Last Updated : 22 Dec, 2017 02:36 PM

 

Published : 22 Dec 2017 02:36 PM
Last Updated : 22 Dec 2017 02:36 PM

குருவே... யோகி ராமா..! 22: சித்தர்களின் பூமி!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்!

கர்வமும் ஆணவமும் யாருக்கும் இருக்கவே கூடாத, மோசமான குணங்கள். அதேசமயம்... இந்தக் கேள்வியும் வருகிறது. அதாவது... கர்வம் யாருக்குத்தான் இல்லை. நம்மைப் படைத்த பிரம்மாவுக்கும் நம்மைக் காத்தருளும் மகாவிஷ்ணுவுக்கும் அப்படியொருக் கர்வக் கோபமும் அதனால் ஏற்பட்ட விளைவும் என புராணத்துக்குள் செல்வதற்கு முன்னே... திருவண்ணாமலை பற்றிய இன்னும் இன்னுமான ஆச்சரியங்களைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

பகவான் யோகி ராம்சுரத்குமார் மட்டுமா திருவண்ணாமலைக்கு வந்தார். இன்னும் எத்தனையெத்தனையோ சித்தபுருஷர்களும் மகான்களும் ஞானிகளும் வந்திருக்கிறார்கள். வந்து நெடுங்காலம் தபஸ் செய்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால், திருவண்ணாமலயின் அந்த மலை இருக்கிறதே. அதுவே பிரமாண்டம். பிரபஞ்ச ரகசியம். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன.

அதுமட்டுமா? சுமார் 260 கோடி வருடப் பழைமை வாய்ந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள். டாக்டர் பீர்பால் ஹாஸி எனும் ஆராய்ச்சியாளர், எப்படியும் 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என தன் ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

சுமார் 2,665 அடி உயரம் கொண்ட, படு பிரமாண்டமாக மலையாகக் காட்சி தருகிறது அண்ணாமலையின் மலை! மலையில் சிவன் கோயில் இருக்கும். மலையடிவாரத்தில் சிவாலயம் அமைந்திருக்கும். இங்கே... மலையடிவாரத்தில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. அதேசமயம், இந்த மலையே சிவலிங்க வடிவில் இருக்கிறது என்பது கூடுதல் ஆச்சரியம். அதனால்தான் தெய்வங்களும் தேவர்பெருமக்களும் சித்தபுருஷர்களும் மலைய வலம் வந்தனர். சிவ வழிபாடு செய்தனர். சிவனாரின் பேரருளைப் பெற்றனர்.

அருணாசல புராணம் இன்னும் இன்னும் சொல்கிற தகவல்கள், திருவண்ணாமலையானது எவ்வளவு புராதனமானது, தொன்மையானது, பழைமை வாய்ந்தது, பழம்பெருமை கொண்டது என்பதெல்லாம் அறிந்து வியந்தே போனேன்.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் திரேதாயுகத்தில் மாணிக்கமலையாகவும் துவாபர யுகத்தில் தங்கமலையாகவும் தற்போதான கலியுகத்தில் கல்மலையாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை. திருக்கயிலாயத்தில் லிங்கம் சிறப்பு என்பார்கள். திருவண்ணாமலையில் மலையே லிங்கமாக இருப்பது சிறப்பு என்று போற்றுகிறார்கள் சிவனடியார்கள்.

மலையே சிவம்.அதாவது சிவலிங்கம். அந்த மலையைச் சுற்றி, அதாவது மலைலிங்கத்தைச் சுற்றி, 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்கின்றனர். ஆக, இந்த மலையையும் மலையைச் சுற்றிப் புதைந்திருக்கும் 108 சிவலிங்கங்களையும் சுற்றித்தான் கிரிவலம் வந்துகொண்டிருக்கிறோம்.

நாம் மட்டுமா? பரமேஸ்வரனின் மனைவியும் நமக்கெல்லாம் தாயாக இருப்பவளுமான உமையவள் பார்வதிதேவியே அப்படித்தான் கிரிவலம் வந்தாள். ஈசனை வணங்கினாள். வழிபட்டாள். இட பாகம் எனும் வரம் பெற்றாள். அதாவது, சிவபெருமானின் இடபாகத்தைப் பெறுவதற்காக, சிவனுள்ளேயே ஐக்கியமாகி இருக்கவேண்டும் என்பதற்காக, பார்வதிதேவி கடும் தவம் இருந்த மலை இது. தவமிருந்து, மலையை வலம் வந்து, வரம் பெற்ற பூமி இது. அங்கே தன் இடபாகத்தில் பார்வதிதேவியை வைத்துக் கொண்டு, அர்த்தநாரீஸ்வரராகத் திருக்காட்சி தந்த ஈசன், எல்லோருக்கும் அருள்பாலித்த பூமி இது!

அதனால்தான் பார்வதிதேவியைப் போல கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளான, திருக்கார்த்திகை தீப நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறோம். ஈசனைத் தொழுகிறோம்.

பெளர்ணமி, பிரதோஷம், தமிழ் மாதப் பிறப்பு... இந்த மூன்றும் திருவண்ணாமலையின் தனிச்சிறப்பு மிக்கவை என்கின்றனர் பக்தர்கள். ஏன் அப்படி? அதாவது மாதந்தோறும் பெளர்ணமி நன்னாளிலும் தமிழ் மாதத்தின் பிறப்பான முதல் நாளிலும் ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் சித்த புருஷர்களும் ஞானிகளும் யோகிகளும் சூட்சும ரூபமாக இன்றைக்கும் கிரிவலம் வந்து, ஈசனை வணங்கி வழிபடுகிறார்கள் என்பதாக ஐதீகம்!

