

கேது திசை பற்றிய பதிவுகளை வாசித்த சில வாசகர்கள் நிறைய சந்தேகங்களைக் கேட்டுள்ளனர்.
அவர்களுக்காக சில பதில்கள்... சில பதிவுகள்.
கேது திசையில் ஆண்களுக்கும் திருமணம் செய்யக்கூடாதா?
ஆம் ஆண்,பெண் யாராக இருந்தாலும் கேது திசை நடக்கும் போது, திருமணம் செய்யக்கூடாது. ஒருவேளை திருமணம் செய்தால் சிறப்பிருக்காது.
மேலும் பரிகாரங்கள் உள்ளனவா?
கேதுவுக்கு உரிய தானியம் கொள்ளு. எனவே, கேது திசை நடந்தாலும், உங்கள் ராசியில் கேது வந்தாலும் (தற்போது மகர ராசியில் கேது இருக்கிறார்) தினமும் சிறிதளவு கொள்ளு பேப்பரில் மடித்து இரவில் தலையணைக்கு அடியில் வைத்து உறங்குங்கள். பிறகு காலையில் அதை எடுத்து பூஜை அறையில் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி வாரம் முழுவதும் சேர்த்த கொள்ளு தானியத்தை சனிக்கிழமை அன்று நவக்கிரகத்தில் உள்ள கேது பகவான் காலடியில் சமர்ப்பித்து அதன் மீது விளக்கேற்றி வழிபட கேதுவின் ஆதிக்கம் குறையும்.
மேலும் சனிக்கிழமைகளில் கொள்ளு சுண்டல் செய்து கேது பகவானுக்கு நைவேத்தியம் செய்து தானமாக வழங்குங்கள். கேதுவின் கருணை கிடைக்கும்.
கேது என்பவர் சாதுக்கள், சந்நியாசிகள், வாழ வழியில்லாதவர்கள், நோயாளிகளைக் குறிப்பவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எனவே இவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளை செய்துவாருங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.
சரி... இப்போது மாங்கல்ய தோஷம் பற்றி பார்க்கலாம். சென்ற பதிவில் இணைந்து வாழ முடியாத தம்பதியரைப் பார்த்தோம்.
இந்தப் பதிவில் என் நண்பனின் திருமணத்தில் என்ன நடந்தது எனப் பார்ப்போம்.
என் நண்பனின் திருமணம். அப்போது தாலி கட்டுவதற்கு முன்பு மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பினார்கள். அதன்படி மண்டபத்தில் எல்லோரிடமும் ஆசி பெறப்பட்டது. பிறகு மணமேடைக்கு வந்து தாம்பூலத் தட்டைப் பார்த்தபோது, ஐயர் உட்பட சுற்றி நின்றவர்கள் அதிர்ந்து போனார்கள். ஆமாம்... திருமாங்கல்யத்தைக் காணவில்லை!
ஆசிர்வாதம் செய்த எவரோ ஒருவர் மாங்கல்யத்தைக் களவாடிவிட்டார்.
வேறு வழியே இல்லை. அவசர அவசரமாக விரலிமஞ்சள் வைத்து மாங்கல்யம் தயார் செய்து தாலி கட்டினார் நண்பர்,
ஒருமாதம் கழித்து என்னைப் பார்த்தவர் “ ஏன் இப்படி நடந்தது? இது ஏதாவது அபசகுனமா?’’ என்றும் கேட்டார்.
இங்கே ஒரு விஷயம்... நண்பருடையது காதல் திருமணம். எனவே, ஜாதகம் ஏதும் பார்க்கப்படவில்லை.
நான் அவர் ஜாதகத்தையும் அவர் மனைவியின் ஜாதகத்தையும் பார்த்துவிட்டு ஒரே வரியில் சொன்னேன்... “ஒன்றும் பயப்பட வேண்டாம். இது “புனர்பூ தோஷம்” மட்டுமே. மாங்கல்ய தோஷம் ஏதும் இல்லை என்று சொல்லி, தைரியம் தந்து அனுப்பினேன்.
