Last Updated : 29 Jan, 2018 05:22 PM

 

Published : 29 Jan 2018 05:22 PM
Last Updated : 29 Jan 2018 05:22 PM

வெற்றி வேல் முருகனுக்கு...16: திருமயிலாடி வந்தால் திருப்பம் நிச்சயம்!

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது புத்தூர் கிராமம். இங்கிருந்து கிளைபிரிந்து செல்லும் சாலையில், 2 கி.மீ. தொலைவு பயணித்தால் திருமயிலாடி எனும் திருத்தலத்தையும் அங்கே உள்ள முருகப்பெருமானின் அற்புதக கோலம் கொண்ட கோயிலையும் அடையலாம்.

தேவர்களைப் படுத்தி எடுப்பதே என்று அசுரர்கள் எல்லோருமே நினைத்தனர் . அந்த அசுரனும் இப்படித்தான், தேவர்களை வதைத்தான். வாட்டியெடுத்தான். கொடுமைப்படுத்தினான். துன்புறுத்தினான். துடிக்கச் செய்து கலங்கடித்தான். கதறடித்தான்.

இந்த நிலையில் அபிசார வேள்வி ஒன்றை நடத்தினான். அந்த வேள்வியின் ஹோமத் தீயில் இருந்து ஜுரதேவதை வெளிப்பட்டாள். இந்திரலோகத்துக்குச் சென்றாள்; அங்கேயிருந்த தேவர்கள் சிலருக்கு வெப்பு நோய் வந்தது; சிலரை வைசூரி தாக்கியது; சிலர் ஜுரம் வந்து அவதிப்பட்டனர். இன்னும் பலர் அம்மை வந்து படுத்தபடுக்கையானார்கள்.

இதனால் தேவலோங்கமே திமிலோகபட்டது. கலங்கிக் கதறிய தேவர்கள், முருகப்பெருமானிடம் ஓடினர்; ‘நீதான் காப்பாத்தணும்‘ எனக் கண்ணீர்விட்டனர். இதையடுத்து, பூலோகத்துக்கு வந்த முருகப்பெருமான், வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்தார். வில்வாரண்யம் என்றால், வில்வ மரங்கள் நிறைந்த வனம் என்று அர்த்தம்.

அன்னை பார்வதிதேவிக்குத் திருக்காட்சி தந்த லிங்கமூர்த்தம் அந்த வில்வாரண்யத்தில் இருந்தது. தனது வேலாயுதத்தால் பூமியில் குளம் ஒன்றை உண்டுபண்ணினார் முருகக் கடவுள். அந்தக் குளத்தில் நீராடிவிட்டு, வடக்குதிசை நோக்கி அமர்ந்தபடி, சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். இந்தத் தவத்தின் பலனாக, சீதளாதேவி அங்கே பிரசன்னமானாள்.

அதையடுத்து ஜுரதேவதைக்கும் சீதளாதேவிக்கும் கடும் யுத்தம் மூண்டது. இதில் முருகப்பெருமானால், முருகப்பெருமானுக்காக, தேவர் பெருமக்களின் நலனுக்காக வந்து போரிட்ட சீதளாதேவி ஜெயித்தாள்.

இதன் பிறகு, தைரியமும் உற்சாகமுமாக, உத்வேகத்துடன்... கந்தனின் அருளோடு, தேவர்கள் அசுரர்களுடன் போரிட்டார்கள். வென்றார்கள்.நிம்மதியானார்கள்.

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் மேலிட, இந்திரன் ஓடிவந்து, வடிவேலனை வணங்கினான். ‘இந்தத் தலத்தில், வடக்குப்பார்த்தபடி, யோக நிலையில் எப்போதும் இருந்து, எல்லோரையும் காத்தருள வேண்டும்‘ என்று கோரிக்கையும் வைத்தான்.

‘அப்படியே ஆகட்டும்‘ என்றார் முருகக் கடவுள். அதன்படி வடக்குப் பார்த்தபடி, நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீபாலசுப்ரமணியராக காட்சி தந்து, அருள்பாலித்து வருகிறார் முருகப்பெருமான்.

இங்கே... வடக்குப் பார்த்தபடி காட்சி தருகிறார் கந்தபிரான். நாம் தெற்கு முகமாக நின்றபடி, வணங்கி வழிபடுவோம். இவ்வாறு வழிபட்டால்... பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும். யோகமும் ஞானமும் தந்தருள்வார். எதிரிகள் தொல்லை இனி இல்லை என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள்!

சரி... அதென்ன மயிலாடி?

அழகு தொடர்பான போட்டியும் கர்வமும் எல்லோருக்கும் எல்லாத் தருணங்களிலும் இருக்கத்தான் செய்யும் போல! ஒருமுறை சிவபெருமான், தன் திருவிளையாடலை நிகழ்த்த முடிவு செய்தார். அன்றைக்கு அவர் எடுத்த விளையாட்டு... அழகு!

ஆமாம்... ‘நானே அழகு’ என்று சொல்லிப் புன்னகைத்தார் ஈசன். ‘ஹை... அதெப்படி? நல்ல கதையா இருக்கே. நாந்தான் அழகு’ என்றாள் உமையவள். அவ்வளவுதான். பிறகென்ன... அங்கே இரண்டுபேருக்கும் தொடங்கியது சண்டை.

