Last Updated : 28 Dec, 2017 12:46 PM

 

Published : 28 Dec 2017 12:46 PM
Last Updated : 28 Dec 2017 12:46 PM

குருவே... யோகி ராமா..! 27: திருப்புகழ் தந்த பூமி!

பகவான் யோகி ராம்சுரத்குமாரின் அற்புதங்கள்

தெய்வம் மனித ரூபம் என்பார்கள். ‘தெய்வம் மனுஷ்ய ரூபேணே’ என்கிறது சம்ஸ்கிருதம். நம் வாழ்க்கையைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், தெய்வத்துக்கு நிகரான மனிதர்களை நாம் பார்த்திருப்பதையும் பழகியிருப்பதையும் உணரமுடியும். புரிந்து கொள்ளலாம். ஆனால் என்ன... அவர்களை நாம் மிகத்தாமதமாகவே உணர்ந்து கொள்கிறோம்.

மகான்களையும் அப்படித்தான் உணர்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய உலகமும் நவீன ஆன்மிகத் தேடலும் யார்யாரையோ விளம்பரப்படுத்தீக் கொள்கிறது. அந்த விளம்பரத்தில் மயங்கி, அதற்குக் கட்டுண்டு போகிறோம் நம்மில் பலரும்!

’இதைக் கொடு, அதைச் செய்றேன்’ என்று கடவுளிடம் வேண்டுகிற நம்மைப் போலான சாதாரணரில்லை மகான் என்பவர். நாம் எதையும் கொடுக்கத் தேவையில்லை. நமக்கு எது வேண்டும் என்றும் சொல்லத் தேவையில்லை. நாம் சொல்லாமலே நமக்கான தேவைகளை உணருபவரே மகான் என்று போற்றப்படுகிறார்.

‘எனக்கு இது வேண்டும்’ என்று மகான்களும் கடவுளரிடம் கேட்பதில்லை. அதிகபட்சமாக அல்லது குறைந்தபட்சமாக அவர்கள் கடவுளிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அது தன்னை அறிதல். அதாவது ‘நான் யார்’ என்று நான் அறிய வேண்டும்.

இந்த பூமியில் எதற்காக வந்திருக்கிறேன், வந்ததன் நோக்கம் என்ன, வந்து என்னவெல்லாம் செய்யவேண்டும். யாருக்காகவெல்லாம் செய்யவேண்டும் என்பதே மகான்களின் முதல் முழுத் தேடலாக இருந்திருக்கிறது.

வீட்டில் அம்மாவோ மனைவியோ, தினமும் தவறாமல் ஒரு கேள்வியைக் கேட்பார்கள். ‘இன்னிக்கி என்ன சமைக்கட்டும்’ என்று! கணவர் சொல்வதையும் மகன் சொல்வதையும் மகள் சொல்வதையுமாக மணக்க மணக்க, சுடச்சுட இறக்கி வைப்பார்கள். எல்லோரும் உட்கார்ந்து கொண்டு, ருசிக்க ருசிக்கச் சாப்பிடுவோம். குடும்பச் சூழலில், இது குதூகல தருணம்!

‘இன்னிக்கி என்ன சமையல்’ என்று நிறைய பேர் கேட்பார்கள். அதற்கும் அம்மாவிடம் இருந்தும் மனைவியிடம் இருந்தும் பதில் வரும். ‘பையன் இதைச் சொல்லிருக்கான்’, ‘பொண்ணு இதைச் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சுன்னு சொன்னா. அதை பண்ணப் போறேன்’ என்றெல்லாம் விதம்விதமான பதில்கள் வரும்.

ஆனால்... உனக்கு என்ன பிடிக்கும். அதைச் சமைச்சு சாப்பிடு. நாங்களும் சாப்பிடுறோம்’ என்று அம்மாவிடம் மனைவியிடம் சொல்லியிருக்கிறோமா என்றைக்கேனும். அல்லது அவர்களே கூட, ‘எனக்கு இது பிடிக்கும். அதனாலதான் இதைச் சமைச்சேன்’ என்று சொல்லியிருக்கிறார்களா.

மகான்கள், நமக்கு என்னென்ன தேவையோ அதை தன் சூட்சும சக்தியால் நாம் சொல்லாமலேயே உணர்ந்து, சமைக்கக் கூடியவர்கள். பரிமாறி நம்மை சந்தோஷப்படுத்தக் கூடியவர்கள். சத்தான கருத்துகளைத் தந்து, நம்மைப் பக்குவப்படுத்தி பலப்படுத்துகிறார்கள்.

அருணகிரி எனும் இளைஞனுக்கு , எப்போது என்ன கொடுக்கவேண்டும், என்று கடவுளுக்குத் தெரியும். அதன்படி அருணகிரியை முருகக் கடவுளே ஆட்கொண்டருளினார். அருணகிரிநாதர் என தெய்வ பக்தியும் தீந்தமிழ்ப் புலமையும் கொண்டு அறியப்பட்டார்.

சொல்லப்போனால். அருணகிரியை... ‘அருணகிரி நாதா’ என்று முதன்முதலில் அழைத்தவர் முருகப்பெருமான் என்கிறது புராணம். அவரை அழைத்து, தன் திருக்கரத்தில் வைத்திருந்த வேல் மூலம்,, ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து அருட்கடாட்சம் தந்த தருணம், அருணை மலையே குளிர்ந்து போனது. அந்தக் குளிர்ச்சி, காற்றில் கலந்தது. மலையிலிருந்து தவழ்ந்த காற்று, கோயிலையும் கோபுரங்களையும் தெருக்களையும் ஊரையுமாகத் தழுவியது.

