Last Updated : 27 Jan, 2018 05:29 PM

 

Published : 27 Jan 2018 05:29 PM
Last Updated : 27 Jan 2018 05:29 PM

எனையாளும் சாயிநாதா..! 11: ‘சாய்நாத் மகராஜூக்கு ஜே!’

பாபாவின் அருள் சொல்லும் அற்புதத் தொடர்

சாயிபாபா என்றதும் பலரின் உடனடி கேள்வி... ‘ஷீர்டி போயிருக்கீங்களா... இப்பதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி போயிட்டு வந்தோம்’ என்பார்கள். நாம் கேட்காமலேயே சொல்லப்படும் பதில்... ‘நினைச்சிக்கிட்டே இருக்கோம். எப்ப ஷீர்டிக்கு நாங்க வரணும்னு பாபா முடிவு பண்ணிருப்பார்’ என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஷீர்டி எனும் புண்ணியபூமி பற்றி நண்பர்கள் சிலர், வியந்து வியந்து சில தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

ஷீர்டி தலத்தில், பகவான் சாயிபாபா தவமிருந்த இடம், தூங்கிய அறை, திருச்சமாதியான இடம் என அனைத்தும் அடங்கிய, மிகப்பெரிய, முக்கியமானதொரு வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது ஷீர்டி!

ஆன்மிகத்தின் அடிப்படை, உள்ளேயும் புறத்திலுமாகச் சுத்தம் என்கிறார்கள் சான்றோர்கள். அதற்குத் தக்கபடி, எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்படுகிறது ஆலயம்.

இங்கே சிலிர்க்கத் தக்க விஷயம்... சமாதி மந்திர் பகுதியில் உள்ள சாயிபாபா திருச்சிலை. அப்படியே தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நாம் அந்தப் பகுதியில் எங்கே இருந்தாலும் சாயிபாபா நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே அமைக்கப்பட்டிருப்பது ஆச்சரிய அதிசயம்தான். இதை அங்கே சென்ற அனைவருமே உணர்ந்து சிலிர்த்திருப்பார்கள்.

எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள் பக்தர்கள். அதேபோல் வயது வித்தியாசமில்லாமல் ஷீர்டிக்கு வருகிறார்கள். அவர்கள் அத்தனை பேரின் நலனையும் கருத்தில் கொண்டு, எப்போதும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்து வைத்திருக்கிறார்கள், நிர்வாகத்தினர். அதேபோல் மந்திர் வளாகத்திற்குள், சிறிய அளவிலான மருத்துவமனனயும் உள்ளது. இங்கே, ரத்ததான முகாம், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை வியந்து சொல்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகத்தில், பேருந்து நிலையம் முதலான இடங்களில், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதற்கான இடம் ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே, ஷீர்டியில் மந்திர் வளாகத்திற்குள், தாய்ப்பால் கொடுப்பதற்கான தனியேயான இடம் ஒதுக்கித்தரப்பட்டிருக்கிறது.

மந்திரில் மூன்றாம் நம்பர் நுழைவாயில் உள்ளது. இந்த வழியே சென்றால், குருஸ்தானுக்கு முன்னதாக சமாதி மந்திர் ஜன்னல் வழியே சாயிபாபாவை, அந்தத் திருமேனியை அருமையாகத் தரிசனம் செய்யலாம். இந்த இடத்தில் இருந்து தரிசிப்பது, உண்மையிலேயே மெய்சிலிர்க்கச் செய்கிறது என்று பூரிக்கிறார்கள் பக்தர்கள்!

