

ராமேசுவரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்ட சீக்கியர்கள் ராமேசுவரத்தில் மகர சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாடி, சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக்கை நினைவு கூர்ந்தனர்.
குருநானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் மற்றும் 10 சீக்கிய குருக்களில் முதல் குரு ஆவார். இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காகவே தனது வாழ் நாளை அர்ப்பணித்தவர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி ஆசியாவின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று அன்பைப் போதித்தார். 1511-ம் ஆண்டில் குருநானக் இலங்கை செல்லும் வழியில் ராமேசுவரத்தில் தங்கியிருந்தார். இங்கு குருநானக் தங்கியிருந்ததை நினைவு கூரும் வகையில் ராமேசுவரத்தில் 1885-ம் ஆண்டில் குருத்வாரா நிறுவப்பட்டது.
அறுவடை திருவிழாவான மகர சங்கராந்தியை கொண்டாடுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சீக்கியர்கள் ராமேசுவரம் குருத்வாராவில் நேற்று திரண்டனர். ராமேசுவரம் குருத்வாராவிலிருந்து நேற்று காலை 10 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குடும்பத்தினருடன் ஊர்வலமாகப் புறப்பட்டனர். இந்த ஊர்வலத்துக்கு `பாஞ்ச் பியாரே' என சொல்லப்படும் ஐவர் கொண்ட குழு கையில் வாளுடன் தலைமை தாங்கி வழி நடத்தியது.
அப்போது நகர் கீர்த்தன் குழுவினர் சீக்கிய சமயப் பாடல்களைப் பாடினர். அவர்களுடன் சேர்ந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டோரும் பாடல்களைப் பாடினர். ராமேசுவரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மீண்டும் குருத்வாராவை வந்தடைந்தது. பின்னர் நேற்றிரவு மகர சங்கராந்தியின் முக்கிய அம்சமான சொக்கப்பனைபோல் தீ மூட்டி, அதைச் சுற்றி `பாங்க்ரா' நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குருத்வாரா சமூக சமையலறையில் தயார் செய்யப்பட்ட ரொட்டி, பருப்பு, இனிப்பிலான ‘லங்கார்’ உணவு வழங்கப்பட்டது.
இது குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறியதாவது: ராமேசுவரத்தில் தங்கியிருந்த சீக்கிய மதத்தின் முதன்மை குருவான குருநானக்கை நினைவுகூரும் வகையில் இந்நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துகிறோம். தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் சீக்கியர்கள், வியாபாரம் செய்வோர் ராமேசுவரம் குருத்வாராவில் கூடி பஞ்சாபிகளின் அறுவடை திருநாளான மகர சங்கராந்தியை கொண்டாடுகிறோம். இதன் மூலம் தமிழகம் முழுவதும் இருக்கும் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது என்று கூறினர்.