Last Updated : 14 Dec, 2017 10:44 AM

 

Published : 14 Dec 2017 10:44 AM
Last Updated : 14 Dec 2017 10:44 AM

குருவே... யோகி ராமா 15: தெற்கே போ... - சாதுவின் கட்டளை..!

வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள் என்று கதைகளில் படித்திருப்போம். ஆனால் இது கதையல்ல. வெறும் கற்பனைக்காகச் சொல்லப்பட்ட வாசகம் அல்ல. ஒவ்வொருவர் வாழ்விலும் தேவர்கள் நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிற தருணங்கள், கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. தேவர்கள் ஆசி வழங்கியபடியே இருக்கிறார்கள்.

உலகில், சத்விஷயங்கள் என்று எதையெல்லாம் சொல்லுகிறோமோ... நம்முடைய செயலானது எவரேனும் ஒருவருக்காவது நன்மை பயக்கிற காரியமாக இருக்கிறதென்றால், அங்கே தேவர்கள் நம்மை ஆசீர்வதிக்கத் தயாராகி விடுகிறார்கள். நம் மீது பூக்களைச் சொரிந்து, ‘வாழ்க வாழ்க...’ என்று நம்மை வாழ்த்துகிறார்கள்.

பசியால் வாடித் தவிப்பவருக்கோ, அறிவுப்பசி தேடும் ஏழை மாணவர்களுக்கோ நோயுற்ற உடலைப் பேணிக்காக்க வசதிகள் இல்லாதவருக்கோ நாம் நம்மால் முடிந்ததைச் செய்து, உணவு வழங்கி பசியாற்றும் வேளையில், முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியும் நமக்குக் கிடைப்பதாகச் சொல்கின்றன சாஸ்திரங்கள்.

படிப்பு தாகத்துடன் ஆனால் படிக்க வசதியில்லாமல் தவிக்கிற மாணவர்களுக்கு, கட்டணமோ சீருடையோ புத்தகங்களோ காலணிகளோ அவ்வளவு ஏன்... பேனா பென்சில் வாங்கித் தந்தால் கூட, அங்கே சத்விஷயம் நிகழ்ந்ததால் பூரித்துப் போகிறார்களாம் தேவர்கள் என்கிற தேவதைகள்.

இந்த எண்ணம், நற்செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. அந்தச் செயல்களை இன்னும் இன்னுமாக விரிவுபடுத்துவதற்காக உழைக்கத் துடிக்கிறது. உழைப்பின் மேன்மையும் தானத்தின் நிறைவும் அறிந்துவிட, வாழ்க்கையானது அலைகளற்ற நதியில், சலனமே இல்லாமல் போவது போல் போய்க்கொண்டே இருக்கும்.

ராம்சுரத் குன்வருக்கு , சுவாமி விவேகானந்தர் குரல் வழி வந்த அசரீரியின் போது, அந்த வேளையில், முப்பத்து முக்கோடி தேவர்களும் பூரித்துப் போனார்கள். பூமாரி பொழிந்து ஆசீர்வதித்தார்கள்.

‘It is vivekanandha calling you. What you are doing now is not your Work.' என்று விவேகானந்தரின் குரல், அவருக்கு ஏதோ சொல்லிற்று. இதை பலமுறை, பகவான் யோகி ராம்சுரத்குமார் சொல்லியிருக்கிறார். ‘இது உன் வேலை அல்ல. இப்போது பார்த்துக் கொண்டிருப்பது உனக்கான வேலை அல்ல!’

சரி... என் வேலை எது. எதற்காக இந்தப் பிறப்பு. இந்தப் பிறப்பின் பணிகள் என்ன. நான் என்ன செய்யவேண்டும். எங்கிருந்து , யாருக்கு என்ன விதமான உதவிகள் செய்யவேண்டும். யோசித்தார். இடையறாது யோசித்தார்.

