Published : 15 Feb 2018 10:35 AM
Last Updated : 15 Feb 2018 10:35 AM

தெய்வத்தின் குரல்: கன்னாபின்னா அழகு

 

‘க

ன்னாபின்னா’ என்பதையே ஒரு புலவர் நூதன அர்த்தம் கொடுத்து அழகு பண்ணியிருக்கிறார். அவர் ராஜ சபையில் இருந்தவராம். கவிவாணர்களுக்கு ராஜா யதேஷ்டமாகக் பொன்னும் பொருளும் கொடுப்பானாம். அதைப் பார்த்து ஒரு பாமரனுக்கு நாமும் ஒரு கவி பண்ணி ராஜாவுக்கு அர்ப்பணம் செய்து சம்பாவனை வாங்க மாட்டோமா என்று இருந்ததாம். நான் சொன்ன அந்தப் புலவரிடம் போய், “எனக்காக நீங்கள் ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள், அதை ராஜாவுக்கு என்னுடையதாக நான் அர்ப்பணம் செய்து பிழைத்துப் போகிறேன்” என்று கேட்டுக் கொண்டானாம்.

போனால் போகிறது என்று பல கவிகள் இம்மாதிரிப் பாமர ஜனங்களுக்காகவும் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். காளிதாஸன்கூட இப்படி உபகரித்ததாகக் கதைகள் உண்டு. இந்தக் கவியும் அப்படி நல்ல மனசுள்ளவர். ஆனாலும், இவர் அந்த ஆளுக்குக் கவிதை எழுதித் தராமல், என்ன செய்தாரென்றால், “நீ உன் வாயில் என்ன வந்தாலும் அதை ராஜாவுக்கு முன்னாடி சொல்லு. கன்னாபின்னா என்று உளறிக் கொட்டினாலும் பரவாயில்லை, நான் அதற்கு மிகவும் உயர்ந்த அர்த்தம் இருப்பதாக வியாக்யானம் செய்து, உனக்கு ராஜா நல்ல சம்பாவனை கொடுக்கும்படி பண்ணுகிறேன்” என்றாராம்.

ராஜ சபைக்கு அந்த ஆள் வந்தான். “கன்னா பின்னா” என்ற இரண்டு வார்த்தைகளையே கிளிப்பிள்ளை போலச் சொன்னான். சதசிலே இப்படி ஒருத்தன் பேத்துகிறானே என்று ராஜாவுக்கு மகாகோபம் வந்துவிட்டது. அவனைப் புலவர் சட்டென்று சமாதானம் பண்ணினார். “இவர் மஹா பெரிய வித்வான். உங்களை எத்தனை உயர்த்தி ஸ்தோத்ரம் செய்திருக்கிறார் தெரியுமா? ‘கன்னா’ என்றால் ‘கர்ணா’ என்று உங்களைக் கூப்பிடுவதாக அர்த்தம். ‘கர்ணன்’ என்பது ‘கன்னன்’ என்றும் ஆகும்.

கர்நாடகம் என்பதைக் கன்னடம் என்கிறோமல்லவா? அந்த மாதிரி தான தர்மம் செய்வதில் நீங்கள் கர்ணனுக்கு சமமான வள்ளல் என்பதாலேயே ‘கன்னா’ என்று கூப்பிடுகிறார். ‘பின்னா’ என்றால் ‘பின்னால் வந்தவரே’ என்று அர்த்தம். கர்ணனுக்குப் பின்னால் பிறந்தது யார்? தர்மங்களுக்கெல்லாம் உறைவிடமாக, சத்வ சம்பன்னராக இருந்த தர்மபுத்ரர் அல்லவா? அந்த தர்மபுத்ரனுக்கு நீங்கள் நிகரானவர் என்று சொல்கிறார்” என்று வியாக்யானம் பண்ணினாராம்.

ராஜா சந்தோஷப்பட்டு அந்த ஆளுக்கு அக்ஷரலக்ஷம் கொடுத்தானாம். உயர்ந்ததான ஒரு ரசானுபவத்தின் பேரில் இல்லாமல் வெறும் புத்தி சாதுர்யத்தில் பிறப்பதுதான் இது மாதிரியான வார்த்தை விளையாட்டுக்கள் என்றாலும், இவற்றுக்கு உள்ள ஆகர்ஷணத்தால் காளிதாஸன், மாகன், காளமேகம் போன்ற மகாகவிகள் மட்டுமின்றி, மகரிஷிகளாக மகாஞானிகளாக பக்த சிகாமணிகளாக இருந்து கொண்டே காவ்யங்களை, ஸ்தோத்ரங்களை அனுக்ரஹித்திருக்கும் வியாசாசார்யாள், நம்முடைய (சங்கர) ஆசார்யாள், அப்பைய தீக்ஷிதர், ஞான சம்பந்தர் முதலியவர்களும் எப்போதாவது கொஞ்சம் இப்படி விளையாடி இருக்கிறார்கள்.

