

திருமலை: ரதசப்தமி விழாவினை நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெகு சிறப்பாக கொண்டாடியது. சூரிய ஜெயந்தி எனும் இவ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடத்தும் திருப்பதி தேவஸ்தானம், இந்த ஆண்டும் இவ்விழாவினை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பாக நடத்தியது.
ரதசப்தமியையொட்டி நேற்று திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் உற்சவரான மலையப்பர் வாகன மண்டபத்தில் இருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் 4 மாட வீதிகளிலும் சுவாமியின் வீதியுலா நடந்தது. இதனை காண இரவு முதலே பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து, சின்ன சேஷவாகனம், கருட வாகனம், ஹனுமன்வாகன சேவை நடைபெற்றது. பின்னர் மதியம் 2 மணிக்கு சக்கரஸ்நானமும், இதனை தொடர்ந்து, கற்பக விருட்ச வாகனம், சர்வபூபால வாகனம், இறுதியாக இரவு சந்திரபிரபை வாகன சேவையும் நடைபெற்றது.
வாகன சேவையை காண ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலையில் திரண்டிருந்தனர். இவர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில், நள்ளிரவு முதலே உணவு வகைகள், குடிநீர், டீ, காபி போன்றவை உடனுக்குடன் வாரி சேவகர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டன.