அப்போதுதான், Lights on Yoga' எனும் நூல், இன்னும் பல கதவுகளைத் திறந்தன. விடை தெரியாத கேள்விகளுக்கு விடையாக உள்ளே வந்தன. ஒளியாய் பிரகாசித்தன. ‘அடேங்கப்பா... எத்தனை சத்தியமான எழுத்துகள், இந்தப் புத்தகத்தில்’ என்று வியந்தார் ராம்சுரத் குன்வர்.

படித்துவிட்டு, படித்ததை உள்வாங்கிக் கொண்டு, உள்வாங்கியதன் பின்னாலேயே ஓட, ஓர் நிதானம் வந்துவிட்டது. ஓடிய இடத்தில் நின்று இளைப்பாறும் விதமாக அதனுடன் நின்று பார்க்க... ஏதோ ஓர் ஒளி தெரிந்தது. அந்த ஒளி, மனவெளி முழுவதும் பரவியது. பிரகாசித்தது. ஜொலித்தது. எழுதியது ஏதோவொன்றை நிகழ்த்த... எழுதியவரைச் சந்தித்தால்... இன்னும் நிகழும் என்பதாக யோசித்தார். ‘இவரைப் பார்க்கணுமே...’ என்று விரும்பினார்.

‘அப்படியென்றால்... மீண்டும் ஒரு பயணம் மேற்கொள்ளவேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டார். அந்தப் பயணம் எப்போது? தெரியவில்லை. பயணம் எங்கே? அதுவும் புலப்படவில்லை. யாரைப் பார்க்க வேண்டும் ? அது மட்டும் புரிந்தது.

அவரைப் பார்க்க வேண்டும். ‘யோகாவின் மீதான வெளிச்சம்’ என்று எழுதியவரைத் தரிசிக்க வேண்டும். யோகா மீது வெளிச்சம் என்று சொல்லி, நமக்குள் ஓர் வெளிச்சத்தைப் படரவிட்ட எழுத்துகளுக்கு உரியவரைத் தரிசித்தே ஆகவேண்டும் என உறுதி கொண்டார். அவர்... பாண்டிச்சேரி அரவிந்தர். ஸ்ரீஅரவிந்தரின் தரிசனம் குறித்த சிந்தனையே ராம்சுரத்குன்வருக்கு மேலோங்கியிருந்தது.

எப்போது செல்வது? அதுதான் தெரியவில்லை. எப்போது செல்லவேண்டும் என்று ஏதேனும் குரல் சொல்லும். அந்த ஒலியையே வழியாக்கிக் கொள்ளவேண்டும். எங்கிருந்தேனும் குரல் வருமா. விவேகானந்தரின் குரலே ஒலிக்குமா. பலவாறு யோசித்தபடி தன் அன்றாடப் பணிகளில் முழுகவனத்துடன் ஈடுபட்டார்.

ஆனால் இந்த முறை குரலேதும் வரவில்லை. நேராகவே சொல்லப்பட்டது.

கங்கைக் கரையில், குளிர்ந்த மாலை வேளையில், பள்ளிக்கெல்லாம் சென்று பணிகளை முடித்திருந்த ராம்சுரத் குன்வரை, கரையில் அமர்ந்திருந்த சாது ஒருவர் கைதட்டி அழைத்தார். ‘வா’ என்பது போல் சைகை செய்தார்.

ராம்சுரத் குன்வர் அந்த சாதுவை நோக்கி நடந்தார். அவருக்கு எதிரே போய் நின்றார். சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். எழுந்து கைகூப்பி வணங்கினார். கைகூப்பிய நிலையிலேயே நின்றார்.

அந்த சாது... முகத்தில் புன்னகை ததும்ப, கண்களில் கருணை பிரவாகமெடுக்க... ராம்சுரத் குன்வரைப் பார்த்துச் சொன்னார்...

‘நீ தெற்கே போயிடு. தெற்குதான் உன் இடம். அங்கிருந்துதான் உன் வேலையைச் செய்யணும்’ என்றார்.

வேலை தெரியவில்லை. திசை மட்டும் தெரிந்துவிட்டது. அந்தத் திசையில்தான்... தெற்கில்தான் இருக்கிறார் சுவாமி அரவிந்தர். அவரைத் தரிசிக்கும் ஆவல் இன்னும் அதிகரித்தது.

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x