குருவே...யோகி ராமா..! 41: நான் வேறு ; உடல் வேறு!’

குருவே...யோகி ராமா..! 41: நான் வேறு ; உடல் வேறு!’
Updated on
2 min read

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

சொந்த ஊரில் இருப்பு கொள்ளவில்லை. வெளியே தேசாந்திரம் போல் போய்விடலாம் என்றால் எங்கே செல்வது என்று புரிபடவில்லை. யார் தன்னுடைய குரு... அதுவும் தெரியவில்லை. மீண்டும் பள்ளிக்கூடம், ஹெட்மாஸ்டர் வேலை, வீட்டுத் திண்ணை, கங்கைக்கரை, சாதுக்களுடன் பேச்சுத் தொடர்பு என்று வெறுமனே சுற்றிக் கொண்டிருப்பதிலும் மனம் ஈடுபட மறுக்கிறது.

என்ன செய்வது? யாரை சந்திப்பது? யாரையும் சந்திக்காமல் தனிமையிலேயே இருப்பதுதான் சரியா? உள்ளூரில் இருக்கவேண்டுமா. வெளியூர் எங்கேனும் போய்விடவேண்டுமா. புதுச்சேரிக்கோ திருவண்ணாமலைக்கோ போனால் என்ன?

ஆமாம்... திருவண்ணாமலை... திருவண்ணாமலை... திருவண்ணாமலை.

அங்கிருந்துதான் சமிக்ஞை வந்துவிட்டதே. அங்கே இருந்தபடியே சரி என்று பகவான் ரமணர் சொல்லிவிட்டாரே. ஆக, திருவண்ணாமலை மீண்டும் அழைக்கிறது. திரும்பவும் என்னை வரித்துக் கொள்ள அந்த பூமி தயாராகவே இருக்கிறது. அதேபோல், ரமண பகவானும் என்னை வரித்துக் கொள்வாரா. ஏற்றுக் கொள்வாரா?

அதுதான் சரி என்று சொல்லியிருக்கிறாரே. சரி என்றால் சம்மதம்தானே. என்னை ஆட்கொள்ளமாட்டீர்களா என்று கேட்டோமே. அதற்குத்தானே இந்தப் பதில். சரி என்றால் ஏற்றுக் கொள்கிறேன் என்றுதானே அர்த்தம். அப்படி ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னமாத்திரத்திலேயே ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பதாகத்தானே பொருள்.

ராம்சுரத் குன்வர், பலவாறான யோசனைகளில் மூழ்கினார்.

பகவான் ரமணர் இங்கிருந்தபடியே சொன்ன... அதாவது திருவண்ணாமலையில் இருந்தபடியே சொன்ன சரி என்கிற ஒப்புதல் வார்த்தையை, சரியாகவே உள்வாங்கிக் கொண்டார் ராம்சுரத் குன்வர்.

இந்த நிலையில்தான், பகவான் ரமணரை கேன்ஸர் நோய் பீடித்திருந்தது. இதனால் ஆஸ்ரம அன்பர்கள், பகவான் ரமண மகரிஷியிடம் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டினார்கள். எப்போதும் தரிசனம் செய்யலாம் என்றிருந்த நிலை, சற்றே மாறியது. எப்போதாவது மட்டுமே தரிசனம் என்று வந்தது.

ராம்சுரத் குன்வர், தன் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார். ரமணாஸ்ரமத்துக்குச் சென்றார். உள்ளே சென்று, ரமண பகவானைத் தரிசிக்கும் ஆவலுடன் பார்த்தார்.

அவரிடம், விவரங்கள் சொல்லப்பட்டன. அதைக் கேட்டு அதிர்ச்சியுற்றார். என்ன இது... என்ன இது என்று உள்ளே கேள்விகள் ஓடின. மெளனமாக இருந்தார். ஓரிடத்தில் அமர்ந்தார். அங்கே ஏராளமான அன்பர்கள் ரமண தரிசனத்துக்காகக் காத்திருந்தனர்.

ராம்சுரத் குன்வர், கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். மனம் முழுக்க, ரமண பகவானின் சிந்தனையாகவே இருந்தது. இது ஏன், எதனால் என்றபடியே இருந்தார்.

சிலமணி நேரங்களுக்குப் பிறகு, அங்கே ரமண பகவானின் தரிசனம்.

