Last Updated : 27 Feb, 2018 11:01 AM

 

Published : 27 Feb 2018 11:01 AM
Last Updated : 27 Feb 2018 11:01 AM

நாராயண மந்திரத்தை உலகுக்கு சொன்ன ராமானுஜர்! ஒப்பற்ற புண்ணிய பூமி திருக்கோஷ்டியூர்!

திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில், கோயிலுக்கு அருகில் வசித்து வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. இவரிடம் திருமந்திர உபதேசம் பெறுவதற்காக, வைணவ ஆச்சார்யரான ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு நடந்தே இங்கு வந்தார்.

நம்பியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு அழைத்தார் ராமானுஜர்.

திருக்கோஷ்டியூர் நம்பி, ‘யார்?’ என்று கேட்டார்.

‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்றார்.

நம்பி வீட்டிற்குள்ளிருந்தபடியே, ‘நான் செத்து வா!’ என்றார்.

இதைப் புரியாத ராமானுஜரும் சென்றுவிட்டார்.

இப்படியாக, தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைச் சொன்னார். பார்க்கக்கூட இல்லாமல் திருப்பி அனுப்பினார்.

அடுத்த முறை சென்ற ராமானுஜர் ‘அடியேன் வந்திருக்கிறேன்’ என்றார். அப்போதுதான் அவரை உள்ளே அழைத்தார் நம்பி.

‘ஓம் நமோநாராயணாய’ என்ற மந்திர உபதேசத்தை ராமானுஜருக்கு அருளினார். மேலும், மந்திரத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று கட்டளையிட்டார். மீறி எவருக்கேனும் சொன்னால் உனக்கு நரகம் கிடைக்கும் என்றும் எச்சரித்தார்.

ஆனால், ராமானுஜரோ நாராயண மந்திரத்தை எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டும். அதன் வாயிலாக பெருமாளின் திருவடியைச் சரணடைய வேண்டும். எல்லோருக்கும் பரமபதம் கிடைக்க வேண்டும் என எண்ணம் கொண்டார்.

நம்பியின் வீட்டில் இருந்து கிளம்பியவர், விறுவிறுவென கோயிலுக்குள் வந்தார். கோயிலின் விமானத்திற்குள் சென்றார். கோயிலின் உச்சியில் நின்றுகொண்டார். மக்கள் அனைவரையும் குரல் கொடுத்து அழைத்தார். இதோ... நம்மை உய்விக்கும் மந்திரம்... நாராயண மந்திரத்தை எல்லோரும் கேளுங்கள். சொல்லுங்கள். உங்களுக்கு பரமபதம் நிச்சயம். வைகுண்டம் கிடைப்பது உறுதி. மோட்சத்துக்குச் செல்வீர்கள் என்று மந்திரத்தை பெரும் குரலெடுத்து சொன்னார். மந்திரத்தை எல்லோருக்கும் உபதேசித்து அருளினார்.

அவ்வளவுதான். கடும் கோபம் கொண்டார் நம்பி. ராமானுஜரைக் கடிந்து கொண்டார்.

அவரிடம் ராமானுஜர் பணிவுடன் சொன்னார்... ‘எனக்கு நரகம் கிடைத்தாலும், மக்கள் நன்றாக வாழ்வார்களே, அதுபோதும்’ என்றார். இதைக் கேட்டு நெகிழ்ந்த நம்பி, ‘நீ என்னிலும் பெரியவன், எம்பெருமானார்’ என்று சொல்லி கட்டித் தழுவிக்கொண்டார்.

அத்தகைய புண்ணிய பூமி திருக்கோஷ்டியூர் என்கிறது ஸ்தல புராணம்.

கோயிலில், திருக்கோஷ்டியூர் நம்பி, ராமானுஜர் இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மாசி தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தம். அப்போது பக்தர்கள் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள படிகட்டுகளில் அகல்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்துகொள்வார்கள். புதிதாக வேண்டிக் கொள்பவர்கள் இந்த விளக்குகள் எரிந்து முடியும்வரை காத்திருந்து பிறகு அந்த விளக்கை எடுத்துச் செல்வார்கள்.

அந்த விளக்குகளை தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் எனும் பிரார்த்தனையுடன், வீட்டில் வைத்து தினமும் சூடம் காட்டி பிரார்த்தனை செய்வார்கள்.

மறுவருடம் அவர்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் அந்த விளக்கை கொண்டு வந்து தெப்பக்குளத்தில் ஏற்றிவைத்து விட்டு செல்வது வழக்கம். குறிப்பாக திருமணம் நடைபெற வேண்டும் என வருபவர்கள் ஏராளம். இதனால் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் பெண்கள் கூட்டமே நிறைந்திருக்கும்!

இங்கு வந்து தெப்ப விளக்கு ஏற்றினால், நல்ல மண வாழ்க்கை ஏற்படுவது உறுதி. மேலும் ஏராளமான பக்தர்கள், தெப்ப மண்டபத்தை சுற்றி கொட்டகை அமைத்து அன்னதானம் வழங்குவார்கள்!

மாசி மாத தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள், திருவீதியுலா ஆகியன நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான மாசி தெப்பத் திருவிழாவும் விளக்கேற்றி வழிபடும் வைபவமும் வருகிற 1ம் தேதி வியாழக் கிழமை நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x