Last Updated : 20 Feb, 2018 03:53 PM

 

Published : 20 Feb 2018 03:53 PM
Last Updated : 20 Feb 2018 03:53 PM

குருவே... யோகி ராமா! 55: ‘சன்னதி தெரு..!’

பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்

இப்போது போல அப்போதெல்லாம் திருவண்ணாமலைக்கு எல்லா ஊர்களில் இருந்தும் இவ்வளவு பஸ் வசதியெல்லாம் இல்லை. சென்னையில் இருந்து பஸ் வசதி ஓரளவு இருந்தது. திருச்சியில் இருந்தும் மதுரையில் இருந்தும் கோவையில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் அவ்வளவாக பஸ்கள் இயக்கப்படவில்லை அப்போது!

தஞ்சாவூரில் இருந்து கூட பஸ் கிடையாது. அந்த ஊர் பஸ், இந்த ஊர் பஸ் என்றுதான் மாறிமாறி வரவேண்டும். விழுப்புரம் வரை வந்துவிட்டு, அங்கிருந்து திருவண்ணாமலைக்கு பஸ் ஏறிச் செல்வார்கள்.

மாதந்தோறும் பெளர்ணமி கிரிவலத்திற்கு, இன்றைக்கு உள்ள கூட்டம் போலெல்லாம் அப்போது கிடையாது. இன்றைக்கு பெளர்ணமிக்கு இரண்டு நாளைக்கு முன்பிருந்தே, சிறப்புப் பேருந்து என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, பஸ் கொள்ளாத கூட்டத்துடன் வரிசைகட்டி திருவண்ணாமலைக்கு வந்துகொண்டே இருப்பதைப் பார்க்கமுடிகிறது.

பெளர்ணமிக்கு முதல் நாளில் இருந்தே கிரிவலம் தொடங்கிவிடுகிறார்கள் பக்தர்கள். பெளர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள். பஸ்கள் மட்டும் இல்லாமல், தனியே பஸ் வைத்துக் கொண்டும், வேன்களிலும் கார்களிலுமாக ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள்.

முன்பு, பகவான் ரமணரைத் தரிசிக்க வந்தார்கள். அதேபோல் சேஷாத்திரி சுவாமிகளைத் தரிசிக்க வந்தார்கள். அதையடுத்து, விசிறி சாமியாரைத் தரிசிக்க வரத் தொடங்கினார்கள். பகவான் யோகி ராம்சுரத்குமாரை, அப்போது எல்லோரும் விசிறி சாமியார் என்றுதான் அழைத்தார்கள்.

திருவண்ணாமலைக்கு வந்து இறங்குவார்கள். ரயில்நிலையத்தில் இறங்கியதும் வெளியே வந்து புன்னைமரம் நோக்கிப் போவார்கள். அங்கே, மரத்தடியிலோ அந்த இடத்தைச் சுற்றியோ பகவான் இருக்கிறாரா என்று பார்ப்பார்கள். பிறகு அங்கிருப்பவர்களிடம், ‘விசிறி சாமியார் எந்தப் பக்கம் போனாருங்க’ என்று கேட்டுக் கேட்டு, அந்த திசை நோக்கி, இடம் நோக்கி சென்று தேடுவார்கள். தேடிப் பார்த்து, பழங்களும் உணவுப் பொட்டலமும் கொடுத்து, நமஸ்கரிப்பார்கள்.

பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்குவோரும் இப்படித்தான். இறங்கியதும் ஆட்டோ கேட்பார்கள். ‘ரயில்வே ஸ்டேஷன் போகணும்பா’ என்பார்கள். உடனே ஆட்டோக்காரர், ‘விசிறி சாமியாரைப் பாக்கணுமா’ என்று சட்டென்று கேட்பார்கள். ‘எப்படி சொல்றீங்க. எப்படித் தெரியும்” என்று அதிர்ச்சியுடன் கேட்பார்கள் பக்தர்கள். ’தெனமும் உங்களை மாதிரி பத்துப்பதினஞ்சு பேராவது வர்றாங்களே...’ என்று விளக்கம் சொல்வார்கள்.

இன்னும் சில ஆட்டோ அன்பர்கள், மிகத் தெளிவாக இருப்பார்கள். பஸ் விட்டு இறங்கி, இதேபோல் கேட்கும்போதே, ‘விசிறி சாமியார் ரயில்வே ஸ்டேஷனாண்ட இல்லீங்க. கிரிவலப் பாதைல இப்பதான் பாத்தேன்.’ என்பார்கள். அதேபோல், கிரிவலப் பாதையில், எங்கோ ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பார் பகவான் யோகி ராம்சுரத்குமார்.

மதுரையில் இருந்தும் காரைக்குடியில் இருந்தும் திருநெல்வேலியில் இருந்தும் அருப்புகோட்டையில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், இப்படி தினமும் வந்தவண்ணம் இருந்தார்கள். பகவான் யோகி ராம்சுரத்குமாரைத் தரிசித்துச் சென்றார்கள்.

