Last Updated : 12 Feb, 2024 05:33 AM

 

Published : 12 Feb 2024 05:33 AM
Last Updated : 12 Feb 2024 05:33 AM

கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம்: விரதமிருந்து வடம்பிடித்த தேவஸ்தான ஊழியர்கள்

தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்.

தேவகோட்டை: தேவகோட்டை அருகே கண்டதேவிசொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டத்தில், தேவஸ்தான ஊழியர்கள் விரதமிருந்து, வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் இக்கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத் திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். தேர் வடம்பிடித்து இழுப்பதில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் 1998-ல் தேரோட்டம் நின்றது. பின்னர், பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து, கும்பாபிஷேக பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2012-ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி தேரோட்டத்தை நடத்தவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன் புதிய தேர் செய்யப்பட்டது. ஆனால், தேர் வெள்ளோட்டம் நடத்தப்படவில்லை.

இதுகுறித்து மகா.சிதம்பரம் என்பவர் தொடர்ந்த வழக்கில், தேர் வெள்ளோட்டம் நடத்த உயர்நீதிமன்றம் 2020-ல் உத்தரவிட்டது.ஆனால், கரோனாவால் வெள்ளோட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, மகா.சிதம்பரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அப்போது, ஜன.21-ல் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில், மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால், அப்போது பிரதமர் மோடி ராமேசுவரம் வந்ததால், வெள்ளோட்டம் பிப்.11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. அதன்படி, நேற்றுமுன்தினம் இரவு தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று அதிகாலைகொடிமரம் முன் 2 கலசங்களை வைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், கலசங்களை எடுத்துச் சென்று தேரில் வைத்து, பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6.30 மணிக்கு தேர் வெள்ளோட்டம் தொடங்கியது.

இதற்காக விரதமிருந்த தேவஸ்தான ஊழியர்கள், பாரம்பரிய முறைப்படி இடுப்பில் துண்டு கட்டி, வடம் பிடித்து தேர் இழுத்தனர். அவர்களுக்கு இரு புறமும் நூற்றுக்கணக்கான போலீஸார் அணிவகுத்து பாதுகாப்பாக நின்றனர். தேர் நான்கு ரத வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் காலை 7.55 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அறநிலையத் துறை இணை ஆணையர் பழனிகுமார், உதவி ஆணையர் செல்வராஜ், தேவஸ்தான மேலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர் இழுக்க அனுமதி இல்லாததால், கிராம மக்கள் 4 ரத வீதிகளில் தடுப்பு வேலிகளுக்கு வெளியே நின்று, தரிசனம் செய்தனர்.

தேர் வெள்ளோட்டத்தையொட்டி, ராமநாதபுரம் சரக டிஐஜிதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், 6 இடங்களில் 18 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இதேபோல, தேரோட்டத்தையும் மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x