

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷத்தையொட்டி 2 ஆயிரத்துக்கும் அதிக மான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகா லிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. தை அமாவாசை மற்றும் பிரதோஷ வழிபாட்டுக்காக பிப். 7 முதல் 10-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று பிரதோஷத்தையொட்டி அதிகாலை முதல் தாணிப் பாறை வனத்துறை நுழைவு வாயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை யொட்டி சுந்தர மகாலிங்கம், சுந்தர மூர்த்தி, சந்தன மகாலிங்கம், 18 சித்தர்களுக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயிலில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. நாளை தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராம கிருஷ்ணன், அறங்காவலர் ராஜா பெரியசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.