சாயிபாபா காட்டி அருளிய சேவைப் பணியை, இன்றைக்கும் தொடருகின்றனர் ஷீர்டி நிர்வாகத்தினரும் லட்சக்கணக்கான பக்தர்களும். காசு மற்றும் பணம் செலுத்த உண்டியல் வசதி செய்யப்பட்டிருந்தாலும் ஆபரணங்கள் முதலான பொருட்களைப் பெறுவதற்கு தனி கெளண்ட்டர் வசதி உள்ளது. மேலும் நீண்டகாலமாகவே இங்கு அன்னதானத் திட்டமானது, விரிவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத் திட்டத்தில் நாமும் பங்கேற்கலாம். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அன்னதானத் திட்டத்தில் பணம் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஷீர்டியில் உள்ள மந்திரில், விநாயகப் பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் தனித்தனியே சந்நிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயங்களில் நடைபெறுவது போல, இரண்டு சந்நிதிகளிலும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்புற நடைபெறுகின்றன.

சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு, வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் ஷீர்டியில் கூட்டம் அலைமோதும். தேர்க்கூட்டம் திருவிழாக் கூட்டமென இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். வந்தவண்ணம் இருக்கிறார்கள். வந்து சாயிபாபாவைத் தரிசித்தபடி இருக்கிறார்கள்.

உதி அக்னியில் இடுவதற்கு தேங்காய் வாங்கித் தருவதாக வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். அப்படி தேங்காயைக் கொடுப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது என்கின்றனர்.

இந்த வளாகத்தின் ஒரு பகுதியில் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஸ்டால் ஒன்று உள்ளது. லெண்டித் தோட்டத்துக்கு அருகில் உள்ள இந்தப் புத்தகக் கடையில் தமிழ் மொழி நூல்கள் உட்பட எல்லா மொழியிலும் சாயிபாபா குறித்த புத்தகங்கள் விற்பனையாகின்றன. அதாவது, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மகானாகப் போற்றப்படுகிறார் சாயிபாபா என்பது அங்கே இன்னும் நிரூபணமாகிறது என்று சொல்லி வியக்கிறார்கள். இன்னொரு விஷயம்... மற்ற இடங்களில் வாங்குவதை விட, இங்கே மிக மிகக் குறைந்த விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், துவாரகமாயியில் இருந்து சாவடிக்கு சாயிபாபாவின் திருவுருவப் படமானது, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அப்போது பாபா குறித்த பாடல்களைப் பாடிய படி வருவார்கள் பக்தர்கள். இந்த முறை, எப்போதிருந்தோ இங்கே இருக்கிறது. இந்த சடங்கு முறையானது, இப்போது பல பாபா கோயில்களிலும் செய்யப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

அநேகமாக தினமும் உண்டியல் எண்ணப்படும் கோயில் அல்லது ஆஸ்ரமம் இதுவாகவே இருக்கும் என பிரமித்துச் சொல்கிறார்கள் பக்தர்கள். இந்த உண்டியல் எண்ணும் பணியில் நாமும் சேவையாற்றலாம். முன்னதாகவே பெயரைப் பதிவு செய்துவிட வேண்டும் என்பது அவசியம்!

எல்லா நாளும் கூட்டம்தான். வியாழக்கிழமை என்றால் கூட்டமானது அப்படியே மூன்று மடங்கு இருக்கிறது என்கிறார்கள். அதேபோல் சாயிபாபாவுக்கு நான்கு நேர ஆரத்தி நடைபெறுகிறது. இந்த நான்கில் ஒருமுறையேனும் ஆரத்தி தரிசனம் கிடைத்தால் கூட, அது மகா புண்ணியம். சாயிபாபாவின் பேரருளைப் பெறுவது உறுதி என ஆரத்தி தரிசனம் கண்ட பக்தர்கள், சிலாகித்துச் சொல்கிறார்கள்.

நம்மை மெய்ம்மறக்கச் செய்யும் இன்னொரு விஷயம்... ஷீர்டியில்... ‘சாய்நாத் மகராஜ்க்கு ஜே’ என்கிற பக்தர்களின் கோஷங்கள், கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

‘சாய்நாத் மகராஜூக்கு ஜே!’

ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்... ஜெய் சாய்ராம்!

- அருள்வார்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x