

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
தீங்கு நினைத்தாலும் தீவினை புரிந்தாலும் அதற்கான தண்டனை நிச்சயம். கண்ணனின் மாமன் கம்சன், தனது சகோதரி தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து அன்று அஞ்சினான். உடனே தேவகி, அவளது கணவர் வசுதேவர் இருவரையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்கு எட்டாவது குழந்தையாக கண்ணன் சிறையில் அவதரித்து, கம்சனுக்குத் தெரியாமல் வசுதேவரால், ஆயர்பாடியில் யசோதைக்கு அருகில் சேர்க்கப்பட்டான். யசோதைக்குப் பிறந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு சிறை திரும்புகிறார் வசுதேவர்.
யசோதை மைந்தனாக வளர்ந்தான் கண்ணன். அதனால் தான் 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாக ஒளித்து வளர்க்கப்பட்டதாக' இப்பாசுரம் தொடங்குகிறது. கண்ணன் இருக்கும் இடம் அறிந்த கம்சன், அவனுக்கு பலவிதங்களில் இன்னல் கொடுக்கிறான். கம்சனால் அனுப்பப்பட்ட அசுரர்கள் அனைவரையும் கண்ணன் அழிக்கிறான். தனக்கு அழிவு நெருங்கிவிட்டதை கம்சன் உணர்கிறான்.
இப்படி வீரச் செயல்கள் புரிந்த கண்ணனைப் போற்றிப் புகழ்ந்து, தாங்கள் வேண்டும் வரங்களை அருளும்படி பாவை நோன்பு இருக்கும் பெண்கள் அவனை வேண்டுகின்றனர். பக்தன் பக்தி செலுத்தும்போது இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். 'எங்கே இருக்கிறான் நாராயணன்' என்று இரணியன் கேட்டதும், பிரகலாதன் 'தூண்' என்று பதிலளிக்கிறான். அந்த நேரத்தில் தூணுக்குள் சென்று திருமால் ஒளிந்து கொள்கிறார். இதன்மூலம் பக்தனுக்கு இறைவன் சேவகனாய் இருக்கிறான் என்பது அறியப்படுகிறது.