சித்தம் கலங்கிப் போனார் அருணகிரிநாதர். சித்தபுருஷரானார். ஆனந்த மயக்கத்தில் இருந்து மீளவே முடியாமல் தவித்தார். சிரித்தார். அழுதார். ஆச்சரியப்பட்டார். வெறித்துப் பார்த்தார். எதையும் பாராது கண்மூடிக் கிடந்தார்.

‘அட... கடவுள் சுகம். கடவுள் தேடல் சுகம். கடவுளின் வாசனை சுகம். உலகில், காசை விட, பெண்ணைவிட, பதவியை விட, மிகப்பெரிய சுகம், கடவுள். இதுதான் கடவுள் சக்தியா. இதுதான் கடவுளின் கருணையா. இதுதான் இறைவனின் பேரருளா. இதுதான் வரமா. இதுதான் பிறப்பின் ரகசியமா. இதுதான் இறப்புக்கு முந்தைய நிலையா. இதுதான் இறப்பே இல்லாத நிலையா. உள்ளுக்குள் கேட்டுக் கேட்டுத் தெளிந்தார் அருணகிரி நாதர்.

இறைவன் குறித்து எத்தனையோ அடியவர்கள் பாடியிருக்கிறார்கள். போற்றியிருக்கிறார்கள். புகழ்ந்திருக்கிறார்கள். உருகி உருகி, கடவுளைக் கொண்டாடியிருக்கிறார்கள். தன்னைக் குறித்துப் பாடுவதற்கு, இறைவனே தேர்ந்தெடுத்தது... அருணகிரி நாதரின் விஷயத்தில் நிகழ்ந்திருக்கிற அற்புதம். இது திருவண்ணாமலை புனித பூமியின் மகத்துவம்!

அருணகிரிநாதரை, முருகக் கடவுள் ஆட்கொண்டருளினார். பிறகு, தன் புலமையால், பக்தியால், பாடல்களால், அந்த முருகக் கடவுளே கிறங்கிப் போனான். அவனுடைய பாடல்களில் வந்து அமர்ந்து கொண்டான். சக்தி கூட்டினான். சாந்நித்தியம் பெருக்கினான். அவை... திருப்புகழ் என்று இன்றைக்கும் நம் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘இப்பிறவியில் நீ செய்ய வேண்டிய வேலை நிறையவே இருக்கின்றன. அதை இன்னும் தொடங்கவே இல்லை. இனி அந்தப் பணிகளை செவ்வனே செய்வாயாக!’ என அருணகிரிநாதருக்கு அருளினார் அழகன் முருகன்.

வள்ளிதெய்வானை சமேதராகக் காட்சி தந்த முருகப்பெருமானையும் அவரின் அருட்சொல்லையும் கேட்டு அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார் அருணகிரிநாதர்.

‘இந்தப் பிறவிக்கான வேலையை இன்னும் தொடரவே இல்லையாமே நான். அதென்ன வேலை. அந்தப் பணிகளை இனி செய்வாய் என்கிறாரே இறைவன். அதென்ன பணி’ என்று யோசித்தார்.

அருணகிரிநாதரின் அருட்பணிகள் சொல்லச் சொல்ல தித்திக்கும். அந்தத் திருப்புகழைப் பாடினால் கிடைக்கும் இனிமையும் வளமையும் அவரின் சரிதம் கேட்டாலே கிடைக்கப் பெறுவோம்!

‘ஆமாம்... இந்தப் பிறவிக்கான வேலை என்ன?’ - யோசித்தார் அருணகிரிநாதர்.

‘இப்போது நீ செய்து கொண்டிருப்பது உன் வேலை அல்ல. நீ செய்ய வேண்டிய வேலையை இன்னும் தொடங்கவே இல்லை. உன் வேலை அல்ல இது’ என்று சுவாமி விவேகானந்தரின் குரலாக தனக்குள் கேட்டுத் துளைத்தெடுத்ததை ஒருகணம் யோசித்துப் பார்த்தார் ராம்சுரத்குன்வர்.

திருவண்ணாமலை எனும் புண்ணிய பூமிக்குள் இறங்கி நடக்க நடக்க, ஏதோவொரு மாறுதலை உணர்ந்தார் ராம்சுரத் குன்வர்.

இனிய பக்தர்களே! அன்பு நண்பர்களே! திருவண்ணாமலைக்குப் போயிருக்கிறீர்களா. அங்கே, காலாறக் கொஞ்சம் நடந்திருக்கிறீர்களா. கிரிவலம் சென்றிருக்கிறீர்களா. கோயில் நடை பிராகாரத்தை வலம் வந்திருக்கிறீர்களா. கோயிலின் மண்டபங்களைக் கண்களாலும் தூண்களை கைகளாலும் ஸ்பரிசித்திருக்கிறீர்களா. கோயிலுக்குள் இருக்கிற அந்த மங்கையர்க்கரசியார் மண்டபத்தில் சிறிது நேரமேனும் அமர்ந்திருக்கிறீர்களா.

எந்தரோ மஹானுபாவுலு. அந்தரிகி வந்தனமு!

இந்த உலகில் எத்தனையோ மகான்கள். அத்தனை பேருக்கும் நமஸ்காரம்!

இந்த இடங்களிலெல்லாம் எண்ணற்ற மகான்கள் நின்றிருந்தார்கள். நடந்திருக்கிறார்கள். அமர்ந்திருக்கிறார்கள். ஸ்பரிசித்திருக்கிறார்கள். பார்த்திருக்கிறார்கள். எத்தனையோ மகான்கள். எண்ணற்ற மகான்கள். திருவண்ணாமலை பூமியின் பிரமிக்கச் செய்யும் அதிசயம் இது!

எந்தரோ மஹானுபாவுலு. அந்தரிகி வந்தனமு!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெய குரு ராயா!

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x