தன மகாலிங்க தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், பொய்கைத் தீர்த்தம், பால், பன்னீர், சந்தனம் என 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் புஷ்ப அலங்காரத்தில் சுந்தர மகாலிங்கம் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் 1,600-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், அறங்காவலர் ராஜா பெரியசாமி ஆகியோர் செய்தனர்.