கும்பகோணம் மாசி மகம் விழா: சிவன் கோயில்களில் கொடியேற்றம்

கும்பகோணம் மாசி மகம் விழா: சிவன் கோயில்களில் கொடியேற்றம்
Updated on
2 min read

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மக விழாவையொட்டி சிவன் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது. நாளை பெருமாள் கோயில்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்புப் பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 4 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகமும், ஆண்டுதோறும் நடைபெறுவது மாசி மக விழாவாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு மாசி மக விழாவையொட்டி காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, காசி விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர், சோமநாயகி உடனாய சோமேஸ்வரர், சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர், ஞானாம்பிகையம்மன் உடனாய காளகஸ்தீஸ்வரர், அமிர்தவல்லி உடனாய அபிமுகேஸ்வரர் ஆகியோர் சிறப்பலங்காரத்தில் அந்தந்தக் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

பின்னர், கொடி மரத்திற்கு 21 வகையான மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிவ வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அந்தக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர். தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது.

பிரதான விழாவான வரும் 21-ம் தேதி திருக்கல்யாணமும், 23-ம் தேதி காலை 9 மணிக்கு சோமேஸ்வரர், காலகஸ்தீஸ்வர் கோயில் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு மேல் காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோயில்களின் திருத்தேரோட்டம் மகாமகக் குளத்தை சுற்றி நடைபெறுகிறது.

பிரதான நிகழ்சியான வரும் 24-ம் தேதி மகாமகக் குளக்கரையில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து 25-ம் தேதி சப்தாவர்ணமும், விடையாற்றியும், 26-ம் தேதி சுத்தாபிஷேகம் நடைபெறுகிறது. இதேபோல் நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் ஏக தின உற்சமான வரும் 24-ம் தேதி மாசி மகத்தையொட்டி மகாமகக் குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர்.

இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் 24-ம் தேதி திருத்தேரோட்டமும், 25-ம் தேதி திருமஞ்சன துவாதச ஆராதனமும், 26-ம் தேதி விடையாற்றியும், புஷ்பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது.

சாரங்கபாணி சுவாமி கோயிலில் வரும் 19-ம் தேதி அனுஞ்ஞை, 20-ம் தேதி முதல் 23-ம் தேதி பிரகார புறப்பாடு, ஸ்ரீ சடாரி திருமஞ்சனம், ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலும், பிரதான நிகழ்ச்சியான 24-ம் தேதி காலை 8 மணிக்கு உபயநாச்சியாருடன யாத்ர தானம் கண்டருளி வீதியுலா புறப்பாடும், ஹேமபுஷ்கரணி எனும் பொற்றாமரை குளத்தில் தெப்பத்தில் வீதியுலாவும், தீர்த்தவாரியும், இரவு 11 மணிக்கு பெருமாள் உபயநாச்சியாருடன் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலயமும், கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் கொடிமரம் பாலாலயம் நடைபெற்றுள்ளதால், நிகழாண்டு இந்த விழா நடைபெறவில்லை. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் உயபதாரர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in