ஆண்டாள் திருப்பாவை 27 | கருணையுடன் ஈர்ப்பவன் கோவிந்தன்..!

படம்: ஃபேஸ்புக்
படம்: ஃபேஸ்புக்
Updated on
1 min read

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே
செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பால்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

பகைவரை வென்று சீரும் சிறப்புமாக விளங்கும் கோவிந்தா! உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, அணிகலன்கள் முதலானவற்றை சன்மானமாக கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும்.

கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களைத் தருவாயாக! நோன்பை நிறைவு செய்யும் வகையில் நாங்கள் அனைவரும் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம். அதை நீ கண்டு மனம் குளிர வேண்டும்' என்று கோகுலத்தைச் சேர்ந்த பெண்கள் கண்ணனை நோக்கிப் பாடுகின்றனர்.

கோயில்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் கூடார வல்லி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினத்தில் நெய்யுடன் சேர்ந்த அக்கார அடிசில் என்ற சர்க்கரைப் பொங்கல் போன்ற உணவு பிரசித்தம். விரதத்தின் தொடக்கத்தில் பால், நெய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தவர்கள் கண்ணனைக் கண்டதும், அவற்றை உண்கிறார்கள்.

இங்கு பால்சோறு என்பது பாற்கடலைக் குறிக்கும். கண்ணன் தரிசனம் கிடைத்ததும், அவர்கள் பாற்கடலில் இருப்பது போல உணர்கின்றனர். அந்த சுகத்தை தங்களுக்கு நிரந்தரமாகத் தருமாறு கண்ணனை வேண்டுகின்றனர். தம்முடன் கூடாதவர்களையும் தம்மை நாடி வராதவர்களையும் தனது அன்பால் ஈர்த்து தம்மை சரணடையச் செய்பவன் கோவிந்தன் என்று அறியப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in