Last Updated : 14 Feb, 2018 08:50 AM

 

Published : 14 Feb 2018 08:50 AM
Last Updated : 14 Feb 2018 08:50 AM

ஜோதிடம் அறிவோம்! 14: இதுதான்... இப்படித்தான்! திருமணப் பொருத்தத்தில் எது முக்கியம்?

இரு தார தோஷங்கள் குறித்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

இரு தாரமோ... ஒரு தாரமோ... எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி நமக்கெல்லாம் தேவை... சந்தோஷம்தான்! அந்த சந்தோஷம்... மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும். ஆகவே, தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து கொண்டே இருங்கள் அன்பர்களே!

சரி... இரு தார தோஷங்கள் பற்றிப் பார்ப்போம்.

இது முதல் வகை தோஷமான களத்திர இறப்பும்

அதனால் ஏற்படும் மறுமணம் என்னும் தோஷ விபரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருமணப் பொருத்தத்தின் போது, பொதுவாக ஜோதிடர்கள் வெறுமனே பொருத்தம் மட்டும் பார்ப்பார்கள் என நினைக்க வேண்டாம்.

ஒரு ஜாதகத்தைப் பார்க்கும் போது முதலில் கவனிக்கப்படவேண்டியதும் கணிக்கப்பட வேண்டியதும் என்ன தெரியுமா? ஜாதகத்தில்... என்ன தசாபுத்தி நடக்கிறது என்பதும், ஆயுள் ஸ்தானமும், அதன் அதிபதி நிலையும், திரேக்கணம் என்கிற ராசிக் கட்டத்தையும் தான் பார்ப்பார்கள்.

அதாவது ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் மேலே சொன்ன அமைப்புகளை ஆராய்ந்த பிறகே பொருத்தம் பார்க்கப்பட வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அதாவது ஆயுளுக்கு பங்கம் இருக்கிறதா என்பதே முதல் கேள்வி. ஆகவே, ஆயுளுக்கு பங்கம் இல்லை என்றால்தான் மற்ற விஷயங்கள் பார்க்கப்பட வேண்டும்,

ஆனால் எத்தனை ஜோதிடர்கள் இதை கடைபிடிக்கிறார்கள்... எத்தனை ஜோதிடர்களை இவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வைக்கிறோம் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

நான் அறிந்தவரை அதிகம்பேர் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே’ பார்க்கிறார்கள். இந்த நட்சத்திரப் பொருத்தத்தைக் கொண்டே திருமணம் செய்யலாம் என்று சொல்லிவிடுகிறார்கள்.

கடந்த இருபது வருடங்களுக்குள்ளாக, யூஸ் அண்ட் த்ரோ பேனா என வரத் தொடங்கியது. ரீஃபில் போடுவதற்கு எந்தப் பாதையும் இருக்காது. முழுக்க ‘மோல்ட்’ செய்யப்பட்டிருக்கும். எழுத எழுத, தீர்ந்துவிட்டால், தூக்கிப் போட்டுவிட வேண்டியதுதான். இதற்குக் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், யூஸ் அண்ட் த்ரோ என்று தெரிந்து வாங்குகிறோம். தீர்ந்து போய், தூக்கிப் போட்டாலும் அடுத்து ஐந்து ரூபாய் கொடுத்து இன்னொரு பேனா வாங்கிக் கொள்வோம்.

ஆனால் திருமணம் அப்படியில்லைதானே! கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிர் என்பது சத்திய வார்த்தை அல்லவா! வாழையடி வாழையென சந்ததி வளர்க்கிற ஆயுள் பரியந்த உறவு அல்லவா.. கணவன் மனைவி பந்தம்!

அப்படியிருக்க, ஆயுள் பரியந்தமான உறவுக்குள் நுழைவதற்கு முன்னதாக, ஆயுள் குறித்த விஷயத்தைப் பார்ப்பதுதானே சரியாக இருக்கும். இருக்கிறது என்று தெரிந்த பிறகுதானே அடுத்தடுத்த பொருத்தங்கள் பார்ப்பது முறையாக இருக்கும்.

உண்மையில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் குறைந்தது 17 நட்சத்திரங்கள் பொருந்தும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஜோதிட வல்லுநர்களும் இதையே வலியுறுத்துகிறார்கள். அறிவுறுத்தி உள்ளார்கள். அப்படி இருக்க வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே போதுமா? போதுமானதா?