வார்த்தை விளையாட்டு

நாம் தினந்தினமும் உபயோகப்படுத்துகிற வார்த்தைகளையே கவிகளும் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனாலும், நம்முடைய பேச்சிலே கிடைக்காத அலாதியான நயம் அவர்களுடைய எழுத்திலே உண்டாகிவிடுகிறது. நவ ரசங்களிலும், உயர்ந்த பக்தி பாவங்களிலும் உத்தமமான எண்ணங்களிலும் நம்மைக் கொண்டுபோய்ச் சொருகி ஆனந்தத்தை உண்டாக்குகிற சக்தி கவிகளுக்கு இருக்கிறது.

அலங்காரம். இதைத் தமிழில் அணி என்று சொல்வார்கள்; அப்படி அலங்காரம் பண்ணினால் எப்படி சுமாராக இருக்கிற ஆள் கூட அழகாக ஆகிவிடுகிறாளோ, அதே மாதிரி இந்தக் கவிகள் நாம் சாதாரணமாக உப்புச் சப்பில்லாமல் உபயோகிக்கிற வார்த்தைகளையும் கருத்துகளையும் தங்களுடைய சாதுர்யத்தால் அலங்காரம் பண்ணி அழகான கவிதைகளாக, காவியங்களாக ஆக்கிவிடுகிறார்கள். அதனால் கவிதையை அழகுபடுத்தும் விதிகளைத் தரும் சாஸ்த்ரத்துக்கு ‘அலங்கார சாஸ்த்ரம்’ என்றே பெயர்.

தமிழிலும் உவமை அணி, சிலேடை அணி என்றெல்லாம் சொல்கிறோம். தமிழில் உள்ள அணிநூலுக்கு “தண்டியலங்காரம்” என்றே பேர். தண்டி என்பவர் ஆயிரத்து இருநூறு வருஷத்துக்கு முந்தி காஞ்சீபுரத்தில் இருந்த சம்ஸ்கிருதக் கவி. கவிதா சாஸ்த்ரத்தைப் பற்றி சம்ஸ்கிருதத்தில் “காவ்யாதர்சம்” என்ற புஸ்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புஸ்தகத்தை base பண்ணி, பெரும்பாலும் அதையே தழுவி எண்ணூறு வருஷத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒருவர் எழுதியதுதான் தண்டியலங்காரம்.

அர்த்த சித்ரம் சப்தசித்ரம்

கவிகள் அழகுபடுத்துவதில் இரண்டு தினுசு. அபிப்ராயங்களின் உயர்வினால், அவற்றை வெளியிடும் வார்த்தை நயத்தால் நம் நெஞ்சைத் தொடும்படி, உள்ளத்தை உருக்கும்படி கவிதை பண்ணி அதனால் படிக்கிறவனும் உத்தமமான உணர்ச்சிகளைப் பெறும்படியாகவும், உயர்ந்த கருத்துகளைச் சிந்திக்கும்படியாகவும் செய்வது ஒன்று.

இன்னொன்று வார்த்தைகளை, சப்தங்களை விசித்திரமாகவும் விநோதமாகவும் சொல்லி விளையாட்டுப் பண்ணி நாம் அதில் பிரமித்து, குதூகலித்து, சந்தோஷப்படும்படி செய்வது. இதிலே மனசை உருக்கும்படியாகவோ அறிவில் நமக்கு சாஸ்வதமாக உயர்வு தரும்படியாகவோ எதுவும் இருக்காது.

ஆனாலும் ஒரு அபிப்ராயம் நம் மனசில் நன்றாகப் பதிவதற்கு இது உதவுகிறது. அதோடுகூட, வார்த்தையை வைத்துக்கொண்டு கவிகள் என்ன வித்தை பண்ணி இருக்கிறார்கள் என்று பார்த்து ரசிக்கிறபோது, அநேக வேடிக்கை வித்தைகளைப் பார்த்து நம்முடைய வாழ்க்கைக் கஷ்டங்களை மறந்து ஆனந்தப்படுவது போன்ற ஒரு இன்பம் ஏற்படுகிறது.

இவற்றுக்கு ‘சித்ரகவிதை’ என்று பேர் கொடுத்து வைத்திருக்கிறது. சித்ர கவிதையில் வார்த்தை விளையாட்டால் அர்த்தத்தில் சாதுர்யம் செய்வதை அர்த்தசித்ரமென்றும், சப்தஜாலம் மட்டும் செய்வதை சப்தசித்ரமென்றும் சொல்வார்கள்.

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x