நடக்கிற வாய்ச்சண்டையில் உமையவளின் கை ஓங்கியது. பார்த்தார் சிவனார்... திருக்கயிலாயத்தில் இருந்து சட்டென மறைந்தார். அதைக் கண்டு துடித்து வெடித்தாள் பார்வதிதேவி.

‘இந்த உருவம்தானே அழகு என நம்மைச் சொல்லவைத்தது!’ என எண்ணினாள். உடலைத் துறந்தாள். உருவத்தை இழந்தாள். மயிலாக மாறினாள். சிவபெருமானை நினைத்து தவத்தில் மூழ்கிப் போனாள்.

பெண்ணை , அவளின் அழகைச் சொல்லும் போது, ‘மயில் போல் சாயல் கொண்டவள்’ என்பார்கள் அல்லவா. இப்போது உண்மையில் மயிலாக இருந்து, தானே அழகு கொண்டவள் என்பதை சொல்லாமல் சொல்லினாள் தேவி. இதைப் புரிந்து உணர்ந்தவர் போல் மகிழ்ந்தார் சிவபெருமான்!

இதில் மகிழ்ந்த சிவனார், அழகிய லிங்கத் திருமேனியராகக் காட்சி தந்தார். அவள் தவம் செய்த இடத்துக்கே தன்னைத் தேடி வந்து மனமிரங்கி தரிசனம் தந்தவரைப் பார்த்து நெக்குருகிப் போனாள். தோகையை விரித்து மனம் குளிரக் குளிர ஆடினாள். எனவே இந்தத் தலம், திருமயிலாடி என்று பெயர் பெற்றதாகச் சொலகிறது ஸ்தல புராணம்.

இங்கே இந்தத் தலத்தில் சிவபெருமானின் திருநாமம் என்ன தெரியுமா? ஸ்ரீசுந்தரேஸ்வரர். சுந்தரர் என்றால் அழகு என்று அர்த்தம். ஆக மயிலாக வந்த பார்வதிதேவி அழகு. சுந்தரர் எனும் திருநாமம் கொண்ட சிவனார் அழகு. எல்லாவற்றுக்கும் மேலாக, அழகன் என்று சொல்லப்படும் முருகன் ஆட்சி செலுத்தும் இந்தத் தலம் என்று தலத்தின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டே போகிறார்கள் பக்தர்கள்!

அவ்வளவு ஏன்... இங்கே உள்ள விநாயகரின் திருநாமம்... ஸ்ரீசுந்தர விநாயகர். கண்வ மகரிஷி இங்கு ஆஸ்ரமம் அமைத்து சிவபூஜை யில் ஈடுபட்டார். முன்னதாக ஸ்ரீவிநாயகரையும் பிரதிஷ்டை செய்து வணங்கினாராம். இவர், ஸ்ரீசுந்தர விநாயகர் எனப் போற்றப்படுகிறார். இங்கு வந்து, ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய இருவரையும் வணங்கி வழிபட்டால், முகத்தில் தேஜஸ் கூடும். நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம்!

இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... இங்கே ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரகதாம்பாள் என இரண்டு தேவியரின் சந்நிதிகள் அடுத்தடுத்து காட்சி தருகின்றன. இருவருக்கும் அபிஷேக- ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. இந்த இரண்டு தேவியரையும் அர்ச்சனை செய்து வணங்கினால், செல்வம் பெருகும். நல்ல அன்பான வரன் தேடி வரும். பிள்ளைச் செல்வம் கிடைக்கப்பெற்று, சகல ஐஸ்வரியங்களுடனும் சுபிட்சம் பொங்கவும் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

கிழக்குப் பார்த்த மூன்றடுக்குக் கோபுரம். உள்ளே... வடக்குப் பார்த்த நிலையில், ஸ்ரீபாலசுப்ரமணியர். கருவறையில், ஸ்ரீசுந்தரேஸ்வரர் கிழக்கு திசை பார்த்தபடி இருக்க, ஸ்ரீபிரஹன்நாயகி மற்றும் ஸ்ரீபெரியநாயகி என இரண்டு அம்பிகையும் தெற்குப் பார்த்தபடி அருளுகின்றனர். நாலா திசையிலும் இயங்கக் கூடிய, பயணிக்கக் கூடிய நம் வாழ்க்கையை நல்ல எதிர்காலத்துடன் அமைத்துக் கொடுக்கும் ஆலயம் இது!

வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகக்கடவுள். இங்கு, பாதரட்சைக்குப் பதிலாக மயிலையே அணிந்திருக்கிறாராம் கந்தப்பன். அதாவது, அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கி காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார். இடதுகாலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் முகத்தையே பார்க்கிறது மயில். இப்படியான காட்சி அரிதினும் அரிது என்கிறார்கள் முருக பக்தர்கள்!

முருகப்பெருமான் உருவாக்கிய திருக்குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி, முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். முடிந்தவர்கள், முருகப்பெருமானுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபடுகிறார்கள். செவ்வரளி மாலை சார்த்தி, குமரனை வணங்கினால், குறைவின்றி வாழச் செய்வான் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்!

மயிலாடுதுறை கோயிலுக்குச் செல்லும் போதோ, சீர்காழி சட்டநாதரை தரிசிக்கும் போதோ, வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று தரிச்க்கும் போதோ, சிதம்பரம் ஆடல்வல்லானை வணங்கும் போதோ... அப்படியே திருமயிலாடிக்கும் வாருங்கள்... திருப்பங்கள், வாழ்வில் காண்பது நிச்சயம்!

- வேல் வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x