Published : 20 Jan 2024 06:15 AM
Last Updated : 20 Jan 2024 06:15 AM

ஆற்றுத் திருவிழாவில் கிராம மக்கள் கோலாகலம் @ கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவுக்காக ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் செய்ய திரண்டிருந்த மக்கள் கூட்டம்.

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி/புதுச்சேரி: 'தை நீராடல்' என்பது பரிபாடல் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் தமிழகத்தின் திருவிழாக்களில் ஒன்றாகும். தைத் திருநாளின் 5-ம் நாள் விழாவாக ஆற்றுத் திருவிழா தொன்றுதொட்டு நடந்து வருகிறது.

கடலூர்: கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர் பகுதியில் தென்பெண்ணையாற்று கரையோரப் பகுதிகளில் ஆற்றுத் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதேபோல் கோமுகி, கெடிலம் ஆற்றுப் பகுதிகளிலும் ஆற்றுத் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், ஆனைக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து பிற்பகல் வாக்கில் 100-க்கும்மேற்பட்டஉற்சவ மூர்த்திகள்சிலைகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டன.

பேரங்கியூரில் ரங்கராட்டினத்தில் விளையாடும் சிறுவர்கள்

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், ஏரிக்கரை மூலை ரெட்டை விநாயகர், அரகண்டநல்லூர் அதுல்ய நாதேஸ்வரர், நாரையூர் வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் இருந்து ஊர்வலமாக வந்த உற்சவ மூர்த்திகள் நீராடி மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஓரேநேரத்தில் வரதராஜப் பெருமாளும்,வீரட்டானேஸ்வரரும் இங்கு நீராடுவது சிறப்பு.

இதேபோல் பண்ருட்டி பகுதியில் பண்ருட்டி சோமநாதர் மாளிகம்பட்டு செல்லமுத்து மாரியம்மன், திருவதிகை மாரியம்மன், விழமங்கலம் மாரியம்மன், படைவீட்டம்மன் கோயில் உள்ளிட்ட 40 கிராமங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் பெண்ணையாற்றில் நீராடிச் சென்றதை மக்கள் வழிபட்டனர்.

புதுச்சேரி: இதேபோல் புதுச்சேரி பாகூர்அடுத்த சோரியாங்குப்பம் பகுதியில்ஆற்றுத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சூரிய உதயத்துக்கு முன்பு பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றுப் பகுதிக்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர்.

இந்த விழாவில் பாகூர் மூலநாதர், லட்சுமண நாராயண பெருமாள், பூலோக மாரியம்மன், குருவிநத்தம் கிருஷ்ணன், பள்ளிப்பட்டு ஆனந்த முத்துமாரியம்மன், திருப்பனாம்பாக்கம் முத்துமாரியம்மன், சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீர் அம்மன், அரங்கனூர் எரமுடி அய்யனாரப்பன் உள்ளிட்ட 20 கோயில்களின் உற்சவ மூர்த்திக ளுக்கு தென்பெண்ணையாற்றில் தீர்த்த வாரி நடைபெற்று ஆற்றங்கரையில் வரிசையாக எழுந்தருளினர்.

கடலூர் தென்பெண்ணை யாற்றில் நடைபெற்ற ஆற்றுத்திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் படம்: எம்.சாம்ராஜ்

இதில் புதுச்சேரி, தமிழகபகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பொதுமக்கள் ஆற்றில் நீராடி தாங்கள் கொண்டு வந்தஉணவினை உண்டு மகிழ்ந்தனர். கரையாம்புத்தூரிலும் தென்பெண்ணையாற்று கரையில் ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி ஆற்றங்கரை பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. புதுச்சேரி தெற்கு எஸ்பி வீரவல்லபன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வீரர்களும், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x