அப்போது அன்பர் ஒருவர், ரமண மகரிஷிக்கு அருகில் சென்றார். எதிரில் ராம்சுரத் குன்வர் அமர்ந்திருந்தார். அந்த அன்பர், ரமணரை நமஸ்கரித்தார். எழுந்திருக்கும் போது, அன்பரின் கண்களில் இருந்து கரகரவென வழிந்தது கண்ணீர். ஒருகட்டத்தில் அழுகையையும் கண்ணீரையும் நிறுத்தமுடியவில்லை அவரால்! பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.

’பகவானே. இதென்ன சோதனை. உங்களுக்கு ஏன் இப்படி? அண்ணாமலையாரிடம் நான் பிரார்த்திப்பது இதைத்தான். அண்ணாமலையாரே. பகவான் உடலை விட்டுவிடு. என் உடலை வேண்டுமானால் எடுத்துக் கொள்’ என்று அழுதுகொண்டே சொன்னார்.

இதையெல்லாம் கேட்டு பகவான் ரமண மகரிஷி சட்டென்று சிரித்தார். பெரும் சத்தம் எழச் சிரித்தார். பிறகு அந்த அன்பரிடம்... ‘நான் என்பது இந்த உடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். நான் என்பது வேறு, உடல் என்பது வேறு என்பதை பலமுறை, சொல்லியிருக்கிறேன். அந்தப் பாடங்களை எத்தனை முறை கேட்டிருப்பாய். ஆனால் இப்படி உடலுக்காக வருத்தப்படுகிறாய்.

சொன்னதை என்ன புரிந்து கொண்டிருக்கிறாய். எதுவுமே புரியவில்லை உனக்கு. முதலில், நான் வேறு , உடல் வேறு என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய். சொன்ன பாடத்தை கவனமாக அசை போட்டுப் பார். உண்மை புரியும்’ என்றார் பகவான் ரமணர்.

சட்டென்று நிமிர்ந்தார் ராம்சுரத் குன்வர். மெல்ல, தலை உலுக்கிக் கொண்டார்.

பகவான் ரமணரிடம் இப்படியெல்லாம் கேட்க நினைக்கவில்லை. சொல்லவேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் உள்ளுக்குள் நினைத்ததையெல்லாம் யாரோ ஒரு அன்பரின் கேள்வியாக, தனக்குப் புரியவைத்துவிட்டார் என்பதாக உணர்ந்தார்.

’நான் யார்?’

’நான் என்பது வேறு. உடல் என்பது வேறு’

ராம்சுரத் குன்வருக்குள் இந்தக் கேள்விகளும் அதுதொடர்பான விளக்கங்களுக்கான யோசனைகளும் வந்துகொண்டே இருந்தன.

நான் யார்?

நான் யார்?

நான் யார்?

இந்தக் கேள்விகளுடனே சொந்த கிராமத்துக்குச் சென்றார். மீண்டும் பிடிப்பே இல்லாமல் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டார். ஆனாலும் திருவண்ணாமலை பற்றிய நினைப்பே இருந்தது.

தேடல் இன்னும் தீவிரமடைந்தது.

சிலநாட்கள் கழித்து, திருவண்ணாமலைக்குச் செல்வது எனத் தீர்மானித்தார். அதன்படியே திருவண்ணாமலைக்குப் புறப்பட்டார். திருவண்ணாமலைக்கு வந்தார்.

அங்கே, கிரிவலப் பாதையில் ரமணாஸ்ரமம் இருந்த்து. ஆஸ்ரமத்தில், ஏராளமான அன்பர்கள் வந்தும் போயுமாக இருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்திருந்த பக்தர்கள் பலரும், ஆஸ்ரமத்திலேயே தங்கியிருந்தனர். ரமண மகரிஷி அருளியபடி, தியானத்திலும் மூச்சுப் பயிற்சியிலுமாக ஈடுபட்டிருந்தார்கள்.

ஆஸ்ரம நிர்வாகிகளும் ஊழியார்களும் ராம்சுரத் குன்வரைக் கண்டதும் வரவேற்றார்கள். ஆனால் அவர்களின் முகம் இறுகியிருந்தது. ஆஸ்ரமம் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் பகவான் ரமணர்தான் இல்லை.

பகவான் ரமண மகரிஷி, ஏற்கெனவே முக்தி அடைந்திருந்தார்.

சட்டென்று பகவானின் நாமங்களைச் சொன்னபடி இருந்தார் ராம்சுரத் குன்வர்.

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அடுத்தகட்ட பயணமாக கேரளம் அமைந்தது அப்போதுதான்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெய் ராம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in