

மனமது செம்மையானால், மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிற முதுமொழி நாம் அறிவோம்தானே! அந்த மனமானது செம்மையாக, சிறப்புடன், தெளிந்த நீரோடை போல் இருப்பதற்கு யார் காரணம் தெரியுமா? சந்திர பகவான் தான்! அப்பேர்ப்பட்ட வகையில், நம்முடைய மனது செம்மையாகத் திகழ்வதற்கு, சந்திர பகவான் காயத்ரி மந்திரம் மிகுந்த பலன்களைத் தரும் என்பது உறுதி!
‘என்னன்னு தெரியல. மனசே சரியில்லப்பா’ என்று சொல்லாதவர்களே இல்லை. ‘இப்பதான் மனசு தக்கையா, லேசா இருக்கு’ என்று சொல்லாதவர்கள் கூட எவருமே இல்லைதானே. இந்த ‘சரியில்லை’க்கும் ‘லேசா இருக்கு’க்கும் ஆதாரகர்த்தாவே சந்திர பகவான் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
சந்திரன், மனோகாரகன். நம் மனதை அழகாக்கி, அதன் மூலம் முகத்தையும் தேஜஸாக்கி, மனதில் குழப்பமில்லாமல் கிலேசம் எனப்படும் பயமேதுமில்லாமல் செய்பவன் அவன். அதேபோல், மனதில் விகல்ப சிந்தனைகளையும் விகார குணங்களையும் உண்டு பண்ணி, முகத்தையும் பொலிவிழக்கச் செய்து, நம்மையும் சோர்வுக்குள்ளாக்கி, ‘என்னன்னே தெரியல... மனசே குழப்பமா இருக்கு’ என்று புலம்ப வைப்பவன் அவன். கற்பனைத் திறனை வளர்த்து, கலையில் சிறந்து விளங்கச் செய்வதில் ஹீரோவாகவும் குழப்பத்தை ஏற்படுத்தி, பயத்தை உண்டு பண்ணுவதில் வில்லனாகவும் ‘டபுள் ஆக்ட்’ கொடுப்பவன் என்று சந்திரனைச் சொல்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
சந்திர கிரகணம், வரும் 31.1.18 புதன்கிழமை அன்று, மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது.
இந்த வேளையில், வெளியில் எங்கும் செல்லாமல், இறை வழிபாட்டில் ஈடுபடுவது, ஆயிரம் மடங்கு பலன்களை வாரி வழங்கும். சந்திர பகவானும் நம் மனதைத் தெளிவாக்குவார். இருக்கிற குழப்பங்களையெல்லாம் களைந்து, பயத்தையெல்லாம் விரட்டியடிப்பார். எதிர்ப்புகளை அழித்து, காரியத்தில் வீரியத்தைத் தந்தருள்வார் சந்திர பகவான்!
அந்த வேளையில், சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியை மனதுக்குள் உச்சரித்து, சந்திரனைப் பிரார்ர்த்தனை செய்வது, இன்னும் இன்னும் மனதிலும் புத்தியிலும் தெளிவைக் கொடுக்கும். தெளிவுடன் இருந்து செயலாற்றினால், எல்லாக் காரியமும் வீரியமாகும். காரியம் வீரியமானால், சகலமும் வெற்றியே... சகலமும் நிம்மதியே... என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
சந்திர பகவானுக்கு உரிய காயத்ரி இதுதான்!
ஓம் பத்மவத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தன்னஸ் சந்திரஹ் ப்ரசோதயாத்
அன்றைய தினம், அதாவது சந்திர கிரகண வேளையில், இந்த ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே இருங்கள். ஏற்கெனவே குளிர்ந்த நிலையில் இருக்கும் சந்திரன், இன்னும் இன்னும் குளிர்ந்து போவார். நம்மையும் நம் மனதையும் குளிரச்செய்வார்!