

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆண்டு ஆராதனை விழா வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்குத் தொடங்குகிறது.
இதையொட்டி, வரும் 26-ம் தேதி மாலை 5 மணிக்கு தேசூர் செல்வரத்தினம் குழுவினரின் மங்கல இசை நடைபெறும். தொடர்ந்து நடைபெறும் தொடக்க விழாவுக்கு தியாகப் பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்கிறார்.
அமைப்பின் செயலாளர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்கிறார். துக்ளக்ஆசிரியர் குருமூர்த்தி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்துப் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்கிறார். சபா செயலாளர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் நன்றி கூறுகிறார்.
அன்று இரவும், வரும் 27, 28, 29-ம் தேதிகளிலும் பல்வேறு கலைஞர்களின் பாட்டு, வீணை, நாகசுரம், தவில் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8.30 மணிக்கு மங்கல இசை நடைபெறும். 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி,தியாகராஜ சுவாமிக்கு இசையஞ்சலி செலுத்துகின்றனர்.
முன்னதாக, தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து அவரதுசிலை விழா பந்தலுக்கு ஊர்வலமாகக் கொண்டுவரப்படுகிறது. அன்று இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சபா நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இசை விழா தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது.