

சென்னை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு செய்தார். அனுமன் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, ஆஞ்சநேயரை வணங்கி, வழிபட்டு பிரார்த்தனை செய்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘அனுமன் ஜெயந்தி திருநாளில், தமிழகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஸ்ரீ ராமரின் தீவிர பக்தரான ஸ்ரீ ஆஞ்சநேயர் வலிமை, ஞானம், சேவை, பக்தி ஆகியவற்றின் உருவகமாக கருதப்படுகிறார்.
நமது பாரதத்தை வரும் 2047-ம் ஆண்டுக்குள் முழுமையாக வளர்ச்சியடைய செய்து, ஒரே குடும்பம்போல மகிழ்ச்சியுடன் வாழ நமக்கு ஞானம், வலிமை, உறுதியை அவர் நமக்கு அருளட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்ட செய்தியில், ‘ஸ்ரீ அனுமன் ஜெயந்தி நன்னாளில், மக்கள் அனைவரும் வாழ்வில் சகல நலமும், வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அனுமன் அருள்புரியட்டும்’ என தெரிவித்துள்ளார்.