

ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள கோதண்டராமர் கோயிலை ரூ.40 கோடி செலவில் சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ராமேசுவரத்தில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள குட்டி தீவுக்கு நடுவே கோதண்ட ராமர் கோயில் அமைந்துள்ளது. இலங்கை மன்னர் ராவணனிடம் செயலில் உடன்பாடில்லாத அவரது சகோதரர் விபீஷணன், அங்கிருந்து புறப்பட்டு ராமேசுவரம் வந்து ராமரை சந்தித்தார். பின்னர் போரில் ராவணன் வீழ்ந்த பின்பு தனுஷ்கோடியில் வைத்து விபீஷணனுக்கு இலங்கை வேந்தனாக ராமர் பட்டா பிஷேகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து பன்னெடுங்காலத்துக்குப் பின்பு தனுஷ்கோடியில் இந்த கோயில் எழுப்பப்பட்டது.
கோதண்ட ராமர் கோயில், ராமேசுவரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்தில் தனுஷ்கோடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் பாக் நீரிணை கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் கோதண்ட ராமர், உற்சவர் ராமர், தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெறும் போது, கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணர் பட்டா பிஷேகம் நடத்தப்படுகிறது.
ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், அங்கு தரிசனம் செய்த பின்பு கோதண்ட ராமர் கோயிலுக்குச் சென்று வழி படுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி தனுஷ்கோடியை புயல் தாக்கிய போது பழமையான கோதண்ட ராமர் கோயில் முழுவதுமாக சேதமடைந்து ஒரு சில தூண்கள் மட்டுமே எஞ்சின. பின்னர் 1970-களில் தற்போது உள்ள கோதண்ட ராமர் கோயில் கட்டப்பட்டது. இந்நிலையில் கோதண்ட ராமர் கோயிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கோதண்ட ராமர் கோயிலை ரூ.40 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் கடல் நீர் புகாத வண்ணம் சுற்றுப்புறச் சுவருடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோயில் பாக் நீரிணை கடற்கரையில் அமைந்துள்ளதால் கடலோர ஒழுங்கு முறை அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என்று கூறினர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜன. 21-ம் தேதி தனுஷ் கோடி அரிச்சல் முனை கடற்கரையில் மலர் தூவி வழிபாடு செய்த பின்பு, கோதண்டராமர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், இக்கோயிலை சீரமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.