Last Updated : 27 Jan, 2018 09:59 AM

 

Published : 27 Jan 2018 09:59 AM
Last Updated : 27 Jan 2018 09:59 AM

வெற்றிவேல் முருகனுக்கு... 14: லாபம் தருவார் திண்டுக்கல் தண்டாயுதபாணி!

திண்டுக்கல் தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், வியாபாரம் விருத்தியாகும். நஷ்டத்தில் இருந்த நிலை மாறும். லாபம் கொழிக்கச் செய்வார் என்கின்றனர் பக்தர்கள்.

தைப்பூசம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பழநியை நோக்கி, லட்சக்கணக்கான பக்தர்கள், பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். பழநியை நெருங்குவதற்கு முன்னதாக உள்ள, திண்டுக்கல் எனும் நகரத்தை அடைந்துக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

இந்தவேளையில், திண்டுக்கல்லில் உள்ள முருகன் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

திண்டுக்கல்லில் புராதனம் மிக்க ஆலயமாகத் திகழ்கிறது கோட்டை மாரியம்மன் கோயில். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே, மலையடிவாரத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து வருகிறார் ஸ்ரீதண்டாயுதபாணி .

கந்தகோட்டம் என்று இந்தத் தலத்தைப் போற்றிக் கொண்டாடுகின்றனர், திண்டுக்கல் மக்கள். மலையடிவாரத்தில் ஆர்.வி.நகர் எனும் பகுதியில் குடிகொண்டிருக்கும் கந்தபிரானைத் தரிசிக்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் கூடுகிறார்கள் பக்தர்கள்.

ஆலயத்தில், தம்பி பிரதான தெய்வமாகத் திகழ, விநாயகருக்கும் தனிச்சந்நிதி உள்ளது. தம்பியின் கோயிலில் குடிகொண்டிருக்கும் அண்ணன் விநாயகப் பெருமானும் மிகுந்த வரப்பிரசாதியானவர். இவரின் திருநாமம்- ஸ்ரீஜெயம்கொண்ட விநாயகர். ஆக, அண்ணனும் தம்பியுமாக அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இங்கே!

ஜெயம் கொண்ட விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்தியும் வெள்ளெருக்கு மாலை சார்த்தியும் வேண்டிக்கொண்டால், காரியத்தில் உள்ள தடைகள் யாவும் நீங்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் என்கிறார்கள் பக்தர்கள்!

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழநியம்பதியில் ஆட்சி செய்து அருள்பாலிப்பது போலவே, இங்கே உள்ள ஸ்ரீதண்டாயுதபாணியும் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். எனவே இது சக்தி வாய்ந்த தலம் என்றும் பழநிக்கு நிகரான கோயில் என்றும் சொல்லிச் சிலாகிக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீதண்டாயுதபாணியை மனதாரப் பிரார்த்தித்தால், செவ்வாய் தோஷம் நீங்கும், கல்யாண வரம் கைகூடும். அப்படி வேண்டிக்கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தம்பதி சமேதராக வந்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

தொழில், வியாபாரம் மற்றும் வேலையில் அடிக்கடி இடைஞ்சல்ளும் தடைகளும் ஏற்படுகிறதே... என்று வேதனைப்பட்டு புலம்பும் பக்தர்கள், இங்கு வந்து ஸ்ரீதண்டாயுதபாணிக்கு வேல் காணிக்கை செலுத்தி வேண்டிக்கொள்கின்றனர். இதனால், தொழிலில் ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். விரைவில் லாபம் கொழிக்கும். என்கின்றனர் திண்டுக்கல் வியாபாரிகள் பலரும்!

அதேபோல், உத்தியோகத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கப் பெற்று, தடைப்பட்டிருந்த பதவி மற்றும் சம்பள உயர்வு விரைவில் கிடைக்கப் பெறுவர் என்கின்றனர் பக்தர்கள்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் மாதந்தோறும் வருகிற கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திர நாளிலும், சஷ்டி திதியின் போதும் தண்டாயுதபாணி சுவாமிக்கு விளக்கேற்றி வழிபடுவது ரொம்பவே விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

தைப்பூச நாள் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமானுக்குச் செவ்வரளி மாலை சார்த்தி, சிறப்பு அபிஷேக தரிசனம் கண்டால், திருமணத் தடை அகலும். வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும்!

தைத் திருநாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில், 16 வகை அபிஷேகங்கள், சந்தனக்காப்பு அலங்காரம், ராஜ அலங்கார திருக்கோலம் என ஸ்ரீதண்டாயுதபாணி தரிசனம் தருவார். பிறகு, அலங்கரித்த மற்றும் அபிஷேகித்த விபூதி, சந்தனம் ஆகியவற்றைப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அந்த விபூதி, சந்தனத்தை உடலில் பூசிக்கொண்டால், தீராத நோய்களும் விரைவிலேயே தீரும்.

வினைகள் அனைத்தையும் தீர்த்தருள்வான் வேலவன் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!

-வேல் வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x