சிலசமயம்... ரயிலடியிலோ பஸ் ஸ்டாண்டிலோ கோயில் பக்கத்திலோ கிரிவலப் பாதையிலோ என எங்கும் இருக்கமாட்டார் பகவான் யோகி ராம்சுரத்குமார். ‘விசிறி சாமியாரைப் பாத்தீங்களா’ என்று கேட்டால், முந்தாநேத்துதான் பாத்தேன். முந்தா நேத்து ராத்திரி ரமணாஸ்ரமம் பக்கம் பாத்ததா சொன்னாங்க. அப்புறம் யாரும் பாக்கலையாமாம்... என்றெல்லாம் சொல்லுவார்கள்.

தினமும் பக்தர்கள் வந்து தேடிவிட்டு, இறுகிய முகத்துடன் மனமே இல்லாமல் திரும்பிச் செல்லுவார்கள். ‘எங்கே போனார்னே தெரியலியேப்பா’ என்று ஆளாளுக்குப் பதில் கேட்டுக்கொள்வார்கள்.

பார்த்தால், பகவான் யோகி ராம்சுரத்குமார், மலையில் இருந்திருப்பார். மூன்று நாட்களுக்கு முன்பு மலையேறியவர், நான்காம் நாளாக மலையை விட்டு இறங்கி வந்திருப்பார். அந்த நாட்கள் முழுவதும் ஒருவாய் கூட சாப்பிட்டிருக்கமாட்டார். சாப்பாடு எப்படிக் கிடைக்கும். மலையில் ஏது உணவு.

மகானுக்கு உணவேது... தூக்கமேது.

ஆனால் பக்தர்கள்தான் சாமியாரைப் பார்க்கமுடியலியே எனும் வருத்தத்துடன் சாப்பிடக் கூட இல்லாமல் திரும்பிச் செல்வார்கள். பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு என வாங்கி வந்த பழங்களை சாப்பிட மனசே வராது அவர்களுக்கு.

இப்படி, திருவண்ணாமலையைத் தேடி, திருவண்ணாமலையில் பகவான் யோகி ராம்சுரத்குமார் இருக்கும் இடத்தைத் தேடி, கண்டுபிடித்து, அவரைத் தரிசித்து வேண்டிச் செல்லும் பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகிக் கொண்டே வந்தார்கள்.

சொன்னது போல, அருப்புகோட்டை, தூத்துக்குடி, விருதுநகர் என அந்தப் பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக வரத் தொடங்கினார்கள். தங்களின் பிறந்தநாளிலும் கல்யாண நாளிலும் குழந்தைகளின் பிறந்தநாளிலும் கல்யாண நாளிலும், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னதாகவும் திருமணம் செய்து வைப்பதற்கு முன்பாகவும் திருமணம் செய்து மணமக்களை அழைத்துக் கொண்டும் என இப்படியான ஏதோவொரு காரணங்களைச் சொல்லிக் கொண்டு, திருவண்ணாமலைக்கு வந்தார்கள். பகவான் யோகி ராம்சுரத்குமாரைத் தரிசித்தார்கள்.

‘என் தகப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறான்’ எனும் பகவானின் ஆசியும் அவரின் குரலும் அந்தக் குழந்தைச் சிரிப்பும் கண்டு பூரித்துப் போனார்கள் பக்தர்கள்.

வேலை கேட்டு தரிசித்தார்கள். வேலையில் நிரந்தரம் கேட்டு கோரிக்கை விடுத்தார்கள். வியாபாரம் செழிக்கப் பிரார்த்தித்தார்கள். புதிய வியாபாரம் செய்ய, அனுமதியும் ஆசியும் கேட்டு நமஸ்கரித்தார்கள். எல்லோருக்கும் ஆசி கிடைத்தது. எல்லாவற்றுக்கும் ஆதரவும் அனுமதியும் கிடைத்தன.

ஆனால் என்ன... பகவான் எங்கே இருக்கிறார், எப்போது எங்கே இருப்பார் என்பவையெல்லாம் தெரியவில்லை. எவருக்கும் தெரியவில்லை.

இந்தக் காலகட்டத்தில், அன்பர்கள் அதிகரிக்கத் தொடங்கினார்கள்.

வெயில் மழைன்னு பகவான் அலையறார். அவருக்கு ஒரு இடம் வேணும் என்று சிலர் முடிவு செய்தார்கள்.

திருவண்ணாமலையின் முகவரிகளில் ஒன்றாகத் திகழும் பகவான் யோகி ராம்சுரத்குமாருக்கு

திருவண்ணாமலையில் ரயிலடி புன்னை மரத்தடிக்குப் பிறகு அவருக்கே அவருக்கான ஓரிடம் கிடைத்தது. அன்பர்களால் வழங்கப்பட்டது.

அது... சன்னதி தெரு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலையொட்டி உள்ள சன்னதி தெரு!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா!

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x