மலையின் மகாத்மியம் மலையளவு இருக்கின்றன. திருவண்ணாமலை எனும் புண்ணிய க்ஷேத்திரம், நம்மைப் போன்ற பக்தர்களுக்கான திருத்தலம்தான். ஆனால் அது... சித்தர்களின் பூமி. புனித பூமி. எத்தனையோ சித்தர்கள், இங்கு வந்திருக்கிறார்கள். வந்து தவமிருந்திருக்கிறார்கள். திரும்ப மனமில்லாமலேயே இங்கேயே தங்கி, இன்னும் தபத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இன்றைக்கும் சூட்சும ரூபமாய் இருந்து, தவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதாக ஐதீகம்!

பதினெட்டு சித்தர்களில் ஒருவர் இடைக்காடர் எனும் சித்தர்பெருமான். இவருக்கு நான்கைந்து இடங்களில் ஜீவசமாதி இருப்பதாகச் சொல்வார்கள். இங்கே... திருவண்ணாமலையிலும் இருப்பதாகச் சொல்கின்றனர் பக்தர்கள். திருக்கார்த்திகை தீபத்தை வாழ்வில் ஒரேயொரு முறை பார்த்தாலே புண்ணியம் என்பார்கள். இடைக்காடர் கோடி முறை தீப தரிசனம் பார்த்தவர் என்கிறது அருணாசல மகாத்மியம். மாதந்தோறும் பெளர்ணமியன்று இடைக்காடர் கிரிவலம் வருவதாக ஓர் நம்பிக்கை!

வாத்தியார் ஐயா முத்துவடுகுநாத சித்தர் என்பவர் பற்றிய முழு விவரங்களும் கிடைக்கவில்லை. எங்கே ஜீவசமாதி அடைந்தார் எனும் தகவல்களும் தெரியவில்லை. மிகப்பெரிய சித்த புருஷர் இவர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் வராஹி தீர்த்தக் குளம் உள்ளது. இங்கு வந்து, வராஹி தீர்த்தக் குளம் அருகில் அமர்ந்தபடி, இன்றைக்கும் சூட்சுமமாக மலையை நோக்கி தவம் செய்கிறார் என்று ஐதீகம்! பெளர்ணமி கிரிவலம் போகிறவர்கள், வராஹி தீர்த்தக்குளம் அருகில் ஒரு பத்துப்பதினைந்து நிமிடம் அமர்ந்து கண்மூடி, பேச்சற்று இருந்தால், ஏதோவொரு சூட்சும சக்தியை உணரமுடியும் என்கிறார்கள் பக்தர்கள்.

பெத்தநாராயண சித்தர் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து பலகாலம் தங்கி, சிவ வழிபாடு செய்தவர். மலை வழிபாடு செய்தவர். ‘உண்ணாமலை சமேத அண்ணாமலை ஈசனே... பெத்த நாராயணச் சித்தரே உனக்கு நமஸ்காரம் என்று கிரிவலம் செல்லும் போது, மனதுக்குள் நினைத்து வழிபட்டால் போதும்... அந்தச் சித்தரின் ஆசி நமக்குக் கிடைத்துவிடும் என்கிறார்கள் பலரும்!

சீனந்தல் சிவபெரு வாலச் சித்தர் என்பவர் , மிகச் சிறந்த சிவபக்தராகவும் கடும் தபஸ்வியாகவும் இருந்தவராம். கிரிவலம் செல்லும் போது, இவரின் பெயரைச் சொல்லி மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டே சென்றால், வயிறு சம்பந்தமான பிரச்சினைகளோ கோளாறுகளோ இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்துவிடுவாராம் இந்தச் சித்தர் பெருமான்!

கலசபாக்கம் திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள கிராமம். இங்கே வாழ்ந்து வந்த பூண்டி சுவாமிகள் ஜீவசமாதியாகி பல வருடங்களாகி விட்டன. ஆனாலும் பெளர்ணமி தோறும் கிரிவலம் வருவதாக ஐதீகம்.

திருவல்லம் பாம்பணைவாசச் சித்தர் என்பவர் இன்றைக்கும் கிரிவலப்பாதையிலேயே சூட்சுமமாக இருக்கிறாராம். எங்கே இருப்பார், எப்படி இருப்பார், யார் போல் இருப்பார் என்பதெல்லாம் தெரியாது என்றும் இவரின் பார்வை நம் மீது பட்டாலே விஷக்கடியால் அடிக்கடி அவதிப்படுவோர் தோஷங்களால் அல்லலுக்கு ஆளாகியிருப்போர் அவற்றில் இருந்து நிவாரணம் பெறுவார்கள் என்பது உறுதி என்கின்றன திருவண்ணாமலை பெருமை சொல்லும் ஞானநூல்கள்!

ரோகிணி, திருவாதிரை, உத்திரம், உத்திரட்டாதி, பூசம், திருவோணம், அவிட்டம், சதயம் முதலான நட்சத்திர நாட்களில், கிரிவலம் வந்தால், கணதங்கனான் சித்தர் என்பவர் நற்பலன்களை வழங்கி அருள்வதாகச் சொல்கிறார்கள், கிரிவலம் வரும் அன்பர்கள் சிலர்!

திருவண்ணாமலை சித்தர்கள் பூமி என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா. ராம்சுரத் குன்வரை, திருவண்ணாமலை ஈர்தததற்கான காரணங்கள் இப்போது அறியமுடிகிறதா.

திருவண்ணாமலையின் பிரமாண்டங்களை ஒவ்வொன்றாக உள்வாங்கிக் கொண்டே இருந்தார் ராம்சுரத் குன்வர்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x