போதாதுதானே!

ஜாதக ரீதியான பொருத்தம் பார்த்து, ஆயுளைக் கணித்து, மாரக திசை கவனித்து, அதன் பிறகே நட்சத்திரப்பொருத்தம் என்கிற தசவித பொருத்தத்தைப் பார்க்க வேண்டும்.

இனிய அன்பர்களே! அன்புக்கு உரிய வாசகர்களே! இங்கே ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் அதாவது பொருத்தம் பார்க்க வருபவர்களும்... இந்த ஆய்வுக்கெல்லாம் நேரம் தராமல் “ எத்தனைப் பொருத்தம் இருக்கு” என பரபரப்பாக வந்து, பரபரப்பாகக் கேட்டு, பரபரப்பாக ஓகே ஓகே என்று சொல்லி பறந்துகொண்டே இருக்கிறார்கள். கிட்டத்தட்ட, ஃபாஸ்ட் ஃபுட் உலகில், மிக வேகமாகப் போய்க்கொண்டிருக்கும் இந்த பரந்துபட்ட உலகில், ஜோதிடத்திலும் ஜாதகத்திலும் ஜாதகப் பொருத்தங்களிலும் வேகமாக இருக்க வேண்டாமே! கொஞ்சம் ஆழ்ந்து நிதானித்து கூர்ந்து அலசி ஆராய்வதே உத்தமம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

’எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோயில் இல்லை; பாக்காத பொண்ணு இல்லை. எப்படியாவது பிள்ளைக்கு திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது’ என்று ஒருவித அயர்ச்சியில் முடிவெடுக்கிறோம். இது சரியா? சரியாகுமா?

இன்னொரு விஷயம்...

அப்படிப்பட்ட திருமணங்களே இன்று நீதிமன்றத்திலும், இணைய முடியாமல் வீட்டிலும் என மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் பலரும்! மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான் ஒன்றல்லவா!

எனவே உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? சும்மா (சுமையில்லாமல் இருத்தல்) இருந்தாலே போதும்.

அதெப்படி சும்மா இருந்தால் திருமணம் நடக்குமா?

நடக்கும். நடந்தே தீரும். கல்யாணத்துக்கு மொய் செய்யச் சென்றவர், மாப்பிள்ளை ஆன கதைகள் நம்மூரில் நிறையவே உண்டு.

அது போலத்தான் கங்கணம் எனும் கல்யாண நேரம் வந்து விட்டால் , தானே திருமணத்தை தரும். திருமணம் இனிதே நடந்தே தீரும். அதைவிடுத்து அலையோ அலையென்று நீங்கள் எவ்வளவு அலைந்தாலும், நடக்கும்போதுதான் நடக்கும் என்பது சத்தியம்!

சரி... இப்ப என்ன சொல்ல வர்றீங்க என்கிறீர்களா?

இருதார தோஷம் இருக்கா? இல்லையா? இருந்தா என்ன செய்யணும்? என்ன பரிகாரம் செய்யணும்? அதை சொல்லுங்க... என்கிறீர்கள்தானே!

உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ இருதார தோஷம் இருந்தால், உங்கள் வருங்கால மாப்பிள்ளை அல்லது மருமகள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11 ம் இடம் பார்த்து மணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவும் முழுமையான பரிகாரம்! அப்படியொரு பரிகாரமே ஆகச் சிறந்தது. ஒரே வழி; நேர்வழி என்பார்களே. அது இதுதான்... இப்படித்தான்!

வேறு எந்த பரிகாரமும் வேலை செய்யாது என்பதே உண்மை.

ஆனானப்பட்ட திரௌபதி எனும் பாஞ்சாலி, ஐவருக்கு மனைவியானாள்.

ஆனானப்பட்ட ஸ்ரீராமரே மனைவியைப் பிரிந்து, மனைவியைத் தேடியலையும் சூழல் ஏற்பட்டது என்கிற புராணக் கதைகள்... நமக்குள் தெளிவைத் தருவதற்காகவே வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

ஆகவே அன்பர்களே! ஜாதகப் பொருத்தமே முக்கியம். மிக மிக முக்கியம். மிக மிக மிக முக்கியம்!

அடுத்து... நட்சத்திரப் பொருத்தம் பற்றிய தகவல்களைப் பார்ப்போமா?

- தெளிவோம்

அடுத்த அத்தியாயம் 19.2.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x