அவருக்கு திருமணம் முடிந்து தற்போது 27 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றளவும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
அது என்ன புனர்பூ தோஷம் என்று கேட்கிறீர்களா?
ஜாதகத்தில் “சனிபகவானும் சந்திர பகவானும் சேர்ந்திருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும், அவர் வீட்டில் இவரும், இவர் வீட்டில் அவர் இருந்தாலும் அதாவது பரிவர்த்தனை அடைந்திருந்தாலும், இந்த புனர்பூ தோஷம் வேலை செய்யும்.
அப்படி என்னென்ன செய்யும்?
இந்த தோஷம் திருமணத்தின்போது மட்டுமே வேலை செய்யும், அதாவது திருமணத்தின் போது சண்டை சச்சரவுகள் , மண்டபம் மாறுதல் என பல குழப்பங்களைத் தந்து திருமணமே நின்று போகும் அளவுக்கு பாதிப்பைத் தந்து மன உளைச்சலைத் தரும்.
உண்மையில் என் நண்பரின் மனைவிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. ஆனாலும் அது தன் தோஷ வீரியத்தைக் காட்டியதால்தான் மாங்கல்யம் களவு போனது.
அவருக்கு 7 ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய் அமர்ந்து தோஷத்தைத் தந்தது. களவு போனதால் தோஷம் நீங்கியது.
களவு போகாவிட்டால் என்ன நடந்திருக்கும்?
இங்கே சில விளக்கங்கள் சொல்லியாகவேண்டும்.
சூரியன், செவ்வாய் சேர்க்கை என்பது 12 ராசிகளில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் வேலை செய்யும்.
நான் பெரிய விளக்கம் தந்து உங்களை குழப்பப்போவதில்லை,
1) இப்படி மாங்கல்யம் களவு போவது
2) மாங்கல்யத்தில் பின்னம் ஏற்பட்டு அதை சரி செய்து மீண்டும் அணிவது( எப்படியும் ஒருமுறையாவது கழட்டி மாட்டவேண்டி வரும்)
3) வேதனையோடு சொல்கிறேன், குறைந்தபட்சம் அடகு வைக்கப்படும் சூழல் உண்டாகும்.
4) திருடர்களிடம் பறிகொடுப்பது
5) ஏதோ ஒரு சூழ்நிலையில் வேண்டுதலுக்காக ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுப்பது.
இப்படி பல வகையிலும் தோஷம் தன் வீரியத்தைக்காட்டும்.
ஆனால் ஒருபோதும் யாருடைய விதியையும் முடித்துவிடாது.
விதி முடியாமல் யாரும் இறைவனை அடைய முடியாது.
எனவே மாங்கல்யதோஷம் என பெரிய பரிகாரங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதே என் கருத்து.
அப்படியானால் என்ன மாதிரியான பரிகாரங்கள் செய்யலாம்?
திருமணம் முடிந்து 3 வது மாதத்தில் தாலி கோர்த்தல் என்ற வைபவம் நடக்கும் அல்லவா! அப்போது அந்த திருமாங்கல்யத்தை ஏதாவது அம்மன் ஆலயத்தில் செலுத்திவிட்டு, புதிதாக மாங்கல்யம் செய்து அணிந்து கொள்ளலாம்.
ஏழைப்பெண்ணுக்கு அவர்களின் திருமணத்திற்கு உங்கள் செலவில் மாங்கல்யம் செய்து தாருங்கள், மிகப்பெரிய புண்ணியம் உண்டாகும்,
தர்மம் செய்வது (யாருக்கும் தெரியாமல்) எப்படிப்பட்ட தோஷத்தையும் இல்லாமல் செய்துவிடும்.
இனி அடுத்த பதிவுகளில் இன்னும் பல விஷயங்களைப் பார்ப்போம்.
இந்த புனர்பூ தோஷம் வேறு ஏதாவது பாதிப்பைத் தருமா?
அதையும் பார்க்கலாம்.
- தெளிவோம்
இதன் அடுத்த அத்தியாயம் வரும் 5.3.18 திங்கட்கிழமை அன்று வெளியாகும்.